×

வேளாங்கண்ணி- திருக்குவளை- திருத்துறைப்பூண்டி அகல ரயில் பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும்

திருத்துறைப்பூண்டி, ஜூலை 9: வேளாங்கண்ணியில் இருந்து திருத்துறைப்பூ ண்டி, திருக்குவளை வழியாக புதிய அகல ரயில்பாதை பணிகளை விரைந்து முடித்து புதிய ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தென்னக ரயில்வே பொது மேலாளர் மற்றும் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் ஆகியோருக்கு திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க தலைவர் வழக்கறிஞர் நாகராஜன், மாவட்ட செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது: வேளாங்கண்ணியில் இருந்து திருத்துறைப்பூண்டி, திருக்குவளை வழியாக புதிய அகல ரயில்பாதை அமைத்திட 2009ம் ஆண்டு ரயில்வே போர்டு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு 120 கோடி ரூபாய் நிதி நிலை அறிக்கையில் திட்ட ஒதுக்கீடாக நிதி ஒதுக்கப்பட்டது.சுமார் 28 கிலோமீட்டர் தூரம் உள்ள இந்த அகல ரயில் பாதை அமைக்கப்பட்டால் புதிய ரயில் பாதையாக உருவாகும். மேலப்பிடாகை, திருக்குவளை, மற்றும் எட்டுக்குடி போன்ற ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுஉள்ளது.

திருத்துறைப்பூண்டியில் இருந்து திருக்குவளை, வேளாங்கண்ணி வழியாக நாகப்பட்டினம் ரயில் நிலையத்துடன் இந்த ரயில் பாதை இணைக்கப்படுகிறது. 6 பெரிய பாலங்களும், 20 மதகு பாலங்களும், 18 சிறிய பாலங்களும், பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு விட்டது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சுமார் 14 வருடங்கள் ஆகிவிட்ட பின்னரும் புதிய அகல ரயில் பாதை அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. பணிகள் மெதுவாக நடைபெற்றதால் திட்டப்பணி செலவு கூடுதலாகி ரயில்வே துறை மீண்டும் 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி வேலையை துரிதப்படுத்த உத்தரவிட்டது.மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாகப்பட்டினம்- திருத்துறைப்பூண்டி அகல ரயில் பாதை மூலம் இணைக்கப்படுவதால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மார்த்தாண்டம் மற்றும் திருவனந்தபுரம் போன்ற கேரளா செல்லும் ரயில்கள் இந்த புதிய ரயில் பாதையான வேளாங்கண்ணி, திருத்துறைப்பூண்டி வழியே செல்வதால் சுமார் 50 கிலோமீட்டர் பயண தூரமும், பயண நேரமும் மற்றும் எரிபொருள் செலவும் மிகவும் குறையும்.

வேளாங்கண்ணியில் இருந்து திருத்துறைப்பூண்டி வரை போடப்படும் புதிய அகல ரயில் பாதையானது திருத்துறைப்பூண்டி- காரை க்குடி அகலரயில் பாதையுடன் இணைக்கப்படுவதால் ரயில் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ள பாதையாக இருக்கும்.திருத்துறைப்பூண்டியில் இருந்து காரைக்குடிக்கு அதிக போக்குவரத்து இல்லாத புதிய ரயில் பாதையாக இருப்பதால் திருவனந்தபுரம், கொல்லம் செல்லும் விரைவு ரயில்கள் எந்தவித தடங்கலும் இல்லாமல் விரைவாக குறிப்பிட்ட இடங்களை சென்றடைய முடியும்.நாகப்பட்டினம், வேளாங்கண்ணி மற்றும் திருத்துறைப்பூண்டி வழியாக கொச்சின் மற்றும் திருவனந்தபுரம் செல்லும் ரயில்களில் அதிக பயணிகள் பயணம் செய்வதால் ரயில்வே துறைக்கு அதிக லாபம் தரும் வழித்தடமாக இருக்கும் என்று ரயில் பாதை பயண ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தென்னக ரயில்வே துறை 28 கிமீ தூரம் உள்ள திருத்துறைப்பூண்டி- வேளாங்கண்ணி புதிய அகல ரயில் பாதையின் முக்கியத்துவமும் லாப நோக்கும் புரியாமல் அலட்சியமாக செயல்பட்டு வருவதாக திருத்துறைப்பூண்டி, வேளாங்கண்ணி, திருக்குவளை மற்றும் நாகப்பட்டினம்வர்த்தகர்களும் பொதுமக்களும் மிகவும் அதிருப்தியில் உள்ளனர். திருத்துறைப்பூண்டி வர்த்தகர்கள் மற்றும் பட்டுக்கோட்டை, வர்த்தக சங்கங்கள், மற்றும் நுகர்வோர் பெருமக்கள் வேளாங்கண்ணி – திருத்துறைப்பூண்டி அகலரயில் பாதைப்பணியை விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்திற்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். இந்த மனு தென்னக ரயி ல்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் ஆகியோருக்கு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மத்திய ரயில்வே துறை உடனடியாக செயல்பட்டு வேளாங்கண்ணி- திருத்துறைப்பூண்டி அகல ரயில் பாதை பணிகளை விரைந்து முடித்து புதிய ரயில் பாதையில் விரைவு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post வேளாங்கண்ணி- திருக்குவளை- திருத்துறைப்பூண்டி அகல ரயில் பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Velanganni ,-Tirukuwala-Duthurapundi Wide Railway Line ,Thiruvarapuondi ,Thiruvarur District Rail Users Association ,Velangani ,Durutarapuandi ,Tirukwala ,Velanganni-Tirukuwala ,
× RELATED உலக புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!