ஆதி அந்தம் இல்லாத அருள் பெரும் சோதியாய் விளங்கும் பரம் பொருள் அருவன் ஆயினும் அன்பர்க்கு உருவாய் வருவன் என்ற மாமறைக்கிணங்க அருவுருவத் திருமேனியான இலிங்க வடிவில் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட சிறப்புப் பெற்ற திருத்தலம் திருவண்ணாமலையாகும். சக்திக்கு ஒரு பாகம் தான் கொடுத்து நின்ற மலை. முக்திக்கு முளைத்தமலை. எத்திசையும் போற்றும் மலை. போற்றிப் புகழ்வார் எழுபிறப்பை மாற்றும் மலை அண்ணாமலை. ஞானத்திரளாய் நின்று நல்ல அன்பர்களுடைய ஊனத்திரளை நீக்கும் பரம்பொருளாகிய அண்ணாமலைப் பெருமான் எழுந்தருளியிருக்கும் திருவண்ணாமலையில் பழங்காலந்தொட்டு நடைபெற்று வரும் திருவிழாக்கள் பலவாகும்.
திருவண்ணாமலைத் திருக்கோயிலில் ஓராண்டில் பன்னிரண்டு மாதங்களில் பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன. இத்திருக்கோயிலில் நடைபெறும் விழாக்கள் தனிச் சிறப்புடையவை. பெரிய திருவுருவங்களும் வாகனங்களும் மிகப் பெரியன. அவற்றிற்கேற்ப அலங்காரங்களும் கண்டு கண் குளிரத்தக்கன. இக்காட்சிகள் என்றும் நம் மனதில் பதிவன.திருக்கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களைக் கண்டுகளிப்பதோடு மட்டுமின்றி அவற்றின் உட்கிடக்கையையும் தத்துவத்தையும் அறிந்துகொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களில் அர்த்தம் உள்ளது. அது போல திருவண்ணாமலையில் ஆண்டு முழுவதும் நடைபெறும் திருவிழாக்களுக்கும் தனிச்சிறப்பு உள்ளது.இந்து சமய நெறிகள் குறிப்பிட்ட ஒரு காலத்தில் ஒரு சமுதாயச்சூழலில் தனிமனித அல்லது சமுதாயப் போராட்டத்தினால் அமைத்துத் தரப்பட்டவை அல்ல. அவை நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டவை. மிக நெடுங்காலத்திற்கு முன்னர் இருந்தே இப்பாரம்பரியம் அனுபவ முறையாகத் தொடரந்து வந்துகொண்டிருக்கிறது.
அதன் தொடக்கத்திற்கு வரையறை உடைய காலம் இல்லை. இப்பாரம்பரியம் இறை வனிடத்திலிருந்தே தொடர்கிறது. இந்துக் களின் ஆன்மிக உலகியல் வாழ்க்கை நெறிகளுக்கு வேதங்களே ஆதாரங்களாகும். இவ்வேதங்களின் பொருளை உணர்த்தும் செயல்பாடே திருவிழாக்கள் ஆகும். இத்திருவிழாக்கள் சிறப்பாக முறையோடு நடைபெற்றால் நாடு செழிக்கும். மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
திருமந்திரங்களும் வேதங்களும் அவற்றின் வழியே வந்த ஆகம. நூல்களும் இறைவனால் அருளப்பெற்றவை என்றும், வேதத்தை ஓதுவது சிறந்த அறம்; அதில் எல்லா அறங்களும் கூறப்பெற்றுள்ளன என்றும் உரைக்கிறது. இறைவன் ஒருவனே, அவன் இயற்கையாகப் பிரபஞ்சமாக விளங்குகிறான், இதனை-
‘‘வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான் எனது என்றவ ரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே.
என்கிறது ஒரு பாடல்.உலகில் தோன்றிய ஒவ்வொருவரும் தீட்சை பெறுவது மிகவும் முக்கியமாகும். பரம் பொருளாகிய பரமாத்மா ஜீவனாகிய மனிதனை படைக்கும்போது இறைவன் இடும் கட்டளைகளை செய்விக்க சமயத்தை வழங்குகிறான்.ஆனால், இவனோ காம, குரோத செயல்களில் ஈடுபட்டு அந்த நல்வாய்ப்பினை தவறவிடுகிறான். இவன் தீட்சை பெற்றவனாக விளங்க, இறையருள் கிட்ட கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் கலந்துகொள்ளுதல் ஆகும். எல்லோரும் தீட்சை பெற இயலாதவாறு சில இடர்ப்பாடுகள் உள்ளன. என்றாலும் இறைவன் எல்லார்க்கும் பொதுவானவன். எனவே எல்லா மக்களுக்கும் ஒரு சார்பின்றி இறைவன் அருள் பாலிக்கக் கடமைப்பட்டுள்ளான்.
நினைவில் வையுங்கள். திருக்கோயில்களில் நடைபெறும் பெருவிழாக்கள், எல்லா மக்களுக்கும் இறைவன் அளிக்கும் பொதுவான தீட்சையாகும். ஆகவே மக்கள் அனைவரும் ஆலயங்களில் நடைபெறும் பெருவிழாக்களில் பங்குகொண்டு இறை வனைத் தரிசித்து வழிபாடு செய்தல் மிக மிக இன்றியமையாததாகும்.
இறைவன் நம்மைக் காணும் போது, அருள்பாலிக்கும்போது அவனுடைய முழுமையான ஆசிர் கிட்டுகிறது. நாம் அவனைக் காணும் போது அப்பர் கூற்றின்படி இருகை கூப்பி, உடல் நடுங்கி, உள்ளம் உருகி மனத்தை ஒன்றுபடுத்தி இறையருள் பெறவேண்டும்.நாம் அறிந்துகொள்வது ‘திருவிழா’ என்பது எல்லா மக்களுக்கும் இறைவன் அருட்பார்வையால் தீட்சை அளிக்கும் காலம் என்பதாகும்.
மனிதனின் ஆன்மா மும்மலத்தில் மூழ்கி உள்ளது. இதனைப் பாசபந்தமற்றதாகவும் சிவஞானத்தைப் பெற்று சிவபெருமானின் திருவடியை அடைய வழிகாட்டுகிறது.
ஆலயங்களில் கொடி வணக்கம் எனும் கொடியேற்றம் மிகவும் முக்கியத்துவம் பெற்றது. கொடி வணக்கத்தை தேவாரம் இப்படிப் போற்றுகிறது.
‘‘கண்காட்டும் நுதலானும் கலைகாட்டும் கையானும்
பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டும் கடையானும்
பண்காட்டும் இசையானும் பயிர் காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டும் கொடியானே…’’
என்று கொடி வணக்கம் பற்றி விளக்குகிறது.
ஆனித் திருமஞ்சனம் போன்று ஒரு பெருவிழாவினைத் தொடங்கும்போது திருக்கோயிலில் கொடி ஏற்றி விழாவினைத் துவக்குவார்கள். திருவண்ணாமலை திருக்கோயிலில் கொடியேற்று விழா மிகவும் சிறப்புடையதாகும். அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள பழமையான கொடிக்கம்பம் மிகவும் சிறப்புடையதாகும். கொடியேற்றுவதின் முக்கியத்துவம் என்ன என்பதை நாம் அறிய வேண்டும்.
தாயுமானவர் கூற்றின்படி ‘நெஞ்சகமே கோயில்’ என்றாலும் அந்த நெஞ்சில் உள்ள கோயிலைத் தூய்மைப்படுத்துவது தான் மனிதனின் கடமையாகும். திருக்கோயிலில் உள்ள கொடிக்கம்பத்தின் அமைப்பைப் பார்க்கும்போது அதன் ஒவ்வொரு அவயமும் ஒரு மூலாதாரத்துடன் விளங்கும். கொடி ஏற்றும்போது பயன்படுவது மூன்று பொருட்கள், அதாவது கொடிக் கயிறு, தர்ப்பைக் கயிறு மற்றும் கொடிச்சீலை ஆகும். கொடிமரம் பதியாகிய சிவபெருமானைக் குறிக்கும். கொடிக்கயிறு திருவருள் சக்தியைக் குறிக்கும்.
கொடிச் சீலை ஆன்மாவைக் குறிக்கும் தருப்பைக் கயிறு-பாசத்தைக் குறிக்கும். ஆன்மாவானது பாசத்தை நீக்கி சிவபதத்தை அடைதல், ஒவ்வொன்றும் ஒவ்வொரு கருத்தை அடிப்படையாகக் கொண்டு விளங்குகிறது. மும்மலத்தில் அமிழ்ந்து கிடக்கின்ற ஆன்மா, திருவிழா என்னும் தீட்சை முறையினால் பாசபந்த மற்றுச் சிவஞானத்தைப் பெற்றுப் பதியின் திருவடியை அடையும் முறையைக் கொடியேற்றம் காட்டுகிறது.
இதனை விளக்கமாக ‘ஆன்மா-பாசம் நீங்கி சிவபெருமானை அடையுமிடத்து, அருட்சக்தியின் வாயிலாக அடைதல் வேண்டும். கொடியேற்றத்தில் ஆன்மாவைக் குறிக்கும் கொடிச் சீலையானது அருட்சக்தியைக் குறிக்கும் தருப்பைக் கயிறு வழியாகச் சென்று கம்பத்தில் ஆறு ஆதாரங்களை ஆசனமாகக் கொண்டு அதன் மீதிருக்கும் பரமசிவத்தை அடைகிறது. இதில் கொடி மரமும் கொடிச்சீலையும் வேறுபட்ட பொருளாக இருந்தாலும் கொடிக்கம்பத்தில் அது இணைந்து ஒடுங்கிக் காணப்படுவதால் சிவத்தில் ஆன்மா ஒடுங்கி காணப்படுதலாகிறது. இதில் உள்ள பொருள் சுழற்சியாக சுழன்று வருகின்ற ஆன்மா.
பிறப்பை நீக்கி சிவபெருமானை அடைதல் என்பதனை உணர்த்தும் நற்கதியாகும். கொடியேற்று வைபவத்தில் மக்கள் அனைவரும் கூடியிருந்து அருள்மிகு உண்ணாமுலை உடனாகிய அண்ணாமலைக்கு அரோகரா! அரோகரா!! அரோகரா!!! என முழக்கமிட்டு அருள்மிகு உண்ணாமுலை உடனாகிய அண்ணாமலையாரை வேண்டி அனைவருக்கும் காட்சி தந்து அருள்கிறார். மக்கள் அனைவரும் கண்டு, கேட்டு பேரானந்தம் அடைகின்றனர்.
ஆனித் திருமஞ்சனம் என்றாலே பொதுவாக எல்லோரும் தில்லைச் சிதம்பரத்தையே நினைவு கூர்வார்கள். நாடெங்கிலும் உள்ள எண்ணற்ற சிவாலயங்களிலும் ஆனித் திருமஞ்சனப் பெருவிழா சிறப்பாக நடைபெறுவதைப் பலர் அறியமாட்டார்கள். அந்த வகையில், திருஅண்ணாமலையில் ஆனித் திருமஞ்சனப் பெருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. இதனை பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கண்டு மகிழ்கின்றனர்.
இங்கே ஆனி மாதம் வரும் உத்தரநட்சத்திரத்தில் அருள்மிகு சிவகாம சுந்தரி, அருள்மிகு நடராஜப் பெருமான் திவ்ய அலங்காரங்களுடன் புறப்பாடாகி மேளதாளங்கள் மற்றும் இன்னிசை கீதங்களோடு புறப்பாடாகி ஆயிரம் கால் மண்டபம் எழுந்தருள்கிறார்கள். அங்கே இரவு முழுவதும் பல அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெறுகின்றன. மறுநாள் காலை சுவாமியும் அம்பாளும் திவ்ய அலங்காரத்தோடு இருவரும் இணைந்து திருநடனமாடிக் கொண்டு ஆயிரங்கால் மண்டபப் படியில் இறங்கி வரும்போது, கைலாயத்தில் பார்வதியும் பரமசிவனும் திருநடனம் ஆடி வருவது போல் அக்காட்சி மிகவும் ஆனந்தமாக இருக்கும். பிறகு திருமஞ்சனக் கோபுரத்தின் வழியாக அருள்மிகு நடராஜப் பெருமான் திருவீதிக்கு வருகிறார். இதற்கு ‘‘ஆனித் திருமஞ்சன உற்சவம்’’ என்று பெயர்.
நமக்கு ஒரு வருஷம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் என்பர். ஒரு வருடத்திற்கு அருள்மிகு நடராஜப் பெருமானுக்கு ஆறுநாள் விசேஷ அபிஷேகம் நடைபெறுகிறது. அதன்படி- சித்திரை மாதம், திருவோண நட்சத்திரத்தில் கனக சபையிலே மாலைவேளையில் அபிஷேகம் நடைபெறும்.ஆனிமாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் ‘ராஜசபை என்கிற ஆயிரங்கால் மண்டபத்தில் உதயத்திற்கு முன் அதிகாலை 4 மணிக்கு அபிஷேகம் நடைபெறும்.ஆவணி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனக சபையில் சாயுங்கால வேளையில் அபிஷேகம் நடைபெறும். புரட்சி மாதம் பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனகசபையில் அருள்மிகு நடராஜப் பெருமானுக்கு மாலைவேளையில் அபிஷேகம் நடைபெறும்.
மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் ராஜசபை என்கிற ஆயிரங்கால் மண்டபத்தில் உதயத்திற்கு முன் அதிகாலை 4 மணிக்கு அபிஷேகம் நடைபெறும்.
மாசிமாதம் பூர்வபட்ச சதுர்த்தசியில் சுவாமிக்கு கனகசபையில் மாலையில் அபிஷேகம் நடைபெறும்.
திருவண்ணாமலைத் திருக்கோயிலில் ஆனித் திங்களில் தட்சிணாயன புண்ணிய கால விழா பத்து நாட்கள் பிரம்மோற்சவ விழாவாக சிறப்பாக நடைபெறுகிறது. இத்திருவிழாவில் காலை கொடியேற்றம் தொடங்கிய பின்னர் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.பத்து நாட்கள் காலை மாலை இரண்டு நேரமும் சுவாமி திருவீதி உலா வருவார். கொடியேற்றிய முதல் நாள் முதல், ஏழாம் நாள் திருவிழா வரையில். உற்ஸவ மூர்த்திகளான அருள்மிகு சோமாஸ்கந்தர், அருள்மிகு சிவானந்த நாயகி, அருள்மிகு விநாயகப் பெருமான், அருள்மிகு சுப்பிரமணியர், அருள்மிகு சண்டேசுவரர் முதலிய பஞ்ச மூர்த்திகளும் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான வெள்ளி, தங்க வாகனங்களில் திருவீதியுலா வருவார்கள்.
திருவிழாக் காலங்களில் இறைவன் எழுந்தருளி வரும் ஒவ்வொரு வாகனமும், பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி வரும் வாகனங்களும் பஞ்ச கிருத்தியங்கள் எனப்படும் ஐந்து செயல்களில் யாதானும் ஒன்றைக் குறிப்பதாகவே இருக்கும். அதாவது மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம் பொறிகளும், சாத்திரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், மாயை, துரிய-தீதம் என்னும் ஐந்து அவத்தையும் ஆணவம், கன்மம், மாயை, வயிந்தவம், திரோதாயி எனும் ஐந்து மலங்களும் அகற்றப்படும் காரணமாக இவர்கள் திருவீதியுலா நடைபெறுகிறது.பல ஆண்டுகளுக்கு முன் திருவண்ணாமலையில் ஆனித் திருமஞ்சன விழாவே முக்கியமான பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. பின்னரே மற்ற மாதங்களில் வரும் விழாக்களும் முக்கியத்துவம் பெற்றுக் கொண்டாடப்பட்டுவருகின்றன.
பத்தாம் நாள் ஐயங்குளத்தில் தீர்த்த வாரி உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது. தீர்த்தவாரி என்பது ‘தெப்பல் திருவிழா’ என்று அழைப்பார்கள். திருவிழா முடிந்து எல்லாத் திருக்கோயில்களிலும் ‘தெப்பல்’ என்பது ஒரு சிறப்பு ஆகும். இவ்வுலகைப் படைத்த இறைவன் நீரிலும் உள்ளான் என்பதை மக்கள் உணர்ந்து நீரில் இறைவனைக் காண மகிழ்ந்தான். அதனைக் குறிப்பிடும் வகையில் திருக்கோயிலிலிருந்து சுவாமி புறப்பாடாகி நகரின் மையப்பகுதியில் உள்ள ஐயங்குளத்தில் அலங்கார அமைப்புகளுடன் வைக்கப்பட்டுள்ள தெப்பலில் தினசரி இரவு மின்னொளியுடன் இந்தத் தெப்பல் உற்சவம் 3-நாட்கள் நடைபெறுகிறது. அதன் படி இத்திருக்கோயிலில் முதல் நாள் அருள்மிகு சந்திர சேகரர் தெப்பல், இரண்டாம் நாள் அருள்மிகு பராசக்தி அம்மை தெப்பல், மூன்றாம் நாள் அருள்மிகு சுப்பிரமணியர் தெப்பல் என மூன்று நாட்கள் தெப்பல் திருவிழா நடைபெறுகிறது.
ஆனித் திருமஞ்சன நாளில்இங்கே மாணிக்கவாசகர் தெய்வத்திற்கு நிகராக கருதப்பட்டு, வழிபாடு செய்யப்படுகிறார். பிரம்ம மகோத்ஸவத்தின் பத்து தினங்களிலும், மாணிக்கவாசகப் பெருமானை எழுந்தருளச் செய்து, அரங்கத்தில் உள்ள நடராஜப் பெருமானுக்கு எதிரே நிற்கச் செய்து சிறப்பான முறையில் வழிபாடுகள் செய்கிறார்கள்.
மாலைவேளை பூைஜ முடிந்த பிறகு மாணிக்கவாசகருக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்படும். அப்போது அவர் இயற்றிய திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டும், ஒவ்வொரு பாடல் முடிவிலும் சிறப்பு நிவேதனங்கள் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெறுகிறது. இதில் 20 திருவெம்பா வைப்பாட்டுகள் பாடி 21 விசேஷ நைவேத்தியமும், 21 தீபாராதனைகளும் முடிந்து மகா தீபாராதனையும் நடைபெறும்.
ஆனித் திங்களில் வரும் மக நட்சத்திரம் மாணிக்கவாசக சுவாமிகள் திருஅவதார திருநட்சத்திரமாகும். நால்வரில் ஒருவரான மாணிக்கவாசக சுவாமிகள் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி மற்றும் திருவண்ணாமலையில் தங்கியிருந்து பாடிய பாக்கள் அநேகம். இவர் தங்கியிருந்த காலம் மிகவும் சிறப்புடையதாகும். அருள் தரும் அண்ணாமலை திருக்கமல பாதங்களைப் போற்றி தினமும் கோயிலுக்குச் சென்று இறைவனை பல வடிவங்களில் கண்டு ஆனந்தம் அடைந்து பாடல்களை பூமாலையாக கோர்த்து அருள் தரும் அண்ணாமலைக்கு பெருமை சேர்த்துள்ளார். அதனால் அவரது திருநட்சத்திரத்தை மிகவும் சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள்.
ஆனித் திருமஞ்சனம் மற்றும் மார்கழி உத்திரத்தில் நடக்கும் திருவிழாவில் மாணிக்கவாசகப் பெருமானும் நடராஜப் பெருமானும் ஒரே சப்பரத்தில் திருவீதியுலா செல்வர். சிவபெருமானுக் கொப்பான மாணிக்கவாசகர் பெருமான் குருபூஜையின் போது நந்தி வாகனத்தில் எழுந்தருளுவார். அன்று மதியம் சிவனடியார்களை சிவனாகக் கருதி வழிபடும் ‘‘மகேஸ்வர பூஜை’’ சிறப்பாக நடைபெறும்.
ஆனித் திருமஞ்சன விழாவின் நிறைவுப் பகுதியாக அருள்மிகு சண்டேசுர நாயனார் உற்சவம் நடைபெறுகிறது.ஆலயங்களில் நடைபெறும் அனைத்துத் திருவிழாக்களின் முதல் நாயகராகக் கொண்டாடப்படுபவர் அருள்மிகு சண்டேசுர நாயனாரே ஆவார். திருவிழாவினை ஆரம்பிப்பவரும் இவரே, முடிவினை வழங்குபவரும் இவரே. இவர் மூல சூத்திரக்காரர். இவரின் அசைவிலே தான் எல்லாம் நடைபெறுகிறது. இவர் எப்பொழுதும் ‘‘நித்ய தியானத்தில் இருப்பவர்’’. தியானத்தின் மூலம் அனைத்தையும் அறிந்தவர். பஞ்ச மூர்த்திகளில் இவர் ஐந்தாவது மூர்த்தியாக எழுந்தருளி உலா வருவார். அருள்மிகு சண்டேசுவரர் கோயிலானது சிவாலயத்தின் இடப் பக்கத்தில் அமைக்கப் பெற்றிருக்கும்.
ஆலயத்தின் கருவறையில் எழுந்தருளியிருக்கும் மூர்த்திக்கு அணிந்த மாலையும், அவருக்குச் செய்த நிவேதனமும் சண்டேசுவரர் பூஜைக்குரியனவாகும். சண்டேசு வரர் இறைவனின் திருவருளைப் பூரணமாகப் பெற்ற அடியார் ஆவார். அவர் எப்போதும் சிவத்தியானம் செய்துகொண்டே இருக்கிறார்.
இவரைக் கோயில் வழிபாடு முடிந்தவுடன் இறுதியாக வணங்குதல் வேண்டும். சிவத்தியானத்தில் இருக்கும் இவர் நம்மை அருட்கண் கொண்டு நோக்கி சிவவழிபாட்டின் பயனைத் தருதல் வேண்டி, மும்முறை இலேசாக நமது இருகைகளையும் தட்டி வழிபட்டு, அவர் நம்மைப் பார்ப்பதாகக் கருதி சிவ தரிசனத்தின் பயனைத் தருமாறு வேண்டிக்கொள்ளுதல் வேண்டும்.அதனால் தான் இறைவன் திருவீதி உலா வரும் போது, அவரை வழிபாடு செய்யும் அன்பர்களுக்கு வழிபாட்டின் பயனைத் தர வேண்டி சண்டிகேசுவரர் கடைசியாக ஊர் வலத்தில் எழுந்தருளிவருகிறார்.!
தொகுப்பு: டி.எம்.ரத்தினவேல்
The post திருவண்ணாமலையில் ஆனித் திருமஞ்சனம்! appeared first on Dinakaran.