×

12 டூவீலர்களை திருடிய ‘கோடீஸ்வரர்’ கைது: பல கோடி சொத்துக்கு அதிபதி

சூலூர்: கோவையில் 12 டூவீலர்களை திருடிய பல கோடி அதிபரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் சூலூர், பாப்பநாயக்கன்பாளையம், பீளமேடு பகுதியில் உள்ள பிரபல மருத்துவமனை முன் நிறுத்தப்பட்டிருந்த வாடிக்கையாளர்களின் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருட்டு போனது. இது குறித்து காவல் நிலைத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து கொள்ளையனை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டன. சூலூரில் உள்ள பிரபல மருத்துவமனை முன் கடந்த 15 நாட்களுக்கு மேலாக போலீசார் இரவு, பகலாக நின்று கண்காணித்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஒண்டிப்புதூர் சூர்யா நகரை சேர்ந்த தனபால் என்பவர் தனது டூவீலரை மருத்துவமனை முன்பு நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். அப்போது அங்கு வந்த மர்மநபர், பூட்டை உடைத்து அந்த டூவீலரை திருடிக்கொண்டு சென்றார். அவரை போலீசார் துரத்திச் சென்றனர். சூலூர் விமானப்படைத்தளம் அருகே அந்த நபரை போலீசார் மடக்கினர். விசாரணையில் அவர், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கவுதமன் (34) என்பதும், கோவை, திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதியில் டூவீலர் திருடிச்சென்றதும் தெரியவந்தது. இவர் பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் குழாய் பதிக்கும் பணிகளை கான்ட்ராக்ட் எடுத்து செய்து வருகிறார்.

இவருக்கு கரூர் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கும் விடுதி உள்ளது. தான் பணி செய்ய செல்லும் பகுதிகளில் குறிப்பாக மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை குறி வைத்து திருடி செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, சூலூர், பீளமேடு, பாப்பநாயக்கன்பாளையம், ரேஸ்கோர்ஸ் பகுதியில் திருடிய 12 டூவீலரை பறிமுதல் செய்தனர்.

The post 12 டூவீலர்களை திருடிய ‘கோடீஸ்வரர்’ கைது: பல கோடி சொத்துக்கு அதிபதி appeared first on Dinakaran.

Tags : Sulur ,Coimbatore ,Sulur, Papanayakanpalayam, Beelamedu ,Dinakaran ,
× RELATED செமி கண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலை...