- கடந்த
- ஜகன் மோகன்
- ஆந்திரப் பிரதேசம்
- முதல் அமைச்சர்
- சந்திரபாபு நாயுடு
- திருமலா
- ஆந்திரா
- அமராவதி
- தின மலர்
*வெள்ளை அறிக்கை வெளியிட்டார், முதல்வர் சந்திரபாபு நாயுடு
திருமலை : ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் மின்துறையில் மக்களுக்கும், அரசுக்கும் ரூ.1,29,503 கோடி இழப்பு ஏற்பட்டது என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு வெள்ளை அறிக்கை வெளியிட்டு உள்ளார். ஆந்திர மாநிலம் அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு மின்சாரத் துறை குறித்த வெள்ளை அறிக்கையை நேற்று வெளியிட்டார்.
அப்போது வெள்ளை அறிக்கை குறித்து விவரித்து அவர் பேசியதாவது: வருங்கால சந்ததியினரின் எதிர்காலத்தை கடந்த அரசு எப்படி சீரழித்துள்ளது என்பதை விவரித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறேன். ஒவ்வொருவரின் வாழ்க்கையும் மின்சாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஐந்தாண்டுகளில் மின்துறை முற்றிலும் சீரழிந்தது. திறமையற்ற ஆட்சியில் என்ன நடக்கும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மின் சீர்திருத்தங்களால் எனது அதிகாரத்தை இழந்தாலும் மாநிலம் முன்னேறியது. நான் கொண்டு வந்த சீர்திருத்தங்கள் ராஜசேகர்ரெட்டி ஆட்சிக் காலத்தில் தான் பார்க்கப்பட்டது. எங்கள் ஆட்சிக் காலத்தில் தரமான மின்சாரம் வழங்கியுள்ளோம்.
மின் கட்டணத்தை உயர்த்தாமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். 2014-2019ல் சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தியை அதிகரித்தோம். 2018ம் ஆண்டுக்குள் ஆந்திர மாநிலம் மின் உபரி மாநிலமாக மாறியது. 2018-2019 ஆம் ஆண்டிற்குள் 14,929 மெகாவாட் மின் உற்பத்தியை இலக்காக கொண்டிருந்தோம். எனது ஆட்சி காலத்தில் மின் உற்பத்தி நிறுவனங்களான டிரான்ஸ்கோ, ஜென்கோவுக்கு விருதுகள் வந்தது.
கடந்த ஐந்தாண்டுகளில் ரூ.32,166 கோடி கட்டண உயர்வால் மக்கள் மீது சுமையை ஏற்றப்பட்டது. மின் துறையில் ரூ.49,596 கோடி கடன் ஏற்பட்டுள்ளது. கட்டண உயர்வால் 1 கோடியே 53 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 யூனிட் பயன்படுத்திய ஏழைகளுக்கு நூறு சதவீத கட்டணம் உயர்த்தப்பட்டது. ஐந்தாண்டுகளில் மின் நிறுவனங்களின் கடன் 79 சதவீதம் அதிகரித்துள்ளது.
சில சமயங்களில் உற்பத்தியை நிறுத்தி எடுக்கப்பட்ட முடிவுகளும் மக்களுக்குச் கட்டண சுமையை ஏற்படுத்தியது. நீதிமன்ற உத்தரவுப்படி பராமரிப்பு கட்டணமாக ரூ.9 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டுள்ளது. காற்றாலை மின்சாரத்தில் 21 ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திறமையற்ற நிர்வாகத்தால் மின் துறை ரூ.47,741 கோடிகளை இழந்துள்ளது. மின்துறையில் மக்களுக்கும், அரசுக்கும் ரூ.1,29,503 கோடி இழப்பு ஏற்பட்டது.
மின் வினியோகத்தில் ஏற்படும் இழப்பை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மின் துறையை வலுப்படுத்த வேண்டும். இதற்காக தொழில்நுட்ப உதவியை பெறுவோம். ஜெகனின் ஆணவத்தால், போலவரம் திட்டம் தாமதப்படுத்தப்பட்டதால் மட்டும் ரூ.4,773 கோடி கூடுதல் சுமை அரசின் மீது ஏற்பட்டுள்ளது. எஸ்இசியில் இருந்து 7,000 மெகாவாட்கள் வாங்கப்படுவதால், ஒரு பரிமாற்றத்திற்கு கூடுதலாக ரூ.3,850 கோடி முதல் ரூ.4,350 கோடி வரை செலுத்த வேண்டியிருக்கிறது.
கடந்த அரசின் கையாலாகாத்தனத்தால் மின் உற்பத்தி நிறுவனங்கள் எதிர்பாராத வகையில் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. ஆந்திர மதுபான கார்ப்பரேஷன், ஆந்திர மின் உற்பத்தி நிறுவனங்களானஜென்கோ மற்றும் டிரான்ஸ்கோ மூலம் பாண்டு பத்திரத்தில் முதலீடு செய்துள்ளனர். மாநிலத்தில் கடந்த ஆட்சியில் செய்த மோசடி குறித்து அனைத்து துறைகளிலும் தோண்டினால் அது எவ்வளவு ஆழமானது என்பது புரியவில்லை.
நலத்திட்டமும், வளர்ச்சியும் சமமாக இருக்க வேண்டும். மக்களுக்கு உண்மை நிலையை எடுத்துரைப்பது தனது பொறுப்பு. அனைவரது கருத்துக்களையும் எடுத்துக்கொண்டு முன்னேறுவோம். சூரிய ஒளி மின்சாரத்தை பயன்படுத்தாமல் விட்டதால் ரூ.9 ஆயிரம் கோடி செலுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. மின்வாரிய ஊழியர்களின் பிஎப் நிதி பணத்தை கூட எடுத்து நலத்திட்டத்திற்கு வழங்க முடிவு செய்துள்ளனர்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அந்த பணம் தப்பியது. மின்சாரத் துறையில் வளர்ச்சி இல்லாததால் தொழில் வளர்ச்சி நின்றுவிட்டதாக முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். இந்த நிலையில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசித்து வருகிறோம். இது ஒரு பெரிய சவால் மிகுந்த பயிற்சி. எனது அரசியல் வாழ்க்கையில் இப்படியொரு நிலையை நான் பார்த்ததில்லை.
நான்காவது முறையாக முதல்வராகி உள்ளேன். இதுபோன்ற சூழ்நிலையை இதுவரை சந்தித்ததில்லை. இருப்பினும் மின்வெட்டு எங்கும் இருக்கக்கூடாது. குறைந்த மின்னழுத்தம் இல்லாத வகையில் தரமான மின்சாரம் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எங்கு இருந்தும் எந்த புகாரையும் விட மாட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.
எதிர்காலத்தில் மின்சார வாகனங்கள் அதிகரிக்கும்
கூடிய விரைவில் மின்துறை நஷ்டத்தில் இருந்து லாபத்தில் மீட்டெடுக்கப்படும். எதிர்காலத்தில் மின்சார வாகனங்கள் அதிகரிக்கும். மின்சார வாகனங்களின் தேவைக்கேற்ப மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். விவசாய பம்ப்செட்களுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் குறித்து விரைவில் முடிவு செய்வோம். அனல் மின்சாரத்தை பச்சை ஹைட்ரஜனாக மாற்ற பல அமைப்புகள் முன் வருகின்றன. பச்சை ஹைட்ரஜன் கிடைத்தால் கூடுதல் வரி கிடைக்கும். சூரிய சக்தி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
The post ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் மின்துறையில் மக்களுக்கும், அரசுக்கும் ₹1,29,503 கோடி இழப்பு ஏற்பட்டது appeared first on Dinakaran.