சென்னை: மருத்துவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடக்கவில்லை; இது முதன்முறையாக நடந்துள்ளது என சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த புற்றுநோய்துறை மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இருவரை போலீசார் கைது செய்தனர். குத்திவிட்டு தப்பி ஓட முயன்ற 25 வயது விக்னேஷ் இளைஞர் மற்றும் மற்றொரு நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்காததால் ஆத்திரத்தில் தனது நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து மருத்துவரை தாக்கியதாக போலீசார் விசாரணையில் தெரிவித்தனர்.
கத்திக்குத்துக்குள்ளான மருத்துவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவர் கத்தியால் தாக்கப்பட்ட கிண்டி அரசு மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்ட பின் காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; சென்னை கிண்டி மருத்துவமனையில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள 4 அரசு மருத்துவமனைகளில் தனித்தனி காவல்நிலையங்கள் செயல்படுகின்றன. கிண்டி அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடக்கவில்லை; இது முதன்முறையாக நடந்துள்ளது. மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞரின் தாயார் 6 மாதமாக மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் என தெரிவித்துள்ளார்.
The post மருத்துவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடக்கவில்லை; இது முதன்முறையாக நடந்துள்ளது: காவல் ஆணையர் அருண் விளக்கம் appeared first on Dinakaran.