- தே.தொ.கவும்
- திருச்சி
- ராஜபாளையம்
- திருச்சி NIT
- பக்தியராஜ்
- கவிதா
- ஒய்யாம்புலி தெரு, ராஜபாளையம், விருதுநகர் மாவட்டம்
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் வீட்டு வேலை செய்யும் பெண்ணின் மகளான மாற்றுத்திறனாளி மாணவி ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்று திருச்சி என்ஐடியில் உற்பத்தி பொறியியல் படிக்க தேர்வாகியுள்ளார். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஒய்யம்புலி தெருவை சேர்ந்த பாக்கியராஜ் – கவிதா தம்பதியின் மகள் ஆர்த்தி. மாற்றுத்திறனாளியான ஆர்த்தி சேத்தூர் சேவுகபாண்டியன் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் பயின்று அங்குள்ள ஆசிரியர்களின் வழிகாட்டுதலில் ஜேஇஇ தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார்.
தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தில் சென்னையில் பயிற்சி பெற்று ஜேஇஇ தேர்வெழுதிய மாணவி ஆர்த்தி 58.52 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார். தற்போது அவர் வெற்றி பெற்று திருச்சி என்ஐடியில் உற்பத்தி பொறியியல் படிக்க தேர்வாகியுள்ளார். தந்தையின் ஆதரவு பெரிதளவு இல்லையென்றாலும், வீட்டு வேலை செய்தும் ஹோம் செவிலியராக பணியாற்றியும் மகளின் கனவை நிறைவேற்றியுள்ள தாய்க்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அதே வேளையில் குடும்ப சூழலையும், தாயின் ஆதரவையும் கருத்தில் கொண்டு மாற்றுத்திறனாளி மாணவி ஆர்த்தி ஜேஇஇ தேர்வில் சாதித்து காட்டியுள்ளார்.
மாணவி ஆர்த்தி கூறுகையில், ‘‘நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றதே எனது வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது. இதேபோல் மாணவிகளும் பல்வேறு நுழைவுத்தேர்வுகளில் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும். மாற்றுத்திறனாளியாக பல்வேறு கஷ்டங்களை சந்தித்த எனக்கு இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியளித்துள்ளது. இதோடு எனது இலக்கை நிறுத்தி கொள்ளப் போவதில்லை, யுபிஎஸ்சி தேர்வு எழுதி கலெக்டராக வேண்டும் என்பதே எனது ஆசை’’ என்றார்.
ஆர்த்தியின் தாய் கவிதா கூறுகையில், ‘‘ஆர்த்தியின் தாத்தா சிறு வயது முதல் அவரை பராமரித்து ஊக்கமளித்து வந்தார். அவரது ஆசையை ஆர்த்தி நிறைவேற்றியுள்ளார். மாற்றுத்திறனாளி என்ற குறைபாடு அவருக்குத் தெரியாத அளவிற்கு கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டடேன். நான் பட்ட கஷ்டத்திற்கு எனது மகள் ஆர்த்தி பெற்றுள்ள வெற்றி மிகுந்த பெரும் மகிழ்ச்சியை தருகிறது’’ என்றார்.
The post நான் முதல்வன் திட்டத்தில் பயின்று ஜேஇஇ தேர்வில் வெற்றி வீட்டு வேலை செய்யும் பெண்ணின் மகளுக்கு திருச்சி என்ஐடியில் சீட்: கலெக்டராவதே லட்சியம் என உருக்கம் appeared first on Dinakaran.