×

கடந்த 20 ஆண்டுகளில் வட இந்தியாவில் வேகமாக சரிந்து வரும் நிலத்தடி நீர்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: வட இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் 450 கன கிமீ நிலத்தடி நீர் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், இந்த பாதிப்பை பருவநிலை மாற்றம் இன்னும் மோசமாக்கி வருவதாகவும் புதிய ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஐஐடி காந்திநகர் சிவில் இன்ஜினியரிங் மற்றும் புவி அறிவியல் பேராசிரியர் விக்ரம் சாராய் தலைமையில், ஐதராபாத்தில் உள்ள தேசிய ஜியோபிசிகல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆய்வாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. களநிலவரம், செயற்கைகோள் தரவுகள் மற்றும் மாதிரிகள் ஆகியவற்றை பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த ஆய்வில் வட இந்தியா முழுவதும் 1951 முதல் 2021 வரை பருவமழைக் காலங்களில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) மழைப்பொழிவு 8.5 சதவீதம் குறைந்துள்ளதாகவும், அதே காலகட்டத்தில் குளிர்காலத்தில் 0.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதுபோல, மழைக்காலங்களில் குறையும் மழைப்பொழிவு, குளிர்காலத்தில் வெப்பம் அதிகரித்தல் ஆகியவை பாசன நீர் தேவையை அதிகரிப்பதோடு, நிலத்தடி நீர் சுரப்பதை குறைக்கிறது. இதன் காரணமாக ஏற்கனவே கடந்த 20 ஆண்டுகளில் வட இந்தியாவில் 450 கன கிமீ நிலத்தடி நீர் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய அணையான இந்திராசாகர் அணையின் மொத்த கொள்ளளவு நீரை விட 37 மடங்கு அதிகம். பருவநிலை மாற்றம் வரும் காலங்களில் நிலத்தடி நீர் இழப்பை இன்னும் மோசமாக பாதிக்கும் என்றும் ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். நிலத்தடி நீர் சுரப்பதற்கு அதிக நாட்களுக்கு குறைந்த அளவிலான மழைப்பொழிவு தேவை என கூறியிருக்கும் ஆய்வாளர்கள் பருநிலை மாற்றத்தால் ஏற்படும் அதிகப்படியான மழைப்பொழிவு எந்த விதத்திலும் நீர் பிரச்னைக்கு தீர்வாக இருக்காது என கூறி உள்ளனர். எனவே நிலத்தடி நீர் வளத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தாமல் இருப்பது எதிர்காலத்தில் நீர் பாதுகாப்பு சவால்களுக்கு வழிவகுக்கும் என ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

The post கடந்த 20 ஆண்டுகளில் வட இந்தியாவில் வேகமாக சரிந்து வரும் நிலத்தடி நீர்: ஆய்வில் அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : India ,NEW DELHI ,North India ,IIT Gandhinagar Civil Engineering and Geosciences… ,Dinakaran ,
× RELATED நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் அன்பின்...