×

தலைமை ஆசிரியர் அறையை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் செங்கம் அருகே பரபரப்பு கொட்டகுளம் அரசு உயர்நிலைப்பள்ளியில்

செங்கம், ஜூலை 9: செங்கம் அருகே கொட்டகுளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் அறையை பூட்டி பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கொட்டகுளம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை 400 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட மொத்தம் 4 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பெரும்பாலான பாடப் பிரிவுகளுக்கு போதிய ஆசிரியர்களின் பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தை சரியாக நடத்தவில்லை என்று இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை 10க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளிக்கு வந்தனர். அப்போது தலைமை ஆசிரியர் லட்சுமியிடம் காலி பணியிடத்தை நிரப்பி மாணவர்களின் தேர்ச்சிக்கு வழிவகுக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தலைமை ஆசிரியர் பள்ளி வளாகத்தை விட்டு உடனடியாக வெளியே செல்லுங்கள் என்று கூறினாராம். மேலும் இதுதொடர்பாக பள்ளி மேலாண்மை குழு தலைவர் மகேஸ்வரியும் தலைமை ஆசிரியரிடம் இதுகுறித்து கேட்டபோது அவரிடமும் அலட்சியமாக பதில் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி கிராம மக்கள் தலைமை ஆசிரியர் அறையை தாழ்பாள் போட்டு பூட்டினர். இதைதொடர்ந்து தலைமை ஆசிரியரை பள்ளியில் இருந்து நீக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தலைமை ஆசிரியர் பள்ளியை விட்டு சென்றார். இதனால் சிறிதுநேரம் கழித்து பள்ளியில் இருந்து பெற்றோர்களும் கலைந்து சென்றனர். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளியில் 3 ஆசிரியர்கள் இருந்ததால் அவர்கள் வைத்து பள்ளி வழக்கம் போல் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post தலைமை ஆசிரியர் அறையை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் செங்கம் அருகே பரபரப்பு கொட்டகுளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் appeared first on Dinakaran.

Tags : Kottakulam Government High School ,Sengam ,Kottakulam ,Thiruvannamalai district ,Sengam Kottakulam Government High School ,
× RELATED புற்றுநோயால் உயிரிழந்த போலீஸ்காரர்...