- அருண்
- ஆம்ஸ்ட்ராங்
- சென்னை
- தமிழ்
- தமிழ்நாடு
- டிஜிபி
- டேவிட்சன்
- சந்தீப் ராய் ரத்தோர்
- காவல் பயிற்சிக் கல்லூரி
- சந்தீப் ராய் ரத்தோர்
- சென்னை பெருநகர போலீஸ்
- ஆணையாளர்
- தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு
- சந்தீப் ராய்
- ரத்தோர் போலீஸ் பயிற்சி கல்லூரி
- தின மலர்
சென்னை: சென்னை பெருநகர போலீஸ் கமிஷனராக இருந்த டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு புதிய சென்னை பெருநகர போலீஸ் கமிஷனராக கூடுதல் டிஜிபி அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். போலீஸ் பயிற்சிக் கல்லூரி டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் ஆசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7 மணி அளவில் பெரும்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் தமிழகம் உட்பட நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேநேரம் ஆம்ஸ்ட்ராங்கை படுகொலை செய்த வழக்கில் இறந்த ரவுடி ஆற்காடு சுரேசின் சகோதரன் பொன்னை பாலு உட்பட 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதேநேரம் சென்னை பெருநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த சந்தீப் ராய் ரத்தோர் சென்னையில் சட்டம் ஒழுங்கில் முழு கவனம் செலுத்தவில்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை திட்டமிடப்பட்ட கொலை என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றவாளிகளை கைது செய்வதில் பெருநகர காவல்துறை சற்று மெத்தனமாக இருந்ததாக அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி இருந்தனர். அதனை தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை உள்துறை செயலாளர் அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அந்த ஆலோசனைக்கு பிறகு, சென்னை பெருநகர போலீஸ் கமிஷனராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக காவலர் பயிற்சி பள்ளி மற்றும் தமிழ்நாடு போலீஸ் அகாடமி டிஜிபியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதைதொடர்ந்து தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக உள்ள அருண், சென்னை பெருநகர போலீஸ் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், தமிழ்நாடு காவல்துறை தலைமையிட கூடுதல் டிஜிபியாக இருந்த டேவிட்சன் ஆசீர்வாதம் தமிழ்நாடு சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு உள்துறை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ளார்.
சென்னை போலீஸ் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ள கூடுதல் டிஜிபி அருண், தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இந்த போது, தமிழ்நாட்டில் ஜாதி மற்றும் மத மோதல்கள் இல்லை. தமிழ்நாடு முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரங்கள் போன்ற எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து, மதுவிலக்கு ஏடிஜிபி பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் விற்பனை முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் முதலில் 9 பேர் பலியான தகவல் வெளியான போதே கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமாரை தமிழக அரசு துரிதமாக பணியிட மாற்றம் செய்தது. ஆட்சியர் மட்டுமல்ல கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க தவறியதாக மாவட்ட கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மதுவிலக்கு அமலாக்க பிரிவை சேர்ந்த காவல் துணை கண்காணிப்பாளர் தமிழ் செல்வன், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் பாண்டிச்செல்வி, உதவி காவல் ஆய்வாளர் பராதி மற்றும் அப்பகுதி காவல் நிலை ஆய்வாளர் ஆனந்தன், உதவி காவல் ஆய்வாளர் ஷிவ்சந்திரன், காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் உள்ளிட்டவர்களும் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யும் வகையில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு ஆகியோர் உடனடியாக கள்ளக்குறிச்சிக்கு விரைந்தனர். கடந்த அதிமுக ஆட்சியை போல போலீஸ்கார்களை பாதுகாக்காமல் உடனுக்குடன் அவர்களை சஸ்பெண்ட், இடமாற்றம் போன்ற உத்தரவுகளை திமுக அரசு செயல்படுத்துகிறது என்பது கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் விஷயம்தான். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தபோது சம்மந்தப்பட்ட காவல் துறையினரை கூட இடமாற்றம், சஸ்பெண்ட் என முதல் கட்ட நடவடிக்கைகளை கூட அதிமுக அரசு எடுக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் குட்கா ஊழலில் தொடர்புடைய டிஜிபி ராஜேந்திரன், போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் போன்றவர்களை பாதுகாக்கும் பணியைதான் செய்தது.
கடந்த அதிமுக ஆட்சியில் சிறப்பு டி.ஜி.பியாக இருந்த ராஜேஷ் தாஸ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டெல்டா மாவட்டத்துக்கு சுற்றுப்பயணம் செய்தபோது அவரின் பாதுகாப்பு பணிக்காக போன போது டெல்டா மாவட்டத்தில் பணியாற்றிய பெண் எஸ்.பி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ராஜேஷ் தாஸ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், அவரை உடனடியாக அதிமுக அரசு சஸ்பெண்ட் கூட செய்யாமல் பாதுகாத்தது. ஜெயலலிதா ஆட்சியில் நள்ளிரவில் கலைஞர் கைது செய்த விவகாரம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கியது. அந்த கைதில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் கிறிஸ்டோபர் நெல்சன், கே.முத்துக்கருப்பன், எஸ்.ஜார்ஜ் ஆகியோரை ஒன்றிய அரசு பணிக்கு மாற்ற அன்றைய வாஜ்பாய் தலைமையிலான அரசு உத்தரவிட்டது.
ஆனால், அந்த உத்தரவைக் கூட மதிக்காமல் போலீஸ் அதிகாரிகளை பாதுகாத்தவர் தான் ஜெயலலிதா. இன்னும் சொல்லப் போனால் கலைஞர் கைது விவகரத்தில் தொடர்புடைய கிறிஸ்டோபர் நெல்சனுக்கு தகவல் ஆணையர் பதவி எல்லாம் கொடுத்து கவுரவித்தார்கள். இப்படியெல்லாம் போலீஸ் அதிகாரிகளை பாதுகாக்காமல் கடமை தவறிய போலீஸ் அதிகாரிகள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகளை எடுக்கிறது திமுக அரசு. அதேநேரம், மதுவிலக்கு மற்றும் குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி பதவியை அருண் கூடுதலாக கவனித்து வந்தார். அந்தப் பதவி குறித்தோ, தலைமையிட கூடுதல் டிஜிபி பதவி குறித்தோ இந்த உத்தரவில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் விரைவில் புதிய மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
* சென்னை போலீஸ் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டள்ள கூடுதல் டிஜிபி அருண், தமிழ்நாடு சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த போது, தமிழ்நாட்டில் ஜாதி மற்றும் மத மோதல்கள் இல்லை.
* தமிழ்நாடு முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
* கலவரங்கள் போன்ற எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை.
The post சென்னையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை எதிரொலி போலீஸ் கமிஷனராக அருண் நியமனம்: தமிழ்நாடு சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம்; சந்தீப் ராய் ரத்தோர் போலீஸ் பயிற்சி கல்லூரி டிஜிபியாக மாற்றம் appeared first on Dinakaran.