×

பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு ஆலோசனைக்கூட்டம்: அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்பு

ஊத்துக்கோட்டை, ஜூலை 7: பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்து அரசுத்துறை அதிகாரிகளின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. பெரியபாளையத்தில் புகழ் பெற்ற ஸ்ரீ பவானி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் ஆடித் திருவிழா வரும் ஜூலை 17ம் தேதி தொடங்குகிறது. இந்த விழா 14 வாரங்கள் நடைபெறும். இத்திருவிழாவிற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என பல்வேறு பகுதிகளில் இருந்து கார், பஸ், வேன், ஜீப், லாரி, ஆட்டோ, மாட்டு வண்டி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வரும் பக்தர்கள் சனிக்கிழமை இரவு தங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கல் வைத்து, மொட்டையடித்து, வேப்பிலை ஆடை அணிந்து கோயிலை வலம் வந்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும் தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவார்கள்.

இந்நிலையில், ஆடித்திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பது அளிப்பது குறித்தும், அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்தும் அரசுத்துறை அதிகாரிகளின் ஆலோசனைக்கூட்டம் நேற்று பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்தது. இதில், திருவள்ளூர் கோட்டாட்சியர் கற்பகம் தலைமை தாங்கினார். தாசில்தார் மதன், டிஎஸ்பி கணேஷ்குமார், இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், ஒன்றிய குழு தலைவர் ரமேஷ், துணைத்தலைவர் சுரேஷ், பிடிஓக்கள் ராமகிருஷ்ணன், அற்புதராஜ், கோயில் செயல் அலுவலர் பிரகாஷ், அறங்காவலர் அஞ்சன் லோகமித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், ஆடித் திருவிழாவின் போது சனி, ஞாயிற்றுகிழமைகளில் சுகாதார பணியாளர்கள் கூடுதலாக பணியாற்றுவார்கள், சுத்தமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும், கழிவறைகள் கூடுதலாக அமைக்கப்படும். மேலும், ஆடித்திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு தற்காலிக பஸ் நிறுத்தத்தில் இருந்து கோயில் வரை இலவச பஸ் வசதி இயக்குவது குறித்தும், குடிநீர் வசதி, மின்சார வசதி மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும், ஆரணியாற்றில் தற்காலிக கொட்டகைகள் அமைக்கக்கூடாது, ஆடி மாதத்தில் சனிக்கிழமை மாலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள்குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் 14 வாரத்திற்கு ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி தலைமையில் 150 போலீசார், 50 ஊர்காவல் படையினர் உட்பட 200 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்திற்கு, போக்குவரத்து துறை, சுகாதார துறை, காவல் துறை, உள்ளாட்சி துறை, தீயணைப்பு துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

திருத்தணி முருகன் கோயிலில் முன்னேற்பாடுகள்
திருத்தணியில் இந்த ஆண்டுக்கான ஆடிக்கிருத்திகை திருவிழா வரும் 27ம் தேதி ஆடி அஸ்வினியுடன் தொடங்கி, 28ல் ஆடிபரணியை தொடர்ந்து 29ம் தேதி ஆடிக்கிருத்திகை விழா நடைபெற உள்ளது. அன்று இரவு சரவண பொய்கை திருக்குளத்தில் முதல்நாள் தெப்பத்திருவிழா நடைபெறும். தொடர்ந்து 3 நாட்கள் தெப்பத்திருவிழா நடைபெற்று உற்சவர் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
விழா தொடங்க 20 நாட்கள் உள்ள நிலையில் திருத்தணி முருகன் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தும் வகையில் மலைக் கோயில் மாட வீதியில் சுவாமி தரிசனத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்காக தற்காலிக நிழற்குடைகள் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் ஆடிக்கிருத்திகை விழா முன் ஏற்பாடுகள் தொடங்கி பக்தர்கள் தடையின்றி சுவாமி தரிசனம் செய்ய கூடுதல் வசதிகள் செய்யப்படும் என்று திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

The post பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு ஆலோசனைக்கூட்டம்: அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Periyapalayam Bhavani Amman Temple Jubilee Consultation Meeting ,Oothukottai ,Periyapalayam Bhavani Amman Koil Aadi festival ,Periyapalayam ,Sri Bhavani Amman Temple ,Periyapalayam Bhavani ,Amman Temple ,Thiruvissa ,
× RELATED வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 2வது...