மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே!
ஆனித் திருமஞ்சனம் ஜூலை 11 – 12, 2024
11-7-2024 அன்று இரவு நடராஜருக்கு அபிஷேகம் ஆரம்பம். 12-7-2024 அன்று தரிசனம்
1. ஆனி மாதச் சிறப்பு
பொதுவாக மகான்கள் பிறவி வேண்டாம் என்றுதான் பாடுவார்கள். ஆனால் திருநாவுக்கரசு சுவாமிகள் தில்லைக் கூத்தனை தரிசிக்கிறார். வளைந்த புருவங்களையும், கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயிலே முகிழ்க்கும் புன்னகையையும், கங்கையால் ஈரமான சடைமுடியையும், பவளம் போன்ற சிவந்த திருமேனியில் அணிந்த பால் போன்று வெண்மையான வெண்ணீற்றுப் பூச்சினையும், பேரின்பம் நல்கும் தூக்கிய திருவடிகளையும் காண்கிறார். அவர் மே சிலிர்க்கிறது. அடடா… இந்த அற்புத வாய்ப்பினைப் பெறுவதாக இருந்தால் இவ்வுலகில் மனிதராய்ப் பிறப்பெடுத்தலும் விரும்பத்தக்க செயலாகும். அவர் திருவாயிலிருந்து அற்புத தேவாரம் ஒலிக்கிறது.
குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!
அந்த நடராசப் பெருமானுக்கு ஜூலை 12-ம் தேதி ஆனித் திருமஞ்சன வைபவம் நடைபெற இருக்கிறது. அந்த வைபவத்தின் சிறப்புதான் இந்த முத்துக்கள் முப்பது கட்டுரை.
உத்திராயணப் புண்ணிய காலத்தின் கடைசி மாதம் ஆனி. இது தேவர்களின் மாலைப் பொழுது என்கிறது சாஸ்திரம். மேலும் ஆனிமாதம் இள வேனிற் காலம். நீண்ட பகல் பொழுதினைக் கொண்ட மாதமாக இந்த மாதம் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 12 மணி நேரம் 38 நிமிடம் வரை இந்த மாதத்தில் பகல் பொழுது நீண்டிருக்கும். சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்கும் காலம் என்பதால் இதனை மிதுன மாதம் என்றும் அழைப்பர். வடமொழியில் ஜேஷ்ட மாதம் என்று பெயர். ஜேஷ்டா என்றால் மூத்த அல்லது பெரிய என்று பொருள். பெயருக்கு ஏற்றாற் போல் தமிழ் மாதங்களில் பெரிய மாதமும் இதுவே. ஆம், இந்த மாதத்திலும் வைகாசியில் பிற மாதங்களுக்கு இல்லாதபடி 32 நாட்களைக் காண முடியும்.
2. கோயில்களில் கொண்டாட்டம்
ஆனி மாதத்தில் திருவல்லிக்கேணி நரசிம்மருக்கும், திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாளுக்கும் பிரம்மோற்சவங்கள் நடைபெறும். மதுராந்தகம் ஸ்ரீகோதண்டராமர் கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவம் ஆனி மாதத்தில்தான். அதேபோலவே இராமநாதபுரம் கோதண்ட ராமருக்கும் இந்த மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறும். திருமாலிருஞ்சோலை கள்ளழகருக்கு முப்பழ உற்சவம் நடைபெறும் மாதம் ஆனி மாதம்.
சைவ ஆலயங்கள் பலவற்றில் 10 நாள் உற்சவம் இந்த ஆனி மாதத்தில் நடைபெறும். பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர், சோழவந்தான் ஸ்ரீ ஜனக மாரியம்மன், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் என பற்பல கோயில்களில் இம்மாதத்தில் உற் சவங்கள் நடைபெறும். மகாவிஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்து பூமியை மீட்டுக் கொணர்ந்தது இந்த ஆனி மாதத்தில் தான். ஆனி மாத உத்தர நட்சத்திரத்தன்று சிவாலயங்களில் சிவபெருமானுக்கு ஆனித் திருமஞ்சனம் சாற்றப்படுகிறது.
3. மஹான்கள் குரு பூஜைகளும் அவதார விழாக்களும்
இந்த ஆனி மாதத்தில்தான் அருணகிரிநாதர், காரைக்கால் அம்மையார், (மாங்கனி உற்சவம், காரைக்கால்) ஏயர் கோன் கலிக்காம நாயனார், அமர் நீதி நாயனார் ஆகியோருக்கு குரு பூஜைகள் நடைபெறும். வைணவத்தில் ஆனி மாதத்தில் தான் ஆசாரிய பரம்பரையின் முதல் ஆச்சாரியரான நாத முனிகளுக்கு பத்து நாள் உற்சவம் நடைபெறும். இந்த மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் தான் பெரியாழ்வார் அவதரித்தார் என்பதால் எல்லா வைணவக் கோயில்களிலும் பெரியாழ்வாருக்கு உற்சவம் நடைபெறும்.
குறிப்பாக ஸ்ரீவில்லிபுத்தூரில் பத்து நாள் உற்சவம் நடை பெறும். ஸ்ரீ சக்கரத் தாழ்வார் ஜெயந்தியும் இந்த ஆனி மாதத்தில் தான் வருகின்றது. புரி ஜெகந்நாதர் ரத யாத்திரையும் ஆனி மாதத்தில் தான் வருகிறது. அம்மனுக்கு ஆஷாட நவராத்திரியும் ஆனிமாதத்தில் தான் வருகிறது. இப்படி பல்வகையிலும் சிறப்பு மிகுந்தது ஆனி மாதம். எத்தனைச் சிறப்புக்கள் இருந்தாலும் திருமஞ்சன சிறப்பு என்பது ஆனி மாதத்துக்கே உரியது. அதைத்தான் ஆனித்திருமஞ்சனம் என்கின்றோம்.
4. திருமஞ்சனம் என்றால் என்ன?
திருமஞ்சனம் எனும் சொல்லிற்கு மூலவரின் திருமேனிக்கு நறுமண எண்ணெய் பூசுவதாகும். மெய்யஞ்சனம் என்றால் உடம்புக்கு எண்ணெய் பூசுவது. திருமெய் அஞ்சனம் எனில் இறைவனின் திருமேனிக்கு எண்ணெய் பூசுவது. திருமெய் அஞ்சனம் என்ற சொல் மருவி திருமஞ்சனம் ஆயிற்று. பெருமாள் கோயில்களிலும் சிவாலயங்களிலும் இந்த திருமஞ்சனங்கள் விசேஷம். திருமஞ்சன பலன் அற்புதமானது. திருமஞ்சனத்திற்கு உதவுவதும், (பொருட்களை நம் சக்திக்கு ஏற்ப அளித்தல்) கலந்து கொள்வதும் நமது பாவங்களைப் போக்கும். புண்ணிய பலன்களை வாரி வழங்கும். இறை மேனியை திருநீராட்டம் செய்யும் போது அக்காட்சியை அவசியம் தரிசிக்க வேண்டும். அதனால் தான் சிதம்பரம் ஆனித்திருமஞ்சன விசேஷத்தை ஆனி தரிசனம் என்று
அழைக்கிறார்கள்.
5. ஆனிமாதத்தில் நடைபெறும் ஜேஷ்டாபிஷேகம்
ஜேஷ்ட நட்சத்திரம் என்றால் கேட்டை நட்சத்திரம். ஜேஷ்ட மாதம் என்றால் ஆனி மாதம். ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் நடைபெறும் அபிஷேகம் என்பதால் இதற்கு ஜேஷ்டாபிஷேகம் என்று பெயர். இது ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு விதமாக நடைபெறுகிறது. சில கோயில்களில் ஆனிமாத கேட்டை நட்சத்திரம் அன்று நடைபெறும். சில கோயில்களில் ஆனி மாதம் வளர்பிறை ஏகாதசியில் நடைபெறும். இந்த ஜேஷ்டாபிஷேகம் குறித்து ஆகம சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.
பெருமாளுக்கு சாதுர்மாஸ்ய சங்கல்பம் உண்டு ஆனி மாதத்தில் வளர்பிறை ஏகாதசியில் பெரிய திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்பு யோக சயனத்தில் ஆழ்கிறார். ஆவணி மாத வளர்பிறை ஏகாதசியில் அவர் புரண்டு படுத்துக்கொள்கின்றார். அப்பொழுது நடைபெறும் உற்சவம் பவித்ர உற்சவமாகும். அதனை அடுத்து இரண்டு மாதம் கழித்து பெருமாள் கைசிக புராணம் கேட்கிறார். மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியில் பரமபத அனுபவத்தைக் காட்டுகின்றார். இதில் ஆனி மாத வளர்பிறை ஏகாதசி திருமஞ்சனமே ஜேஷ்டாபிஷேகம் எனப்படுகின்றது.
6. பதஞ்சலி மகரிஷி ஆரம்பித்த ஆனித் திருமஞ்சன விழா
சிவபெருமானின் பல்வேறு ரூபங்களில் நடராஜ ரூபம் மிக உயர்ந்ததாகப் போற்றப்படுகிறது. ஆனி திருமஞ்சனம் என்று சொல்லக்கூடிய ஆனி உத்திர நாளன்று நடராஜ பெருமாளுக்கு நடைபெறும் அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. நடராஜர் உள்ள அனைத்து சிவன் ஆலயங்களிலும் இந்த அபிஷேகம் நடைபெறும். அதிலும் குறிப்பாக சிதம்பரத்தில் நடைபெறும் இந்த அபிஷேகம் அதி விசேஷம் வாய்ந்தது. சிவன் அபிஷேகப்பிரியன்.
எனவே லிங்க மேனியான சிவபெருமானுக்கு தினந்தோறும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், ஆடலரசன் நடராஜ பெருமானுக்கே ஆண்டில் ஆறே அபிஷேகங்கள். அவற்றுள் மார்கழி திருவாதிரையும், ஆனி உத்திரமும் சிதம்பரத்தில் பிரம்மோற் சவமாகவே கொண்டாடப்படுகின்றன. நடராஜ பெருமானுக்கு, பால், தயிர், பஞ்சாமிர்தம், நெய், சந்தனம் என 36 வகையான பொருட்களைக்கொண்டு ஆறு அபிஷேகங்களும் நடைபெறும். ஆனித் திருமஞ்சன விழாவைச் சிதம்பரத்தில் ஆரம்பித்து வைத்தவர் பதஞ்சலி மகரிஷி என்பார்கள்.
7. திருமஞ்சன அழகு
திருஞானசம்பந்தர் திருமஞ்சனத்தைப்பற்றி அழகான ஒரு தேவாரத்தில் பாடுகின்றார்.
ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர்
அந்தணர் பிரியாத சிற்றம்பலம்
நாடினாய் இடமா நறுங்
கொன்றை நயந்தவனே
பாடினாய் மறையோடு பல் கீதமும்
பல் சடை பனிக்கால்
கதிர் வெண் திங்கள்
சூடினாய் அருளாய் சுருங்க
எம தொல் வினையே
இப்பாடலில் இறைவன் எப்பொழுதும் விரும்புகின்ற இரண்டு விஷயங்களை திருஞானசம்பந்தர் குறிப்பால்
உணர்த்துகின்றார்.
1.பால், நெய், தயிர் போன்ற பொருகளால் செய்து கொள்ளும் அபிஷேகம். 2.அந்த அபிஷேகத்தைச் செய்கின்ற தில்லைவாழ் அந்தணர்களைப் பிரியாமல் இருப்பது.
இந்த இரண்டு குறிப்பையும் இதிலே உணர்த்துவதால், தில்லை வாழ் அந்தணர்களால் செய்யப்படும் திரு அபிஷேகத்தை (ஆனித் திருமஞ்சனம்) சிவபெருமான் எப்பொழுதும் விரும்புகின்றான். எனவே ஆனித் திருமஞ்சனம் உயர்வானது.
8. தெற்கு நோக்கி ஆடும் நடனம்
ஒரு அதிசயம் பாருங்கள். கோயில் என்றால் சைவத்தில் சிதம்பரம். வைணவத்தில் திருவரங்கம். இந்த இரண்டு தலங்களிலும் நடராஜரும், திருவரங்கநாதரும் தெற்கு நோக்கி திருக்காட்சி தருகிறார்கள். நடராஜர் தெற்கு திசையை நோக்கி ஏன் ஆடுகின்றார்? எல்லாத் திருக்கோயில்களிலும் நடராஜ பெருமானின் திருவுருவம் தெற்கு நோக்கி அமைக்கப்பட்டு இருப்பதைக் காணலாம். ‘‘நம்பியவர்க்கு நடராஜன்; நம்பாதவர்க்கு எமராசன்’’ என்று ஒரு பழமொழி உண்டு.
இறைவன் தன்னை வழிபடும் அடியவர்களுக்கு தெற்கிலிருந்து வரும் எமனால் யாதொரு துன்பமும் நேரக்கூடாது; அவனைக் காக்க வேண்டும் என்பதற்காக தெற்கு நோக்கி ஆடுகின்றான் என்பர் பெரியோர். திருவிளையாடல் புராணம் இயற்றிய எழுதிய பரஞ்சோதி முனிவர் தெற்கு நோக்கி நடராஜப் பெருமான் ஆடுவதற்கு வேறு ஒரு காரணத்தைச் சொல்லுகின்றார். செந்தமிழ் மொழி மீதும் தென்றல் காற்றின் மீதும் உள்ள விருப்பம் காரணமாக தெற்கு நோக்கி இறைவன் திருநடனம் புரிகின்றான் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
9. ஏன் முகம் சாய்ந்து இருக்கிறது?
நடராஜப் பெருமான் திருவுருவத்தை உற்று கவனிக்கும் பொழுது அவருடைய முகமானது சற்று சாய்ந்து நிற்கும். கலைஞர்கள் அப்படித்தான் அவருடைய திருவுருவத்தைச் சமைப்பார்கள். நடராஜர் பெருமானின் திருமுகம் சிவகாமி அம்மையை நோக்கும். இங்ஙனம் அம்பிகையை நோக்கி இறைவன் திருநடனம் புரியும் இயல்பு குறித்து குமரகுருபரர் அழகாக ஒரு பாடலில் விளக்குகின்றார். குழந்தையின் குடலானது மிக எளிதாக மருந்தைச் செரிக்காது.
அதனால் தாய் மருந்தைத்தான் உண்டு, அதன் பிறகு தன் பால் வழியாக, குழந்தை பெறும்படி செய்து நோயைப் போக்குவாள். அதைப்போல அம்பிகை, நடராஜப் பெருமானின் திரு நடனத்தை முதலில் தான் தரிசித்து, அதனுடைய பயனை, இந்த உலக உயிர்கள் அடையும்படி செய்வாள். அதனால் ஆனி திருமஞ்சனத்தின் போது சிவகாமி அம்மனோடு அவர் முகம் நோக்கியே இருக்கின்றார்.
10. ஆறு கால பூஜைகள்
சிதம்பரம் அற்புதமான கோயில். ஆறு என்பது இங்கு சிறப்பு. ஆண்டு தோறும் ஆறு அபிஷேகங்கள் போலவே நித்யம் ஆறு கால பூஜைகள் நடந்து வருகின்றன. முதலில் இந்த ஆறுகால பூஜைகள் பற்றி விவரங்களைத் தெரிந்து கொள்வோம். காலை 6.30க்கு திருவனந்தல் என்னும் பால் நைவேத்தியம் நடைபெறும். இதைக் காண்பது பெரும் பேறு என்பதால் இந்தப் பூஜைக்கு நிறைய அன்பர்கள் வருவார்கள். அதற்குப் பிறகு காலை எட்டு முப்பது மணிக்கு முதல் காலம் (காலை சந்தி) நடைபெறும்.
இரண்டு மணி நேரம் கழித்து 10:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை நடைபெறும். 12 மணிக்கு உச்சி காலம் நடந்து நடை சாத்தப்படும். மாலை 6 மணிக்கு சாயரட்ஷை பூஜை நடைபெறும். பூஜைக்கு அன்பர்கள் திரண்டு வருவார்கள். இரவு 8 மணிக்கு இரண்டாம் கால பூஜை. இரவு 10 மணிக்கு அர்த்த ஜாம பூஜை நடைபெறும்.
11. தினம் அபிஷேகம்
ஆறு காலங்களிலும் சந்திரமவுலீசுவரருக்கு அபிஷேகம் முதலியவைகளும் நடராஜர் சந்நதியில் 16 வகை தீபாராதனைகளும் நடைபெறும். ஐப்பசி மாதத்து பூரத் திருவிழாவில் சிவகாமி அம்மைக்கும் பங்குனி மாதத்து உத்தர திருவிழாவில் பாண்டியன் நாயகர் கோயில் சுப்பிரமணிய சுவாமிக்கும் கொடியேற்றம் முதலாக பத்து நாள் விழா நடைபெறும். கார்த்திகை தீபம் தைப்பூசம் முதலிய நாட்களில் ஐம்பெரும் கடவுளர் திருவீதிக்கு எழுந்தருளுவர். கந்தர் சஷ்டி விழாவில் சூரசம்காரம் நடைபெறும். ஒவ்வொரு பிரதோஷத்திலும் திருவாதிரைகளும் இடப வாகனத்தில் சுவாமி எழுந்தருளுவர்.
12. ஐந்து சபைகள்
திருவரங்கத்திற்கும் தில்லைக்கும் உள்ள மற்றொரு ஒற்றுமை இங்கும் சப்த (7) பிராகாரங்கள் உண்டு. சைவத்தில் ஐந்து சிறப்பல்லவா? (பஞ்சாட்சரம்) எனவே, ஸ்ரீ நடராஜ மூர்த்தி இருக்கும் தில்லை பெருங்கோயிலில் 5 சபைகள் இருக்கின்றன. நடராஜ மூர்த்தி எழுந்தருளி அருள்பாலிக்கும் கருவறைக்கு சிற்சபை என்று பெயர். நடராஜருக்கு சபாபதி என்று திருநாமம். அதற்கு பக்கத்தில் தான் சிதம்பர ரகசியம் இருக்கிறது. நந்திகேஸ்வரர் இருப்பது கனகசபை. அதன் மேல்கூரை தான் பொன்னால் வேயப்பட்டு இருக்கிறது.
13. சுந்தரர் வழக்கை தீர்த்த இடம்
அடுத்து ,3000 தேர் உருவம் உள்ள சபை. ஊர்த்துவ தாண்டவம் உள்ள சபை நிர்த்த சபை என்று பெயர். நடராஜருக்கு நேர் எதிரே கொடிமரம் தாண்டி உயரமாக இருக்கிறது. நடராஜர் சந்நதிக்கு வெளியே உள்ள பிராகாரத்தில் தேவசபை உள்ளது. இங்குதான் தீட்சிதர்கள் சபை கூடுவார்கள். உற்சவமூர்த்தி ஆபரணங்கள் இருக்கக்கூடிய இடமும் இதுதான். ஸ்ரீ சுந்தரர் வழக்கை தீர்த்ததும் “பித்தா பிறைசூடி” என்ற தேவாரத்தைப் பாடியதும் இங்குதான்.
இதற்கு வெளியிலே உள்ள பிராகாரத்தில் இருப்பது ஆயிரங்கால் மண்டபம் என்று சொல்லப்படும். ராஜசபை எனப்படும் இங்குதான் ஸ்ரீ நடராஜப் பெருமாள் மார்கழி திருவாதிரையிலும் ஆனி உத்தரத் திலும் திருமஞ்சனம் செய்து கொள்கின்றார். “உலக மெல்லாம்’’ என்று முதல் அடி எடுத்துக் கொடுத்து, திருத்தொண்டர் புராணம் எழுதும்படி சேக்கிழாரை நியமித்த இடமும் இதுதான்.
14. திருவாவடுதுறையில் ஆனித் திருமஞ்சன விழா
சிதம்பரம் பற்றி அறிந்து கொள்வதற்கு முன், நடராஜப் பெருமான் காட்சி தரும் பல கோயில்களிலும் நடைபெறும் திருமஞ்சன விழா குறித்து சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம். நாகை மாவட்டம் திருவாவடுதுறை ஆதீன மடம் சார்ந்த அருள்மிகு கோமுத்தீஸ்வரர் கோயில். சுயம்பு மூர்த்தியாக விளங்கிடும் இக்கோயிலின் மூல மூர்த்தி கோமுக்தீஸ்வரர் என அழைக்கப்படுகின்றார். அம்பாள் ஒப்பில்லா முலைநாயகி ஆவார். இக்கோயிலின் மூலவர் சந்நதியின் மேல் உள்ள விமானம் துவைதளம் என அழைக்கப்படுகின்றது. துணை வந்த கணபதி என்ற திருநாமத்துடன் இவ்வாலயத்தில் விநாயகர் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார்.
15. பொற்காசுகள் பெற்ற திருத்தலம்
திருமூலர் திருமந்திரம் இயற்றிய திருத்தலமிது. சிவபக்தரான திருமாளிகைத் தேவர் மீது படையெடுத்து வந்த நரசிங்க மன்னனுடன் போரிட்டு அவரைத் தோற்கடிப்பதற்காக அம்பிகை திருவாவடுதுறை கோயில் மதில் மீது இருந்த நந்திகளனைத்தையும் ஒரே நந்தியாக்கி அனுப்பியதால் இன்றளவும் இத்திருக்கோயில் மதில் மீது நந்திகள் கிடையாது. சிவபெருமானே சகல தோஷங்களும் நிவாரணமாக இருப்பதால் இத்திருக்கோயிலில் நவக்கிரகங்களுக்கு தனிச் சந்நதி கிடையாது. திருஞானசம்பந்தர் தமது தந்தையின் வேள்விக்காக சிவபெருமானிடம் ஆயிரம் பொற்காசுகள் பெற்ற திருத்தலம். இந்த ஆலயத்தில் நடராஜர் – ஆனித் திருமஞ்சன அபிஷேக ஆராதனை விழா பெரு உற்சவமாக கொடியேற்றத்துடன் பிரமாதமாக நடக்கும்.
16. ஆவுடையார் கோயிலில் ஆனி திருமஞ்சன தேரோட்டம்
திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ளது. திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும். இங்குதான் மாணிக்க வாசகர் திருவாசகம் இயற்றினார். இங்குள்ள தேர் தமிழகத்திலுள்ள பெரிய தேர்கள் சிலவற்றில் ஒன்றாகும். திருவாரூர், திருநெல்வேலி, ஆவுடையார்கோயில் ஆகிய ஊர்களில் உள்ள தேர்கள்தான் தமிழகத்தில் உள்ள கோயில்களின் தேர்களில் மிகவும் பெரிய தேராகும். இந்த தேர்ச் சக்கரத்தின் குறுக்களவு மட்டும் 90 அங்குலம் ஆகும்.
சக்கரத்தின் அகலம் 36 அங்குலமாகும். தமிழகத்திலுள்ள ஆலயங்கள் எல்லாவற்றிலுமே உருவ வழிபாடுதான் நடைபெற்று வருகின்றன. ஆனால், இந்த ஆத்மநாதர் ஆலயத்தில் மட்டுந்தான் அருவ வழிபாடு நடைபெற்று வருகிறது. மூலஸ்தானத்தில் எந்த விதச் சிலையும் கிடையாது. இத்தனை பெருமை வாய்ந்த திருப்பெருந்துறை ஆவுடையார் கோயிலில் ஆனி திருமஞ்சன தேரோட்டம். அற்புதமாக நடைபெறும்.
17. உத்தரகோச மங்கையில் ஆனித் திருமஞ்சனம்
உத்தரகோச மங்கை எனும் தலம், சிதம்பரத்துக்கு அடுத்து நடராஜர் திருத்தலங்களில் முக்கியமான தலங்களில் ஒன்றாகப் போற்றப் படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது. உத்தரகோச மங்கையே சிவபெருமானின் சொந்த ஊர் என்று பெருமையுடன் சொல்கிறது புராணம். மதுரை மற்றும் மதுரையைச் சுற்றிலும் சிவனார் ஏராளமான திருவிளையாடல் புராணங்களை நிகழ்த்தினார். திருவிளையாடல் புராணத்தில் வரும் ‘வலை வீசி மீன் பிடித்த படலம்’ இந்தத் தலத்தில்தான் நடந்தது. உத்தரகோசமங்கையில் உள்ள மூலவர் சுயம்பு லிங்கம். சுமார் மூவாயிரம் வருடங்களுக்கு முந்தையது என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
18. விசேஷ நடராஜர்
உத்தரகோசமங்கை மூலவருக்கு மங்களநாதர் எனும் திருநாமம். மங்களேஸ்வரர், காட்சி கொடுத்த நாயகர், பிரளயகேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். அம்பாள், மங்களேஸ்வரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி என அழைக்கப்படுகிறாள். சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பெரிய ஆலயம் இது. சிதம்பரத்தைப் போலவே இங்கேயும் நடராஜர் பெருமான்தான் விசேஷம்.
இங்கே உள்ள பஞ்ச லோக நடராஜர் மிகவும் வித்தியாசமாக காட்சி தருவார். வலது புறம் ஆண்கள் ஆடும் தாண்டவமும், இடது புறம் பெண்கள் ஆடும் நளினமான நடனமும் ஒரே நேரத்தில் தரிசிக்கலாம். இந்த நடராஜர் திருமேனி மிகத் தொன்மையானது என்கிறார்கள் ஆய்வாளர்கள்! மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சி தந்த சிறப்பு கொண்ட தலம் எனும் பெருமையும் உத்தரகோசமங்கைக்கு உண்டு. சிதம்பரம் போலவே ஆனி மாதத்தில் பத்துநாள் விழா நடைபெறும். நடராஜ ருக்கு ஆனி உத்திர திருமஞ்சனமும் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
19. திருவெண்காடு நடராஜர்
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல்பெற்ற சிவாலயமாகும். புதனுக்கு உரிய தலமாகக் கருதப்படுகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது புராணம். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவபெருமானின் 64 வடிவங்களில் 43- வது வடிவம் அகோரமூர்த்தி. திருவெண்காட்டில் அகோரமூர்த்தி தரிசனம் சிறப்பு வாய்ந்தது.
சிவபெருமான் 1008 விதமான தாண்டவங்கள் புரிந்த திருத்தலம் என்பதால் ஆதி சிதம்பரம் என்றழைக்கப்படுகின்றது. சிவபெருமான் ஆனந்தத்தாண்டவம் புரிந்த திருத்தலம். 108 சக்தி பீடங்களில் ஒரு தலம். நவகோள்களில் சூரியன், சந்திரன், புதன் வழிபட்ட திருத்தலம். இங்கு வழிபட்ட பிரம்மனுக்கு அம்பாள் வித்தையை உபதேசித்தாள்; ஆதலின் அம்பாளுக்கு பிரம்ம வித்யாம்பிகை என்று பெயர் வந்தது.
20. செப்பறையில் அமைந்துள்ள நடராச சபை
நடராசசபை தில்லையைப் போலச் செப்பறையில் அமைந்துள்ளது; உள்ளே உள்ள ஸ்படிக லிங்கத்திற்கு தில்லையைப் போலவே நாள்தோறும் அபிஷேகம் நடைபெறுகிறது. சிதம்பர இரகசியமும் உள்ளது. நவ தாண்டவங்களை (ஆனந்த தாண்டவம், காளி ந்ருத்தம், கௌரீ தாண்டவம், முனி ந்ருத்தம், சந்தியா தாண்டவம், திரிபுர தாண்டவம், புஜங்க லலிதம், சம்ஹார தாண்டவம், பைஷாடனம்) நடராஜ மூர்த்தி இங்கு ஆடினாராம். சிதம்பரத்தில் சகுணமாக ஆடி முக்தியைத் தரும் மூர்த்தி, இங்கு நிர்குணமாக ஆடி இம்மைக்கும்
மறுமைக்கும் பலன்களை அளிக்கிறார்.
21. பதினான்கு சலங்கைகள்
இவரது காலில் பதினான்கு சலங்கைகள் உள்ள காப்பு காணப்படுகிறது. பதினான்கு புவனங்களும் அவர் அசைந்தால் மட்டுமே அசையும் என்பதை இது காட்டுகிறது. இடுப்பில் அணிந்துள்ள 81 வளையங்கள் உள்ள அரை ஞாண், பிரணவம் முதலான 81 பத மந்திரங்களை உணர்த்தும். 28 எலும்பு மணிகளை அணிந்திருப்பது, 28 சதுர் யுகங்கள் முடிந்திருப்பதைக் காட்டுகிறது. ஜடாமுடி பதினாறு கலைகளை உணர்த்துவதாக உள்ளது. அதில் 15 சடைகள் பின்னால் தொங்குகின்றன. ஒன்று மட்டும் கட்டப்பட்டுள்ளது. திருமுடியில் மயில் பீலியும், கங்கையும், இளம் பிறைச் சந்திரனும், ஊமத்தம் பூவும், வெள்ளெருக்கும் இருக்கின்றன. நெற்றிக்கண் அழகாகத் தெரிகிறது. சிதம்பரத்தைப் போலவே, ரஹஸ்யமும், ஸ்படிகலிங்க பூஜையும் நடைபெறுகின்றன. இங்கு ஆனித் திருமஞ்சனம் சிறப்பு.
22. பேரூரில் ஆனித்திருமஞ்சனம்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் பேரூரில் அமைந்து இருக்கும் கோயில் பேரூர் பட்டீசுவரர் கோயில். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற இக்கோயில் கோவை மாநகரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் நொய்யல் ஆற்றை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு சிவபெருமான் பட்டீசுவரர் என்ற பெயருடன் பச்சை நாயகி அம்மன் துணையுடன் அருள்பாலிக்கிறார். இங்கிருக்கும் லிங்கம் சுயம்பு லிங்கம்.
தமிழர்களின் சிற்பக்கலைக்கு சான்றாக இத்திருக்கோயிலின் தூண்கள் அமைந்துள்ளன. இத்திருக்கோயிலின் புராதனப் பெயர் பிப்பலாரண்யம் (பிப்பலம்=அரசமரம்; ஆரண்யம்=காடு). மேலும், காமதேனுபுரி, பட்டிபுரி, ஆதிபுரி, தட்சிண கயிலாயம், தவசித்திபுரம், ஞானபுரம், சுகலமாபுரம், கல்யாணபுரம், பிறவா நெறித்தலம், பசுபதிபுரம், மேலை சிதம்பரம் போன்ற மற்ற பெயர்களும் வழங்கப்படுகின்றன.
23. நான் இருக்கும் இடத்தை சொல்லாதே
சகலமும் தானே என்ற தத்துவத்தை சுந்தரருக்கு உணர்த்த எண்ணிய சிவபெருமான், சுந்தரர் பேரூர் வந்திருந்தபோது விவசாயியாக அவதாரமெடுத்தார். சிவபெருமானும் அம்பாளும் விவசாயிகள் கோலத்தில் நாற்று நடச் சென்றனர். தனது பக்தரான சுந்தரரைப் பற்றி நன்கு அறிந்த சிவபெருமான் ‘சுந்தரன் வந்து கேட்டால் நான் இருக்கும் இடத்தை சொல்லாதே’ என்று நந்தி தேவரை எச்சரித்துவிட்டு சென்றார். இறைவனை தரிசிக்க கோயிலுக்கு வந்த சுந்தரமூர்த்தி நாயனார், கோயிலில் இறைவனை காணாமல் நந்தி தேவரை விசாரித்தார். சிவபெருமானின் எச்சரிக்கையையும் மீறி நந்தி தேவர் சுந்தரரிடம் இறைவன் இருக்குமிடத்தை கூறிவிட்டார்.
24. நாற்று நடவு விழா
சுந்தரரும் நதிக்கரையில் நாற்று நட்டுக் கொண்டிருந்த சிவபெருமானை தரிசித்து மகிழ்ந்தார். நந்தி தம் சொல் மீறியதற்காகக் கோபம் கொண்டு, கையிலிருந்த மண் வெட்டியால் நந்தியின் தாடையில் சிவபெருமான் அடித்து விட்டார். (இந்தக் கோயிலில் நந்தி தேவரின் தாடை சற்று சப்பையாகக் காட்சியளிக்கிறது). பிறகு நந்தி தேவர், மன்னிப்பு வேண்டி தவமிருக்க, தனது தாண்டவ தரிசனத்தை அவருக்கு சிவபெருமான் அருளினார். திருப்பேரூர் பட்டீசுவரர் கோயிலில் ஆண்டுக்கொரு முறை நாற்று நடும் விழா ஆனி மாதத்தில் கிருத்திகை தொடங்கி பூராட நட்சத்திரத்தில் நாற்று நடவும், உத்திரத்தில் திருமஞ்சனமும் கோலாகலமாய் நடக்கிறது.
25. திருஆலங்காட்டில் ஆனித் திருமஞ்சனம்
நடராஜர் தாண்டவம் ஆடும் பஞ்ச சபைகள்:
1) ரத்தின சபை – திருவாலங்காடு.
2) கனகசபை சிதம்பரம்.
3) ரஜிதசபை – (வெள்ளி சபை) – மதுரை.
4) தாமிரசபை – திருநெல்வேலி.
5) சித்திரசபை – திருக்குற்றாலம்.
இதில் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருவாலங்காடு ரத்தின சபை சிறப்பு. வட ஆரண்யேஸ்வரர் கோயில் என்று சொல்வார்கள். திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இச்சிவாலயத்தின் மூலவர் வட ஆரண்யேஸ்வரர், தாயார் வண்டார்குழலி.
பங்குனி உத்திரத்திற்கு 10 நாட்கள் பிரம்மோற்சவம் பங்குனி சுவாதி நட்சத்திரத்தன்று காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழா நடைபெறும். சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நடராஜ பெருமான் நித்தமும் நடமாடும் ஐம்பெரும் அம்பலங்களில் ரத்தின சபை என்பதால் ஆனி திருமஞ்சனம் இங்கு சிறப்பு. இனி மறுபடியும் சிதம்பரம் வருவோம்.
26. ஆறு நாட்கள் அபிஷேகம்
சிதம்பரம் ஸ்ரீ சிவகாம சுந்தரி சமேத ஆனந்த நடராஜ மூர்த்திக்கு வருடத்தில் ஆறு நாட்கள் அபிஷேகம் நடைபெறும். மார்கழித் திருவாதிரையிலும் ஆனி உத்திர நட்சத்திரத்தன்றும் அதிகாலையில் அபிஷேகம் நடக்கும். சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் உச்சிக் காலத்திலும், ஆனித் திருமஞ்சனம் உத்திர நட்சத்திரத்தில் பிரதோஷ காலத்திலும், ஆவணி மாதம் சதுர்த்தசி திதியன்று சாய ரட்சை காலத்திலும், புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதியில் அர்த்த ஜாமத்திலும், மார்கழியில் திருவாதிரை நட்சத்திரத்தன்று நள்ளிரவிலும், மாசி மாதம் சதுர்த்தசி திதியில் கால சந்தியிலும் அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெறும்.
27. நடராஜர் தத்துவம் என்ன?
ஆனி திருமஞ்சனம் நடராஜருக்குத்தானே. நடராஜ தத்துவம் என்ன? நடராஜ தத்துவம் என்பது ஆனந்த தாண்டவம் (cosmic dance) ஆடும் நடராசரின் தோற்றத்தினை விளக்குவதாகும். இதனை பிரபஞ்ச நடனம் என்பார்கள். இறைவனின் அசைவால்தான் அனைத்தும் அசைகின்றன. உலக இயக்கம் நடராஜர் நடனத்தில் இருக்கிறது. நடராசரின் தோற்றத்தில் பஞ்ச பூதங்கள், அஷ்ட மூர்த்திகள், அனைத்து தெய்வ அம்சம் அண்ட சராசரங்கள், தெய்வ தத்துவங்களும் அடக்கம். நடராஜரின் கூத்து குறித்து சிதம்பர தத்துவம் குறித்தும் இப்படி விவரிக்கிறார் திருமூலர்.
ஆனந்தம் ஆடரங்கு ஆனந்தம் பாடல்கள்
ஆனந்தம் பல்லியம் ஆனந்தம் வாச்சியம்
ஆனந்தமாக அகில சராசரம்
ஆனந்தம் ஆனந்தக் கூத்துகந் தானுக்கே.
28. சிதம்பரத் தேர்
ஆனித் திருமஞ்சன விழாவை சிதம்பரத்தில் ஆரம்பித்து வைத்தவர் பதஞ்சலி மகரிஷி. சிதம்பரம் ஆலயத்தில் ஆதிமூலவர் சந்திர மௌலீஸ்வரருக்கு ஆறுகால பூஜைகள் வெகு விமர்சையாக நடக்கும். அப்போது கனக சபையில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இது முடிந்த பின் சிவகாமியம்மை சமேத நடராஜருக்கு 16 வகை தீபங்களால் ஆராதனை காட்டப்படும் பத்து நாட்கள் சிறப்பாக நடக்கும் விழாவில் 9ம் நாள் தேரோட்டம் மிக முக்கியமானது.
தேர்த் திருவிழாவில் பஞ்ச மூர்த்திகளும் 5 தேர்களில் எழுந்தருளி உலா வருவது கண்கொள்ளாக்காட்சி. மூலவர் நடராஜரே தேரில் எழுந்தருளி 4 மாட வீதிகளிலும் உலா வரும் அதிசயம் இங்கு மட்டுமே நடக்கிறது. தேர் வீதியுலா ஆயிரம் கால் மண்டபம் வந்தடைய நடு இரவாகிவிடும். இந்த மண்டபத்திற்கு ராஜசபையில் நடராஜரும் சிவகாமியம்மையும் தங்குவார்கள். மறுநாள் திருமஞ்சனம் நடைபெறும்.
29. நடராஜர் அபிஷேகம் எப்படி நடக்கும்?
இங்கு முதல் நாள் முதல் எட்டாம் திருவிழா வரை உற்ஸவ மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சோமாஸ் கந்தர், சிவானந்த நாயகி, சண்டேசுவரர் முதலிய பஞ்ச மூர்த்திகளும் வாகனங்களில் எழுந்தருள்வர். ஒன்பதாம் நாளில் பஞ்ச மூர்த்திகள் அனைவரும் ஐந்து தேர்களில் பவனி வருவார்கள். நடராஜப்பெருமான் திருத்தேரில் எழுந்தருளி நான்கு வீதிகளில் உலாவந்த பின்னர் இரவில் ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் தங்குவார்.
ஆனி உத்திரமான பத்தாம் நாளன்று வைகறையில் ஆனித் திருமஞ்சன அபிஷேகம் பல மணி நேரம் விமரிசையாக நடைபெறும். இதற்காக பல ஊர்களிலிருந்து மட்டும் அல்ல, பல நாடுகளிலிருந்தும் வந்து தரிசிப்போர் உண்டு. அபிஷேகத்துக்குப் பின் ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு பூஜை நடைபெறும். உச்சி வேளையில் (மதியம்) நடராஜர் ஆனந்த நடனம் ஆடியபடியே சித்சபையில் எழுந்தருள்வார்.
அவருடன் சிவகாமி அம்மையும் இருப்பாள். அப்போது பல்வேறு மங்கல வாத்திய ஓசைகள், நமக்கு கைலாயத்தில் இருப்பதைப் போன்ற உணர்வை உண்டாக்கும். பின் மகாதீபாராதனை நடக்கும். இரவு யாகசாலையில் பத்து நாட்களாக வைத்து வழிபாடு இயற்றிய கலசங்களில் உள்ள நீரைக் கொண்டு வந்து சபையில் உள்ள ஸ்படிகலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் மரபு. பின்னர் சுப்ரமணியர் முன்னிலையில் கொடி இறக்க நிகழ்ச்சி நடைபெறும்.
அதன் பின்னர் சுப்பிரமணியர், அஸ்திராஜர் ஆகிய இருவரும் வீதிவலம் செல்ல, ஆசாரியர்கள் திக்குகளுக்கு உணவுப் பலியிட்டு விழாவை இனிது முடித்து வைப்பர். திருவிழாவில் பங்கு பெற்ற மூர்த்திகள் விடைபெறும் விழா விடையாற்றி உற்சவம் என்பது. தில்லையில் 11ஆம் நாள் இரவு இவ்விழா நடைபெறும். ஆனி மாதத்தில் சோமாஸ்கந்தர் சிவானந்த வல்லி சுப்பிரமணியர் மூவர் மட்டுமே முறையே இந்திர விமானம், பல்லக்குகளில் எழுந்தருளி வீதி வலம் வருவர்.
30. தில்லையும் திருவரங்கமும்
ஆனி மாதத்தில் சிவன் கோயில்களைப் போலவே பெருமாள் கோயில்களிலும் திருமஞ்சன வைபவம் உண்டு. அங்கு நடைபெறும் ஆனித் திருமஞ்சனத்திற்கு ஜேஷ்டாபிஷேகம் என்று பெயர். ஆனி மாதத்தில் கேட்டை நட்சத்திரத்தன்று பெரிய பெருமாளான ஸ்ரீ ரங்கநாதருக்கு ஜேஷ்டாபிஷேகம் மிகச்சிறப்பாக நடைபெறும். இத்திருமஞ்சனத்தின் போது பெருமாளின் திருக்கவசங்களை யெல்லாம் களைந்துவிட்டு ஏகாந்தத் திருமஞ்சனம் செய்வார்கள்.
இதை சேவிப்பது மிகவும் விசேஷம். இதனை பெரிய திருமஞ்சனம் என்பர். ஸ்ரீரங்கம் கோயிலின் தென்புறத்தில் ஓடும் காவிரி நதியில் வேத மந்திரங்கள் முழங்க நீர் சேகரிப்பார்கள். தங்கக் குடத்தில் நீர் நிரப்பி யானையின் மீதும்; வெள்ளிக்குடங்களில் நிறைத்த நீரை கோயில் பரிசாரகர்கள் தலையில் சுமந்தும் எடுத்து வருவார்கள். திருமஞ்சனம் நடைபெற்றதும் பெரிய பெருமாளுக்கு தைலக்காப்பு இடுவார்கள். திருமுக மண்டலத்தைத் தவிர மற்ற திருமேனியை இந்த நாளில் தரிசிக்க முடியாமல் திரையிட்டிருப்பார்கள். திரு மஞ்சனத்திற்கு அடுத்த நாள் கோயிலில் பெருமாளுக்காக சிறப்பு மிக்க பிரசாதத்தை நைவேத்தியம் செய்தபின் பக்தர்களுக்கு அளிப்பார்கள். ஆனித் திருமஞ்சன அபிஷேகத்தின் போது நடராஜப் பெருமானையும், ரங்கநாதப் பெருமாளையும் தரிசிப்போர் பேறு பெற்றவர்கள்.
தொகுப்பு: எஸ். கோகுலாச்சாரி
The post முத்துக்கள் முப்பது appeared first on Dinakaran.