புதுடெல்லி: நாடு முழுவதும் ரூ.85 லட்சம் கோடி திட்டங்கள் தேக்கம் அடைந்துள்ள நிலையில் அதற்கு காரணமாக நிலம் கையகப்படுத்தும் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று ஒன்றிய அமைச்சரவை செயலாளர் டி.வி.சோமநாதன் தெரிவித்தார். ஒன்றிய அமைச்சரவைச் செயலாளர் டி. வி. சோமநாதன், அமைச்சரவைச் செயலகத்தின் ஒருங்கிணைப்புச் செயலாளர் மனோஜ் கோவில், மின்சாரத் துறைச் செயலாளர் பங்கஜ் அகர்வால், டிபிஐஐடி-யின் செயலாளர் அமர்தீப் சிங் பாட்டியா, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறைச் செயலாளர் சஞ்சய் ஜாஜு ஆகியோர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது டி.வி.சோமநாதன் கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ‘செயல்திறன் மிக்க ஆளுகை மற்றும் சரியான நேரத்தில் செயல்படுத்துதல்’ (பிரகதி) ஆய்வுக் கூட்டங்களின் போது, ரூ. 85 லட்சம் கோடி மதிப்புள்ள 3,300க்கும் மேற்பட்ட திட்டங்கள் தேக்கம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது 7,735 சிக்கல்கள் எழுப்பப்பட்டு, அவற்றில் 7,156 சிக்கல்கள் தீர்க்கப்பட்டது. ‘பிரகதி’ என்பது பல்வேறு காரணங்களால் தாமதமான திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான ஒரு ஆய்வுக்கூட்ட வழிமுறையாகும். வழக்கமான சிக்கல்கள் அமைச்சக மட்டத்தில் தீர்க்கப்படுகின்றன, அதே சமயம் சிக்கலான மற்றும் முக்கியமான சிக்கல்கள் அதன் மூலம் ஆய்வுக்காக உயர் மட்டத்திற்கு அனுப்பப்படுகின்றன. முடிவுகளை சரியான நேரத்தில் செயல்படுத்துவதை உறுதிசெய்யும் பல அடுக்கு பின்தொடர் வழிமுறையை ‘பிரகதி’ கொண்டுள்ளது.
திட்டங்கள் அமைச்சரவைச் செயலகத்தால் கண்காணிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் திட்டங்கள் மற்றும் குறைகள் அமைச்சக மட்டத்தில், பிரதமர் அலுவலகத்தின் தொடர்ச்சியான மேற்பார்வையுடன், இறுதியாக பிரதமரின் மட்டத்தில் ஆய்வு செய்யப்படுகின்றன. ‘பிரகதி’ மூலம் தீர்க்கப்பட்ட 7,156 சிக்கல்களில், 35 சதவீதம் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பானது. 20 சதவீதம் காடு, வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான சிக்கல்கள், 18 சதவீதம் பயன்பாட்டு உரிமை/வழித்தடம் பற்றியது, மற்ற திட்டங்கள் சட்டம் ஒழுங்கு, கட்டுமானம், மின்சாரப் பயன்பாட்டு ஒப்புதல்கள் மற்றும் நிதி விஷயங்கள் காரணமாக தாமதமானது.
திட்டங்களை உரிய நேரத்தில் செயல்படுத்துவதில் மிகப்பெரிய தடையாக உருவெடுத்துள்ள நிலம் கையகப்படுத்தும் கொள்கையை மறுஆய்வு செய்ய அல்லது மாற்ற எந்தத் திட்டமும் இல்லை. ரூ. 500 கோடிக்கு மேல் மதிப்புள்ள அனைத்துத் திட்டங்களும் ‘பிரகதி’ தளத்தால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. அனைத்து மாநிலங்களும், அவற்றின் அரசியல் நிலைப்பாடுகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் திட்டங்களை முடிக்க விரும்புகின்றன, மேலும் அனைத்து தலைமைச் செயலாளர்களும் சிக்கல்களைத் தீர்ப்பதில் மிகவும் ஒத்துழைப்புடன் செயல்பட்டுள்ளனர்.
‘ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு’, ‘பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா’, ‘பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா’, ‘பிரதம மந்திரி ஸ்வநிதி யோஜனா’, ‘தூய்மை இந்தியா இயக்கம்’ போன்ற 61 அரசுத் திட்டங்கள் மற்றும் 36 துறைகள் தொடர்பான குறைகள் மறுஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன. பிரதமரின் பிரகதி திட்டத்தின் கீழ் 382 திட்டங்கள் பிரதமரால் மறுஆய்வு செய்யப்பட்டுள்ளன என்றும், இந்தத் திட்டங்களில் எழுப்பப்பட்ட 3,187 சிக்கல்களில் 2,958 தீர்க்கப்பட்டுள்ளன. இந்த 382 திட்டங்களில், 114 சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் தொடர்பானவை, 109 ரயில்வே தொடர்பானவை, 54 மின்சாரம் தொடர்பானவை, பெட்ரோலியம் மற்றும் நிலக்கரி தலா 20, 17 வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு தொடர்பானவை மற்றும் 13 சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் தொடர்பானவை. இவ்வாறு கூறினார்.
