×

96 வயது சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதிய பாக்கி ரூ.15 லட்சம் அரசால் வழங்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: தொன்னூற்று ஆறு வயது சுதந்திர போராட்ட வீரருக்கு ஓய்வூதிய பாக்கி 15 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்ததையடுத்து, அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர் நீதிமன்றம். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் பங்கெடுத்திருந்த திருவள்ளூரைச் சேர்ந்த 97 வயது சுதந்திரப் போராட்ட வீரர் வேலு என்பவருக்கு 2021ம் ஆண்டு முதல் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்பட்டது.

ஆனால், ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்த 1987ம் ஆண்டு முதல் கணக்கிட்டு தனக்கு ஓய்வூதிய பாக்கியை வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 2008ம் ஆண்டு முதல் 2021 வரைக்கான ஓய்வூதிய பாக்கியை வழங்குமாறு தமிழக பொதுத்துறை கூடுதல் செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த 2022ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி சுதந்திர போராட்ட வீரர் வேலு தாக்கல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, உத்தரவை அமல்படுத்த 10 நாட்கள் அவகாசம் வழங்கியும் ஓய்வூதிய பாக்கி தொகை வழங்கப்படாததால், பொதுத்துறை கூடுதல் செயலாளருக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, ஓய்வூதிய பாக்கியை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் பிடிவாரண்ட் உத்தரவுக்கு தடை விதித்திருந்தது. இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு நேற்று விசாரணைக்கு வந்த போது, பொதுத்துறை செயலாளர் சாந்தி நேரில் ஆஜராகி இருந்தார். அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.குமரேசன் ஆஜராகி, சுதந்திர போராட்ட வீரர் வேலுவுக்கான ஓய்வூதிய பாக்கி 15 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு விட்டது என்று கூறி அது தொடர்பான ஆவணத்தை தாக்கல் செய்தார். அதற்கு, மனுதாரர் தரப்பு வழக்கறிஞரும் பணம் வந்துள்ளது என்றார்.இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தமிழக அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

The post 96 வயது சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதிய பாக்கி ரூ.15 லட்சம் அரசால் வழங்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,High Court ,CHENNAI ,Chennai High Court ,Dinakaran ,
× RELATED கலை அறிவியல் கல்லூரிகளில்...