×
Saravana Stores

பெரியபாளையம் பகுதி கடைகளில் ஆய்வு; கெட்டுப்போன இறைச்சி, பிரியாணி பறிமுதல்: உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை

பெரியபாளையம்: ஆடி மாத கோயில் திருவிழாவை முன்னிட்டு பெரியபாளையம் பகுதி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, காலாவதியான 75 கிலோ இறைச்சி, 50 கிலோ பிரியாணி மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் புகழ்பெற்ற பவானியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் தமிழக மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தெலுங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் இருந்தும் சனி, ஞாயிற்றுக்கிழமை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இவ்வாறு, வரும் பக்தர்கள் அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இக்கோயிலில் ஆடி மாதம் திருவிழா வரும் 17ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 14 வார காலம் விமர்சையாக நடைபெறவுள்ளது. இவ்விழாவினை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் இருந்து பெரியபாளையம் கோயிலுக்கு வரும் பொதுமக்களின் நலனை கருதி, திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி சதீஷ்குமார் உத்தரவின்பேரில், பெரியபாளையம் பஜார் வீதியில் உள்ள ஓட்டல்கள், பேக்கரிகள், கடைகள், பாஸ்ட் புட் கடைகள், தள்ளுவண்டி கடைகள், சாலையோர உணவு விடுதிகள் மற்றும் பவானியம்மன் கோயில் சுற்றி அமைந்துள்ள உணவகங்கள், குளிர்பான கடைகளை போலீஸ் பாதுகாப்புடன் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, எல்லாபுரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அதிகாரி கார்மேகம் ஆய்வு மேற்கொண்டபோது, பல்வேறு கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த கெட்டுப்போன சிக்கன் பிரியாணி, பீப் பிரியாணிகளில் அளவுக்கு அதிகமான அளவில் உடலுக்கு கேடு விளைவிக்கும் அனுமதி அளிக்கப்படாத வண்ணம் சேர்க்கப்பட்டிருந்தது. இதேபோல், பாஸ்ட் புட் கடையிலும் வறுக்கப்பட்ட கோழி இறைச்சிகளிலும் அதிகளவில் வண்ணம் சேர்க்கப்பட்டிருந்ததை கண்டறிந்த நிலையில், சுமார் 50 கிலோ கோழி இறைச்சி, 25 கிலோ மாட்டு இறைச்சி உள்ளிட்டவைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

மேலும், 3 கடைகளில் தடை செய்யப்பட்ட 10 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பிளாஸ்டிக் பைகள் மறைத்து பயன்படுத்தியதால் தலா ரூ2 ஆயிரம் வீதம் என மொத்தம் ரூ6 ஆயிரம் அபராதம் தொகையை வசூல் செய்தனர். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி திடீர் ஆய்வு செய்த சம்பவம் பெரியபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post பெரியபாளையம் பகுதி கடைகளில் ஆய்வு; கெட்டுப்போன இறைச்சி, பிரியாணி பறிமுதல்: உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Periyapalayam ,safety ,Food Safety Department ,Aadi month temple festival ,Ellapuram Union ,Dinakaran ,
× RELATED புகையிலை பொருட்கள் விற்ற 4 கடைகளுக்கு...