×

கள்ளக்குறிச்சி மதி மரண வழக்கு அரசு வழக்கறிஞர் கூடுதல் ஆட்சேபனை மனுதாக்கல்

கள்ளக்குறிச்சி, ஜூலை 11: கள்ளக்குறிச்சி மதி மரண வழக்கில் அரசு வழக்கறிஞர் கூடுதல் ஆட்சேபனை மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்தவர் கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த ராமலிங்கம் மகள் மதி(17). இவர் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி பள்ளி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இவருடைய மரணத்துக்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகளை சேர்ந்த இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறி வன்முறையில் முடிந்தது.

இந்த வழக்கு கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி தரப்பு வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. இந்நிலையில் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராக வேண்டி நேரம் குறிப்பிடாமல் விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார். பின்னர் அரசு தரப்பு வழக்கறிஞர் தேவசந்திரன் ஆஜராகி மதி மரண வழக்கின் மனுதாரரான மதி தாய் செல்வி தரப்பில் கேட்கப்படுவது மதி இறந்த நாளன்று பள்ளி நிர்வாகத்தினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் மற்றும் ஆசிரியர்கள், தாளாளர் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல் பதிவு, ஓப்பன் ஆகாத 26 சிசிடிவி கேமரா பதிவுகள், எப்ஐஆர் புக், ஜிடி புக், படிவம் 91 ஆகியவை முழுமையாக வழங்க வேண்டும் என ஏற்கனவே கேட்டு இருந்தனர். என்றார்.

தொடர்ந்து தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தேவசந்திரன் கூடுதல் ஆட்சேபனை மனு தாக்கல் செய்தார். அதில் எப்ஐஆர் ஆன்லைனில் மட்டும் பதிவு செய்யப்படுகிறது. ஜிடி புக் தனிநபர் பார்க்க அனுமதி இல்லை. நீதிமன்றம் மட்டுமே பார்வையிடலாம் என்றும், படிவம் 91 நீதிமன்றத்தில் உள்ளது என்றும், 15 போன் நம்பர்களின் கால் விபரங்கள் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளன என்றும், பள்ளி வளாகத்தில் 3 பதிவான சிசிடிவி காட்சி பதிவு ஓப்பன் ஆகவில்லை என அரசு தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தார். அதனையடுத்து இந்த வழக்கை ஆகஸ்ட் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ராம் உத்தரவிட்டார்.

The post கள்ளக்குறிச்சி மதி மரண வழக்கு அரசு வழக்கறிஞர் கூடுதல் ஆட்சேபனை மனுதாக்கல் appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Kaniyamur ,Chinnasalem, Kallakurichi district ,Dinakaran ,
× RELATED சின்னசேலம் அருகே பரபரப்பு வெறிநாய்...