* அருணாச்சல் துணை முதல்வர், பிரிஜ்பூஷனின் மகன் வரை முதலீடு
* 25 கிராமங்களை சுற்றி வளைத்து வாங்கிக்குவித்தனர்
அயோத்தி: ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பின்னர் அயோத்தியை சுற்றி உள்ள நிலங்களை பிரபலங்கள் வாங்கி குவித்தது தற்போது தெரிய வந்துள்ளது. அருணாச்சல் துணை முதல்வர் முதல் பிரிஜ்பூஷனின் எம்பி மகன் வரை அங்கு பல கோடி முதலீடு செய்துள்ளனர். அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர்கோயில் கட்ட அனுமதி வழங்கி 2019ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதித்தீர்ப்பு வழங்கியது. அதுவரை அயோத்தி மற்றும் அதை சுற்றி உள்ள கிராமப்பகுதிளின் நிலங்களுக்கு எந்தவித மதிப்பும் இல்லாமல் இருந்தது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு நாடு முழுவதும் உள்ள முக்கிய பிரபலங்கள் அயோத்தி பகுதி நிலங்களை குறிவைத்து வாங்கிக்குவித்தனர். இதனால் அயோத்தி மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களில் நில மபியாக்கள் அட்டகாசம் தற்போது வரை அதிகரித்து உள்ளது. ஏழை, எளிய அப்பாவி மக்களின் நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி பிரபலங்களுக்கு பல மடங்கு அதிகமாக விற்பனை செய்வது அதிகரித்து உள்ளது. அந்த வகையில் 2019 நவம்பர் 9ம் தேதி முதல் இப்போது வரை அயோத்தி மற்றும் அதை சுற்றி உள்ள கிராமப்பகுதிகளில் உள்ள நிலங்கள் மட்டும் சுமார் 2500க்கும் மேல் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அயோத்தி நகரம் மற்றும் அதை சுற்றி உள்ள 25 கிராமங்களை வளைத்து போட்டு இந்த நிலங்கள் விற்பனை நடந்துள்ளன. உள்ளூர் மக்கள் யாரும் இந்த நிலங்களை வாங்கவில்லை. அத்தனையும் அயோத்தி மற்றும் அதைச்சுற்றி உள்ள கிராமங்களுக்கு தொடர்பு இல்லாத வெளியூர் மக்கள் தான். அதை விட முக்கியமாக வெளிமாநில பிரமுகர்களும் அயோத்தி நிலத்தை குறிவைத்து முதலீடு செய்துள்ளனர். முக்கியமான அரசியல்வாதிகள், மூத்த அதிகாரிகள், அவர்களது உறவினர்கள் என பல ஆயிரம் கோடி அயோத்தியை குறிவைத்து முதலீடு செய்துள்ளனர். இதனால் அயோத்தி, கோண்டா, பாஸ்தி உள்ளிட்ட அயோத்தி கோயிலை சுற்றி 15 கிமீ தொலைவில் உள்ள அத்தனை கிராமங்களிலும் தற்போது நில மதிப்பு 2019ல் இருந்ததை விட 30 சதவீதம் உயர்ந்துள்ளது.
பாஜவை சேர்ந்த அருணாச்சல் துணைமுதல்வர் சவ்னா மெயின் இங்கு பெரும் முதலீடு செய்துள்ளார். அவரது மகன்கள் சவுகான் செங் மெயின், ஆதித்யா மெயின் ஆகியோரது பெயரில் அயோத்தி கோயிலில் இருந்து 8 கிமீ தொலைவில் உள்ள கோண்டா மாவட்டத்திற்கு உட்பட்ட மகேஷ்பூர் பகுதியில் ரூ.3.72 கோடி மதிப்பில் 10 ஏக்கர் நிலம் வாங்கி குவித்துள்ளார். 2022 செப்டம்பர் முதல் 2023 செப்டம்பர் வரை இந்த நிலங்களுக்கான பத்திரப்பதிவு நடந்து முடிந்துள்ளன. குறிப்பாக அயோத்தியை சுற்றி ஓடும் சராயு நதி ஓரத்தில் இந்த நிலம் வாங்கப்பட்டுள்ளன. 2023 ஏப்ரல் 25ம் தேதி ஒன்றரை ஏக்கர் நிலத்தை ரூ.98 லட்சத்திற்கு விற்றுள்ளனர்.
இதுபற்றி அருணாச்சல் துணை முதல்வர் சவ்னா மெயின் மகன் ஆதித்யா மெயின் கூறுகையில்,’ அயோத்தி சுற்றுலா வளர்ச்சிக்காக நிலத்தை வாங்கினோம். அங்கு நாங்கள் ஒரு ஓட்டல் கட்ட உள்ளோம். மேலும் சில பணிகளை மேற்கொள்ள உள்ளோம்’ என்றார். இந்த வரிசையில் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் தொந்தரவு செய்த விவகாரத்தில் சிக்கிய பா.ஜ முன்னாள் எம்பி பிரிஜ்பூஷன் சிங் மகனும் தற்போதைய பா.ஜ எம்பியுமான கரண் பூஷன் அயோத்தியில் இரண்டரை ஏக்கர் நிலத்தை வாங்கி உள்ளார். கோண்டா மாவட்டம் மகேஷ்பூரில் அவர் இந்த நிலத்தை 2023 ஜனவரியில் ரூ.1.15 கோடி மதிப்பில் வாங்கி குவித்துள்ளார்.
இவர்களை விட முக்கியமாக உபி சிறப்பு காவல்படை தலைவரும், கூடுதல் டிஜிபியுமான அமிதாப் யாஷ் சார்பில் அவரது தாயார் கீதா சிங் அயோத்தியை சுற்றி உள்ள மகேஷ்பூர், துர்காகஞ்ச் பகுதியில் 24 ஏக்கர் நிலத்தை வாங்கி குவித்துள்ளார். 2022 பிப்ரவரி முதல் 2024 பிப்ரவரி வரை ரூ.4 கோடி மதிப்பில் இந்த நிலங்கள் வாங்கப்பட்டுள்ளன. இன்னும் பல பிரபலங்கள் இங்கு நிலத்தை வாங்கி குவித்துள்ளனர். அவர்கள் வாங்கியதாக காட்டப்பட்ட தொகை அரசின் மதிப்புக்கு உட்பட்டது. ஆனால் உண்மையான தொகை அதை விட பல மடங்கு அதிகமாக இருக்கும் என்கிறார்கள் அயோத்தி பகுதி மக்கள்.
இதனால் அயோத்தி மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் நிலங்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களது அத்தனை நிலங்களும் வெளியூர்காரர்கள் பிடியில் உள்ளது. மக்களவை தேர்தலில் அயோத்தி கோயில் அமைந்துள்ள பைசாபாத் தொகுதியில் பா.ஜவால் வெற்றி பெற முடியவில்லை. சமாஜ்வாடி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் வெற்றி பெற்றார். உள்ளூர் மக்களின் கோபம் அந்த அளவுக்கு உள்ளது. இதை எல்லாம் பார்க்கும் போது பைசாபாத்தில் மோடி போட்டியிட திட்டமிட்டதாகவும் மக்களின் கோபம் காரணமாகவே மீண்டும் வாரணாசியில் போட்டியிட்டதாகவும் ராகுல்காந்தி எழுப்பிய குற்றச்சாட்டில் உண்மை இருக்கும் போல் தெரிகிறது.
* நிலமாபியாக்கள் அட்டகாசம்: அகிலேஷ் குற்றச்சாட்டு
சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்ட பதிவில், ‘அயோத்தியில் கடந்த 7 ஆண்டுகளில் நடந்த நிலபேரங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். அயோத்தியில் இருக்கும் நிலங்களை, வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் வாங்கியும் விற்றும் கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றனர். மாநில பாஜ அரசின் முடிவு உள்ளூர் மக்களுக்கு எதிரானது. இது அவர்களுக்கான பொருளாதார சதி. பல கோடி ரூபாய் மதிப்பிலான நில மோசடிகள் நடந்துள்ளன. இங்கு நிலம் வாங்கப்படவில்லை; மாறாக நில மாபியாவால் அபகரிக்கப்பட்டு வருகிறது. அயோத்தி-பைசாபாத் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. ஏழைகள் மற்றும் விவசாயிகளிடமிருந்து நிலத்தை வாங்குவது, அவர்களின் நிலத்தை அபகரிக்கும் செயலாகும். அயோத்தியில் வளர்ச்சி என்று பிரசாரம் செய்யும் அரசு, நில மோசடிகள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
* அயோத்தி நிலத்தை விற்கும் அமைச்சர்கள்: பிரியங்கா பகீர்
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்ட பதிவில், ‘சாமானிய மக்களுக்கு கோதுமை மாவு, பருப்புகளின் விலை தெரியும். ஆனால் மாநில அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அயோத்தி நிலத்தை விற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
The post ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பின்னர் அசுர வேகம் அயோத்தி பகுதி நிலங்களை வாங்கி குவித்த பிரபலங்கள்: 2019 முதல் இப்போது வரை 2500 முறை பத்திரப்பதிவு appeared first on Dinakaran.