- விக்கிரவாண்டி
- விழுப்புரம்
- விழுப்புரம் மாவட்டம்
- திமுக
- இளைஞர் செயலாளர்
- உதயநிதி ஸ்டாலின்
- பிஎம்சி
- அன்புமணி கேதார்
- நம் தமிழர் கட்சி
- சீமான் ஒரத்தூர்
- தின மலர்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இறுதி கட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விக்கிரவாண்டியிலும், பாமக தலைவர் அன்புமணி கெடாரிலும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரத்தூரிலும் பிரசாரத்தை முடித்தனர். தொடர்ந்து நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. வடக்கு மண்டல ஐ.ஜி. தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி காலமானதை தொடர்ந்து அந்த தொகுதிக்கு நாளை (10ம் தேதி) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தியா கூட்டணியில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா, தேஜ கூட்டணியில் பாமக வேட்பாளர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி அபிநயா மற்றும் சுயேச்சைகள் என 29 பேர் போட்டியிடுகின்றனர்.
திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த செல்வபெருந்தகை, திருமாவளவன், பாலகிருஷ்ணன், முத்தரசன், காதர்மொய்தீன், ஜவாஹிருல்லா ஆகியோர் ஏற்கனவே பிரசாரம் மேற்கொண்டனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார். பாமக வேட்பாளரை ஆதரித்து ராமதாஸ், அன்புமணி, சவுமியா அன்புமணி, அண்ணாமலை, டிடிவி தினகரன், நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் பிரசாரம் மேற்கொண்டனர்.
திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் பங்கேற்காத நிலையில் வீடியோவை வெளியிட்டு விக்கிரவாண்டியில் மிகப்பெரிய வெற்றியை தேடித்தரவும், சமூக நீதியை நிலைநாட்டிட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டிருந்தார். இதனிடையே கடைசி இரு நாட்களில் திமுக இளைஞரணி செயலாளரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 8 இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். நேற்று மாலை 5 மணி வரை இறுதி கட்டமாக தலைவர்கள் ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர்.
அதன்படி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விக்கிரவாண்டி பேரூராட்சி பகுதியிலும், பாமக வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து அக்கட்சி தலைவர் அன்புமணி கெடாரிலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரத்தூரிலும் இறுதிகட்ட பிரசாரத்தை முடித்தனர். தொடர்ந்து மாலை 6 மணிக்குள் வெளியூரிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள், அரசியல் கட்சியினர், தொகுதிக்கு சம்மந்தமில்லாத அனைவரையும் வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
மேலும் தங்கும் விடுதிகள், லாட்ஜ்கள், திருமண மண்டபங்களை சோதனை செய்து உறுதி செய்யவும் காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி இறுதிகட்ட பிரசாரம் முடிந்ததும் தொகுதியில் தங்கியிருந்தவர்கள் அனைவரும் வெளியேறினர். இதனை காவல்துறையினர் சோதனையிட்டு உறுதி செய்தனர். தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1,16,962 ஆண் வாக்காளர்கள், 1,20,040 பெண் வாக்காளர்கள், திருநங்கைகள் 29 பேர் என மொத்தம் 2,37,031 பேர் வாக்களிக்க உள்ளனர்.
தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் ஏற்கனவே தேர்தல் அலுவலகத்தில் தபால் வாக்கு செலுத்தினர். இதேபோல், 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்த விருப்பப்பட்டவர்களிடம் தபால் வாக்குகள் வீடு, வீடாக சென்று சேகரிக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. பதற்றமான, மிகபதற்றமான 44 வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவம் பாதுகாப்புக்கும், வெப் கேமரா பொருத்தப்பட்டு நுண்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு மண்டல ஐஜி நரேந்திர நாயர் தலைமையில் விழுப்புரம் சரக டிஐஜி திஷாமிட்டல், 3 எஸ்பிக்கள் மற்றும் கூடுதல் எஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள், 5 மாவட்ட போலீசார் என 1,500 பேர் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு முடிந்ததும் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு சொல்லப்படுகிறது. அங்கு வேட்பாளர்கள் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு துணை ராணுவம், ஆயுதப்படை, உள்ளூர் போலீசார் என 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
* 276 வாக்குச்சாவடிகளில் 1355 பேர் தேர்தல் பணி
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா ஒரு முதன்மை அலுவலர் மற்றும் 3 நிலைகளிலான வாக்குச்சாவடி அலுவலர்கள் என மொத்தம் 4 பேர் பணியாற்றுவர். அதன்படி, 276 வாக்குச்சாவடிகளில் 1,355 பேர் பணியில் ஈடுபடுகின்றனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் (ஈ.வி.எம்.), விவிபேட், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் அனைத்தும் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதற்கென ஒதுக்கப்பட்ட ஜி.பி.ஆர்.எஸ். கருவி பொருத்தப்பட்ட வாகனங்களில், மண்டல அலுவலர்களின் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்படும்.
The post இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது விக்கிரவாண்டியில் நாளை வாக்குப்பதிவு: அனைத்து முன்னேற்பாடுகளும் தயார்; ஐ.ஜி. தலைமையில் போலீஸ் பாதுகாப்பு appeared first on Dinakaran.