*கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு
திருப்பூர் : உடுமலை அருகே தளி பகுதியில் ரூ.72 கோடி மதிப்பில் மும்முரமாக நடக்கும் காண்டூர் சம மட்டக்கால்வாய் சீரமைப்பு பணிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம், தளி கிராமத்தில் தாட்கோ நிலங்களையும், குருமலை சாலை அமைப்பது குறித்தும், ரூ.72 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் காண்டூர் சம மட்டக்கால்வாய் சீரமைக்கும் பணிகளையும் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். இதுகுறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் உடுமலை வட்டம், தளி கிராமத்தில் 88.67 ஏக்கர் பரப்பளவில் உள்ள தாட்கோ நிலத்தை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டிற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தளி கிராமத்தில் 88.67 ஏக்கர் பரப்பளவில் உள்ள தாட்கோ நிலங்களை ஆதிதிராவிடர் தளி பேரூராட்சி திருமூர்த்தி மலை முதல் குருமலை வரை குருமலை, மேல் குருமலை, கருமுட்டி, ஆட்டுமலை, குளிப்பட்டி, கோடந்தூர். காட்டுப்பட்டி, பூச்சிக்கொட்டாம்பாறை ஆகிய மலைகிராம மக்கள் பயனடையும் வகையில் 5.37 கிலோமீட்டர் தொலைவில் சாலை அமைப்பது தொடர்பாகவும், நல்லாறு முதல் வல்லகுண்டாபுரம் வரையிலும் மற்றும் ஜிலேபி நாய்க்கன்பாளையம் முதல் வல்லக்குண்டாபுரம் வரை 5.1 கிலோ மீட்டர் சாலை அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் வறட்சி பகுதியில் உள்ள மக்களின் நீண்ட தண்ணீர் பற்றாக்குறையினை தீர்க்க, மேற்கு தொடர்ச்சி மலையில் ஆனைமலை தொடரில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி பாய்ந்து பெரியாறு, சாலக்குடி மற்றும் பாரதப்புழா படுகை வழியாக அரபிக்கடலில் கலக்கும் மிகுதியான நீரை கிழக்கு திசையில் திருப்பி சம மட்டக்கால்வாய் மூலம் ஆழியார் அணைக்கும், திருமூர்த்தி அணைக்கும் கொண்டு சென்று பழைய மற்றும் புதிய பாசன பகுதிகளான 4 லட்சத்து 30 ஆயிரத்து 730 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி பெறுகிறது. பரம்பிக்குளம் ஆழியார் திட்டத்தில் சம மட்டக்கால்வாயானது சர்க்கார்பதி மின் நிலையத்தில் இருந்து தொடங்கி திருமூர்த்தி அணை வரை 49.300 கி.மீ தொலைவு செல்கிறது.
இந்த சம மட்டக்கால்வாயானது பரம்பிக்குளம் ஆழியார் திட்டத்தின் முதுகெலும்பாகும். சம மட்டக்கால்வாய் சரகம் 30.100 கி.மீ முதல் 49.300 கி.மீ வரை மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டதாகும். சம மட்டக்கால்வாய் நீண்ட காலப் பயன்பாட்டின் காரணமாகவும், வாய்க்கால் பெரும்பாலும் வனப்பகுதியில் உள்ளதாலும், மழைகாலங்களில் ஏற்படும் மண் மற்றும் பாறை சரிவுகளால் வாய்க்கால் பழுதடைந்த நிலையில் இருந்ததால் நீர் விரயம் அதிகம் ஏற்பட்டு திருமூர்த்தி அணைக்கு முழுமையாக தண்ணீர் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனை சீரமைக்கும் பொருட்டு தமிழக அரசால் ஒரு உயர் மட்ட தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டு, குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ரூ.184 கோடி மதிப்பீட்டில் 3 சிப்பங்களாக பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
அதில் ரூ.62 கோடியில் கால்வாய் சரகம் 30.100 கி.மீ முதல் 49.300 கி.மீ வரை புனரமைப்பு பணிகள் நடைபெற்று முடிவடைந்து விட்டது. புனரமைப்பு பணிகளின் போது நல்ல நிலையில் இருந்து வந்த கருங்கல் கட்டுமானங்கள் படுகையிலுள்ள கான்கிரிட் கட்டுமானங்கள் ஆகியவை தற்போது சேதமடைந்துள்ளது.
அதன்பிறகான தொடர் பயன்பாட்டாலும், புனரமைக்காமல் விடப்பட்ட பகுதிகள் நீண்ட காலம் ஆனதாலும், வாய்க்காலின் புனரமைக்காமல் விடப்பட்ட பகுதிகள் பக்கவாட்டு சுவர்கள் ஆங்காங்கே சரிந்து தண்ணீர் செல்ல இடையூறாக உள்ளதால் அதிகப்படியான நீரிழப்பு ஏற்பட்டு வடிவமைப்புபடியான அளவு தண்ணீரை கொண்டு செல்ல இயலவில்லை. எனவே விடுபட்ட 5,260 மீட்டர் கால்வாய் பகுதிகளை 2177 மீட்டர் நீளத்திற்கு கால்வாயின் இரு பக்கவாட்டு சுவர்கள் மற்றும் படுகையில் ஆர்.சி.சி கட்டுமானமாக புனரமைக்கவும், 3083 மீட்டர் நீளத்திற்கு கால்வாயின் ஒரு பக்கம் ஆர்.சி.சி கட்டுமானமாகவும் மற்றும் படுகையில் கட்டுமானமாக புனரமைப்பதற்கு ரூ.72 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது.
2022-ம் ஆண்டில் தொகுப்பு அணைகளில் தண்ணீர் நிரம்பி இருந்த காரணத்தினால் சம மட்டக்கால்வாயில் 514 மீட்டர் நீளத்திற்கு மட்டுமே புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சமமட்டக்கால்வாய் மூலம் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு இரண்டாம் மற்றும் மூன்றாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேலும், பாசன காலங்கள் முடிவடைந்த பின்னர் சமமட்டக்கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டு புனரமைப்பு பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டது.
இந்த ஆண்டு தண்ணீர் மூன்று வெவ்வேறு இடங்களில் விடுபட்ட பகுதிகளில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் மொத்தம் 2603 மீட்டர் நீளத்திற்கு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு தற்போது முழுமையாக முடிவடையும் தருவாயில் உள்ளது. மொத்தம் உள்ள 2063 மீட்டர் நீளத்தில் 1985 மீட்டர் நீளத்திற்கு கால்வாயில் இருபக்கவாட்டு சுவர்கள் மற்றும் ஆர்.சி.சி கட்டுமான புனரமைப்பாகவும், 618 மீட்டர் நீளத்திற்கு கால்வாயின் இடது பக்கவாட்டு சுவர் ஆர்.சி.சி கட்டுமான புனரமைப்பாகவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென நீர் வளத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறினார்.
அப்போது மாவட்ட வன அலுவலர் தேவேந்திரகுமார் மீனா, மாவட்ட மேலாளர் (தாட்கோ) ரஞ்சித்குமார், செயற்பொறியாளர் (தாட்கோ) சரஸ்வதி, வனசரகர் மணிகண்டன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் (திருமூர்த்தி வடிநிலக்கோட்டம்) ஆதிசிவன், உதவி பொறியாளர்கள் மாரிமுத்து. ஜெயக்குமார். உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், வனவர் (திருமூர்த்தி மலை) நிமல், தளி பேரூராட்சி தலைவர் உதயகுமார், செயல் அலுவலர் கல்பனா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post உடுமலை அருகே தளி பகுதியில் ரூ.72 கோடி மதிப்பில் காண்டூர் சம மட்ட கால்வாய் சீரமைப்பு பணிகள் மும்முரம் appeared first on Dinakaran.