×

எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி கொகைன் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த பெண் விமான நிலையத்தில் கைது

சென்னை: எத்தியோப்பியா நாட்டிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி மதிப்புள்ள கொகைன் போதைப்பொருள் சென்னை விமான நிலையத்தில் மத்திய போதை தடுப்பு பிரிவினரால் (என்.சி.பி) நேற்று பறிமுதல் செய்யப்பட்டது. சுங்கத்துறை மற்றும் என்சிபி அதிகாரிகள் இணைந்து நடத்திய இதற்கான சோதனையில், போதைப்பொருளை டிராலி பையின் அடிப்பாகத்தில், ரகசிய அறையில் மறைத்து வைத்திருந்த தென்னாப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டார். இந்த போதைப்பொருளை மும்பை மற்றும் டெல்லிக்கு ரயிலில் எடுத்துச் செல்வதற்காக சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்ததாக கடத்தல் கும்பலைச் சேர்ந்த பெண், பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னைக்கு வெளிநாடுகளில் இருந்து பெரிய அளவில் போதைப்பொருள்கள் கடத்தி வரப்படுவதாக, சென்னையில் உள்ள மத்திய போதை தடுப்பு பிரிவான என்சிபி எனப்படும் நார்கோடிக் கண்ட்ரோல் பீரோவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து என்சிபி அதிகாரிகள், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். தங்களுக்கு துணையாக, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கும் தகவல் அளித்து கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் எத்தியோப்பியா நாட்டுத் தலைநகர் அடீஸ்அபாபா நகரில் இருந்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று நேற்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.

அந்த விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் கண்காணித்துக் கொண்டிருந்தனர். அப்போது தென்னாப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த (Friedelin April) ப்ரீடெலின் ஏப்ரல் (54) என்ற பெண் பயணி சுற்றுலா விசாவில், எத்தியோப்பியாவிலிருந்து இந்த விமானத்தில் சென்னைக்கு வந்திருந்தார். அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்படவே அவரை விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று முழு பரிசோதனை நடத்தினர்.

அப்போது அவர் வைத்திருந்த ட்ராலி டைப் பையின் அடிப்பாகத்தில் ரகசிய அறை இருந்ததும், அதில் போதைப்பவுடர் இருந்ததையும் அதிகாரிகள் கண்டறிந்தனர். உடனடியாக அந்த பெண்ணை சுற்றிவளைத்து கைது செய்த என்சிபி அதிகாரிகள், பறிமுதல் செய்த போதைப் பவுடரை ரசாயன சோதனைக்கு உட்படுத்தினர். ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பி சோதிக்கப்பட்ட இந்த போதைப் பவுடர், சக்தி வாய்ந்த கொகைன் போதைப்பொருள் எனத் தெரியவந்தது. அந்த பெண் பயணி கடத்திவந்த போதைப்பொருளின் எடை ஒரு கிலோ என்றும், அதன் சர்வதேச மதிப்பு ரூ.10 கோடி என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து என்சிபி அதிகாரிகள் அந்த பெண்ணை தங்கள் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் பயணி, தான் போதைப்பொருள் கடத்தி வந்ததை ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த பெண் அளித்த வாக்குமூலம் குறித்து என்சிபி அதிகாரிகள் தெரிவித்த தகவல்கள்: சர்வதேச போதை கடத்தும் கும்பலிடம் இருந்து ப்ரீடெலின் ஏப்ரல் என்ற இந்த பெண், போதைப்பொருளை வாங்கி வந்துள்ளார். சர்வதேச கும்பலிடம் இந்த பெண், கான்ட்ராக்ட் முறையில் பணிபுரிந்து வந்துள்ளார்.

சர்வதேச கடத்தல் கும்பலிடம் தொடர்புடைய இவர், ஒவ்வொரு முறையும் போதைப்பொருளை கடத்தி வரும்போதும் கணிசமான ஊதியம் பெற்றுள்ளார். இந்த முறை போதைப்பொருளை, அடிஸ் அபாபாவிலிருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்திக் கொண்டு வந்து, சென்னையில் இருந்து ரயில் மூலம் மும்பைக்கு எடுத்துச் சென்று, அங்கு இந்த போதைப் பொருளில் பாதி அளவை ஒப்படைத்துவிட்டு, மீதிமுள்ள போதைப்பொருளை, மும்பையில் இருந்து ரயில் மூலம் டெல்லிக்கு எடுத்துச் சென்று, அங்கு போதைப்பொருள் விற்கும் கும்பலிடம் ஒப்படைக்க இருந்ததாகவும் கூறியுள்ளார். இந்த போதைப்பொருள் சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்டாலும், சென்னையில் யாரிடமும் இதைக் கொடுக்காமல், மும்பை, டெல்லிக்கு கடத்திச் செல்வது மட்டுமே தனது வேலை என்றும் அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

கடத்தல் பெண் குற்றவாளி ப்ரீடெலின் ஏப்ரல் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், என்சிபி அதிகாரிகள் மும்பை, டெல்லியில் உள்ள என்சிபி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, இந்த பெண்ணிடம் இருந்து மும்பை, டெல்லியில் போதைப்பொருளை வாங்க இருந்த நபர்கள் குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மும்பை, டெல்லிக்கு கொண்டு செல்ல வேண்டிய போதைப்பொருள், சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டதன் காரணம் குறித்தும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ரூ. 10 கோடி மதிப்புள்ள கொகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி கொகைன் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த பெண் விமான நிலையத்தில் கைது appeared first on Dinakaran.

Tags : Ethiopia ,Chennai ,Central Narcotics Control Bureau ,NCP ,Chennai airport ,Customs ,Dinakaran ,
× RELATED ஹாரன் ஒலி அதிகரித்தால் சிவப்பு...