- ஞானசங்கந்த விநாயகர்
- தெரண்டூர்
- திருமாள் கோயில்
- சிவன் கோயில்
- விநாயகர்
- அட்டோ ஈஸ்வரன் கோயில்
- ஞானசந்த விநாயகர்
திருஞான சம்பந்த பெருமான் தேரெழுந்தூருக்கு எழுந்தருளியபோது எது திருமால் கோயில், எது சிவன் கோயில் என்று புரியாமல் திகைக்க, சாலையின் அருகே கோயில் கொண்டிருந்த சாலை விநாயகர், “அதோ ஈஸ்வரன் கோயில்” எனக் கிழக்குத் திசையை சுட்டிக் காட்டினாராம். அன்று முதல்அந்த சாலை விநாயகர் ‘ஞான சம்பந்த விநாயகர்’ ஆனார்.
கேது பகவானுக்கு தனி ஆலயம்
நவகிரகங்களில் ஒன்றான கேது பகவானுக்குத் தனி ஆலயம் திருமுருகன் பூண்டியில் உள்ளது. இங்குள்ள தலவிருட்சம் குருக்கத்தி மரம். இங்குள்ள இறைவனைக் குறித்து சுந்தரர் பத்து பதிகங்கள் பாடியுள்ளார். முருகப் பெருமான் இத்தலத்திற்கு வந்து மானசீகமாக சிவலிங்கம் அமைத்து வழிபட்டு தன் பிரமோஹத்தி தோஷம் நீங்கப் பெற்றார்.
தஞ்சை பெரிய கோயிலுக்கும் முந்தியது
கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகே ‘குலநாதீஸ்வரர்’ கோயில் உள்ளது. இக்கோயிலில் நர்த்தனமாடும் நடராஜ மூர்த்தியை தரிசிக்கலாம். சிவகாமி அம்மாள், மாணிக்கவாசகர், காரைக்காலம்மையார் மூவரையும், அவர்கள் நர்த்தனமாடும் இறைவனைத் தரிசனம் செய்தபடி இருப்பதால் அவர்களின் முதுகுப்புற தரிசனம் மட்டுமே நமக்குக் கிடைக்கும். இக்குலநாதீஸ்வரர் கோயிலானது ‘தஞ்சை பெருவுடையார்’ கோயிலை கட்டுவதற்கு முன்பாகவே ராஜராஜசோழ அரசனால் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
புளிப்பில்லா பிரசாதங்கள்
விருகம்பாக்கம் ஆற்காடு ரோட்டில் அமைந்திருக்கும் சந்தோஷி மாதா கோயிலில் வெள்ளைநிறப் பளிங்குக் கல்லால் அம்மனின் சிலை வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஆவணி மாத பௌர்ணமி நாளன்றும், விநாயகர் சதுர்த்தியன்றும் இங்கு சிறப்பாக திருவிழா நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமைகளிலும், பவுர்ணமி தினங்களிலும் அன்னையை நினைத்து பயபக்தியுடன் விரதமிருப்பது சகோதர யோகம் அளிக்கும். பெண்கள் இவ்விரதத்தை மேற்கொள்வ தால் திருமண யோகம் முதலான பலன்களை அடையலாம். ஆதிபராசக்தியின் அம்சமான இத்தேவியை நினைத்து வெள்ளிக்கிழமைகளில் விரதமிருக்க நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை. இந்த அம்மனுக்கு புளிப்புச் சுவை இல்லாமலேயே பட்சணங்கள் செய்யப்படுகின்றன.
கந்தசஷ்டியில் ஐந்து அலங்காரம் காணும் முருகன்
திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் – செங்கோட்டை வழியில் 4 கி.மீ. தொலைவில் உள்ளது இலஞ்சி. வரதராஜகுமாரன் எனும் திருப்பெயர் கொண்டு இங்கு அருளாட்சி புரிந்துவரும் முருகப் பெருமான் மூன்று முனிவர்களுக்கு அருள்பாலித்திருக்கிறார். அதன் அடிப்படையில் ஐப்பசி மாதம் கந்தசஷ்டி விழாவின்போது முருகப்பெருமான் ஐந்து அலங்காரங்களில் எழிலுடன் காணப் பெறுகிறார். முதல்நாள் படைக்கும் தொழில்புரியும் பிரம்மனாக, இரண்டாம் நாள் காக்கும் தொழில்புரியும் விஷ்ணுவாக, மூன்றாம் நாளில் அழித்தல் தொழில்புரியும் சிவனாக, நான்காம் நாள் மறைத்தல் தொழில்புரியும் மகேஸ்வரனாக, ஐந்தாம் நாள் அருள்புரியும் சதாசிவனாக அலங்கரிக்கப்படுகிறார்.
பெருமாளின் அபூர்வ திருக்கோலம்
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ளது வீரநரசிம்மர் திருக்கோயில். இக்கோயிலில் சக்கரத்தாழ்வார் சந்நதி உள்ளது. வலப்புறம் யானையைத் தடவிக் கொடுப்பது போலவும், இடப்புறம் தஞ்சகாசுரன் என்ற அரக்கன் பெருமாளை வணங்கிய நிலையிலும் அது அமைந்துள்ளது. மேலும் அவருக்குப் பின்புறம் நரசிம்மர் யோகபீடத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் உள்ளார். அவருக்கு இருபுறங்களிலும் இரணியன், பிரகலாதன் ஆகியோர் உள்ளனர்.
மூன்று தீர்த்தவாரிகள்
திருவெண்காட்டில் மூன்று மூர்த்திகள், மூன்று குளங்கள் மூன்று தலமரங்கள் இருப்பதைப் போலவே இங்கு விழாவில் மூன்று முறை தீர்த்தம் அளித்தலும் நடைபெறுகிறது. மாசிப் பெருவிழாவை இந்திர விழா என்று அழைக்கின்றனர். மாசிமக பௌர்ணமி நாளில் காவிரியில் தீர்த்தம் அளித்தலும், பத்தாம் நாள் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி மூன்று குளங்களிலும் தீர்த்தம் அளித்தலும், சஷ்டியும் விசாகமும் கூடிய நாளில் மணிகர்ணிகா நதியில் தீர்த்தம் அளித்தலுமாக மூன்று முறை தீர்த்தவாரி நடைபெறுகிறது.
ஜி.ராகவேந்திரன்
The post ஞானசம்பந்த விநாயகர் appeared first on Dinakaran.