×

வரத்து அதிகரிப்பால் பீன்ஸ் விலையில் சரிவு வேலூர் நேதாஜி மார்க்கெட்டில்

வேலூர், ஜூலை 9: வேலூர் நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் பீன்ஸ் விலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு சரிவு ஏற்பட்டது. வேலூர் நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் கடந்த சில மாதங்களாகவே காய்கறிகளின் விலை உச்ச நிலையில் உள்ளது. குறிப்பாக பீன்ஸ், பூண்டு, இஞ்சி, முருங்கை போன்ற காய்கறி வகைகளின் விலையில் அதிகபட்ச உயர்வு காணப்படுகிறது. இதற்கு மழையின்மை, அதிக விளைச்சல் இல்லாதது போன்ற பல காரணங்கள் கூறப்படுகிறது. இதனால் வேலூர் நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் கடந்த சில மாதங்களாக பீன்ஸ் கிலோ ஒன்று ₹100 முதல் ₹200 வரை விற்பனையானது. அதேபோல் முருங்கையின் விலை கிலோ ஒன்று ₹80 முதல் ₹200 வரை விற்பனையானது. ஆனால் இன்று முருங்கை கிலோ ₹130 என விற்றது. பூண்டு ₹230 வரை ஏற்றம் இறக்கமாகவே காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பீன்ஸ் விலையில் நேற்று சற்று சரிவு காணப்பட்டது.

நேற்று காலை கிலோ பீன்ஸ் ₹50 முதல் ₹80 வரை விற்றது. அதேபோல் அவரையின் விலையில் சற்று உயர்வு காணப்பட்டது. இது கிலோ ஒன்று ₹80 முதல் ₹90 வரை விற்றது. கத்தரிக்காய் கிலோ ₹70 ஆகவும், கருணை கிலோ ₹80 ஆகவும், கேரட் கிலோ ₹50 முதல் ₹80 ஆகவும் விற்றது. இதுபோல் அனைத்து காய்கறி விலைகளும் உயர்ந்திருந்ததால் நுகர்வோர் பெரிதும் கவலைக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து நேதாஜி மார்க்கெட் காய்கறி வியாபாரிகளிடம் கேட்டபோது, ‘பொதுவாகவே அனைத்து வகை காய்கறிகளின் விலையும் கடந்த சில மாதங்களாக அதிகரித்தே காணப்படுகிறது. இதற்கு விளைச்சல் பாதிப்பு காரணமாகும். அதேநேரத்தில் கடந்த 2 நாட்களாக பீன்ஸ் வரத்து அதிகரித்துள்ளது. அதனால் அதன் விலையில் சிறிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது’ என்றனர்.

The post வரத்து அதிகரிப்பால் பீன்ஸ் விலையில் சரிவு வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் appeared first on Dinakaran.

Tags : Vellore Netaji ,Vellore ,Vellore Netaji Vegetable Market ,Dinakaran ,
× RELATED 2ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி...