×

அயோத்திக்கு அழைத்து செல்வதாக 106 பேரிடம் ரூ.31 லட்சம் மோசடி: மதுரை ஏர்போர்ட்டுக்கு வந்தவர்கள் ஏமாற்றம்

அவனியாபுரம்: மதுரையில் இருந்து விமானத்தில் அயோத்திக்கு புனித பயணம் அழைத்து செல்வதாக கூறி, தனியார் டிராவல்ஸ் நிறுவனம் 106 பேரிடம் பணம் வசூலித்துள்ளது. ஆனால் பயணத்திற்கு ஏற்பாடு செய்யாததால், விமான நிலையம் வந்த அவர்கள் தகராறு செய்தனர். மதுரையில் இருந்து டெல்லி வழியாக தனியார் விமானத்தில் அயோத்திக்கு ஆன்மீகச் சுற்றுலா அழைத்துச்செல்வதாக, சேலத்தை சேர்ந்த தனியார் டிராவல்ஸ் நிறுவனம் அறிவித்தது.

இதன்படி மதுரை விமானநிலையத்தில் இருந்து 106 பயணிகளையும் அழைத்துச் செல்வதாக, நபர் ஒருவருக்கு விமான கட்டணம், தங்கும் வசதி உள்ளிட்ட செலவுகள் என கூறி, தலா ரூ.29 ஆயிரம் வசூலித்தது. அந்த நிறுவனத்தினர் ஏற்பாட்டின்பேரில், அயோத்தி செல்வதற்காக 106 பயணிகளும் நேற்று காலை மதுரை விமான நிலையம் வந்தனர். அப்போது அவர்களின் பயணத்திற்கு எந்தவித ஏற்பாடுகளையும் தனியார் நிறுவனம் செய்யவில்லை என்பது தெரியவந்தது.

இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் தனியார் நிறுவன மேலாளர் ராஜா என்பவருடன் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் இந்த பிரச்னை குறித்து தனியார் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் தரப்பில் பயணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அனைவரையும் வரும் 18ம் தேதி அயோத்தி அழைத்து செல்வதாக கூறினர். இதையடுத்து பயணிகள் சமாதானம் அடைந்தனர். பின்னர் அந்த நிறுவன ஏற்பாட்டின்படி 106 பேரும் சொகுசு பேருந்தில் சேலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

The post அயோத்திக்கு அழைத்து செல்வதாக 106 பேரிடம் ரூ.31 லட்சம் மோசடி: மதுரை ஏர்போர்ட்டுக்கு வந்தவர்கள் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Ayoti ,Madurai Airport ,AVANIAPURAM ,MADURA ,Madurai ,Delhi ,
× RELATED மோடியை புகழ்ந்ததால் மனைவிக்கு முத்தலாக்