புதுடெல்லி: ஏசி வசதி அல்லாத 10,000 பெட்டிகளை தயாரிக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “ரயில்களில் பயணிக்கும் சாமானிய மக்களின் பிரச்னைகளை கருத்தில் கொண்டு 2024-25 மற்றும் 2025-26 நிதியாண்டுகளில் மொத்தம் 10,000 ஏசி அல்லாத கூடுதல் பெட்டிகளை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில்(2024-25) 4,485 ஏசி அல்லாத பெட்டிகளையும், 2025-26 நிதியாண்டில் 5,444 ஏசி அல்லாத பெட்டிகளையும் தயாரிக்க முடிவு செய்து அதற்கான உற்பத்தியை அதிகரிக்க தொடங்கி உள்ளது.
அதன்படி 2024-25 நிதியாண்டில் 2,605 பொதுப்பெட்டிகள் தயாரிக்கப்படும். பயணிகளின் வசதியை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட சிறப்பு அம்ரித் பாரத் சிறப்பு கோச்களும் இதில் அடங்கும். மேலும் 1,470 ஏசி அல்லாத ஸ்லீப்பர் கோச்சுகள், 323 எஸ்எல்ஆர்(சிட்டிங்-கம்-லக்கேஜ்-ரேக்) பெட்டிகள், அம்ரித் பாரத் கோச்சுகள், 32 அதிக திறன் கொண்ட பார்சல் வேன்கள் தயாரிக்கப்படும். இதேபோல் 2025-26 நிதியாண்டில் 2,710 பொதுப்பெட்டிகள், 1,910 ஏசி அல்லாத ஸ்லீப்பர் பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ரயில் பயணிகளுக்கு சந்தோஷமான செய்தி ஏசி வசதி இல்லாத 10,000 பெட்டிகள் தயாரிப்பு: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு appeared first on Dinakaran.
