சென்னை, ஜூலை 7: மாநகர போக்குவரத்துக் கழக பணியாளர்கள் பயோமெட்ரிக் மூலம் வருகையை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட சுற்றறிக்கை: மாநகர் போக்குவரத்துக்கழக அனைத்து பணிமனைகள் மற்றும் தொழிற்கூடங்களில் பணிபுரியும் நிர்வாகப் பணியாளர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், நிர்வாக மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் மற்றும் அலுவலர்கள் வேலை நாட்களில் காலை மற்றும் மாலை இரண்டு வேளைகளிலும் புதியதாக பொருத்தப்பட்டுள்ள பயோமெட்ரிக் மூலம் தங்கள் வருகையை தவறாமல் பதிவு செய்ய வேண்டும். வழித்தடத்தில் பேருந்துகளை இயக்கிட பணிமனையிலிருந்து புறப்படும் பேருந்துகளின் ஓட்டுநர், நடத்துனர்கள் அவரவர் பணிமனையிலிருந்து புறப்படும் போதும், பேருந்து நிலையங்களிலிருந்து புறப்படும் பேருந்துகளின் ஓட்டுநர், நடத்துனர்கள் பணிமுடித்த பின்னரும் பயோமெட்ரிக் மூலம் தங்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும். நிர்வாகப் பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் காலை 10 மணிக்குள் வருகைப்பதிவு செய்ய வேண்டும். 10.11 மணி முதல் 11 மணி வரை வருகைப்பதிவு செய்பவர்களுக்கு தாமத வருகையாக கருதப்படும். பிரதி மாதம் மூன்று முறைக்கு மேல் எடுக்கப்படும் ஒவ்வொரு தாமத வருகைக்கும் ஒவ்வொரு அரைநாள் விடுப்பு கழிக்கப்படும். 11 மணி முதல் 1 மணிக்குள் பதிவு செய்யப்படும் வருகைப்பதிவு அரைநாள் விடுப்பாக கருதப்படும்.
மாலை பணிமுடித்து செல்லும் போது, 5.45 மணிக்கு பதிவு செய்துவிட்டு செல்ல வேண்டும். காலை பதிவு செய்து மாலை பதிவு செய்யவில்லை எனில் மதியம் அரைநாள் விடுப்பாக கருதப்படும். காலை விடுப்பு எடுத்து மதியம் பணிக்கு வருபவர்கள் 1 மணிக்குள் வருகையை பதிவு செய்ய வேண்டும். மதியம் அரைநாள் விடுப்பில் செல்பவர்கள் மதியம் 1 மணிக்கு பயோமெட்ரிக்கில் தங்கள் பதிவை செய்துவிட்டு செல்ல வேண்டும். பணிக்கு வந்தபின் ஆன் டியூட்டி (OD) காரணமாக வெளியில் செல்லும் பணியாளர்கள் மற்றும் ஆன் டியூட்டி முடித்த பின்பு பணிக்கு வரும் பணியாளர்கள் அதற்கான வருகைப்பதிவினை அதற்குரிய படிவத்தில் பூர்த்தி செய்து சம்பள பட்டியல் பிரிவில் சமர்ப்பிக்க வேண்டும்.
நிர்வாகப் பணியாளர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் சுழற்சி முறைகேற்ப அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின்படி பயோமெட்ரிக் வருகைப்பதிவு செய்ய வேண்டும். இனிவரும் காலங்களில் பணிமனை மற்றும் தொழிற்கூடங்களில் பணிபுரியும் நிர்வாக, தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் தங்களின் வருகையை பயோமெட்ரிக் மூலம் பதிவு செய்ய தவறினால் அன்றைய நாள் வருகைப் பதிவேட்டில் விடுப்பு அல்லது வருகை இல்லை ஆக எடுத்துக் கொள்ளப்படும். அனைத்து பணிமனை கண்காணிப்பாளர்கள் மற்றும் அலுவலர்கள் தங்களது பணிமனையில் இருந்து பணியாளர்கள் வேறு இடத்திற்கு மாற்றல் ஆனாலும், புதிதாக பணியாளர்கள் சேர்ந்தாலும் உடனடியாக தலைமையக ஐடிஎஸ் பிரிவிற்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பணிக்கு வந்தபின் ஆன் டியூட்டி (OD) காரணமாக வெளியில் செல்லும் பணியாளர்கள் மற்றும் ஆன் டியூட்டி முடித்த பின்பு பணிக்கு வரும் பணியாளர்கள் அதற்கான வருகைப்பதிவினை அதற்குரிய படிவத்தில் பூர்த்தி செய்து சம்பள பட்டியல் பிரிவில் சமர்ப்பிக்க வேண்டும்.
The post மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.