×
Saravana Stores

அண்ணாமலையார் கோயிலில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஏற்பாடு திருவண்ணாமலைக்கு பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரிப்பதால்

திருவண்ணாமலை, ஜூலை 7: அண்ணாமலையார் கோயிலுக்கு பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு நடத்தினார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பவுர்ணமி கிரிவலம் மட்டுமின்றி, வார இறுதி நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் வருகை அதிகரித்திருக்கிறது. மேலும், பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை உள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பக்தர்களின் வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று நேரில் ஆய்வு செய்தார். மேலும், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

மேலும், கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு, குடிநீர், நிழற்பந்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதோடு, பக்தர்கள் தரிசன வரிசையில் காத்திருக்கும் நேரத்தை குறைக்கவும், விரைவாக தரிசனம் செய்யவும் தேவையான ஏற்பாடுகளை செய்திடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதேபோல் நாள்தோறும் பிரசாதம் வழங்கும் திட்டத்தில் வழங்கப்படும் லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் தரமாகவும், சுகாதாரமாகவும் செய்யப்படுவதை இணை ஆணையர் தினமும் கண்காணிக்க வேண்டும், அன்னதான திட்டத்தில் வழங்கப்படும் உணவின் தரத்தையும் ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அதேபோல், கிரிவல பக்தர்களின் வசதிக்காக செங்கம் இணைப்பு சாலை அருகே புதியதாக கட்ட திட்டமிட்டுள்ள யாத்ரி நிவாஸ் மற்றும் கிரிவலப்பாதையின் பல்வேறு இடங்களில் கட்டப்படும் சுகாதார வளாகங்கள் போன்ற பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து, அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். சம்மந்த விநாயகர் சன்னதி, சுவாமி சன்னதி, அம்மன் சன்னதிகளில் தரிசனம் செய்த அமைச்சருக்கு, கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. அப்போது, அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏ நந்தகுமார், கோயில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழுத் தலைவர் ஜீவானந்தம், அறங்காவலர்கள் ராஜாராம், கோமதி குணசேகரன், சினம்பெருமாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post அண்ணாமலையார் கோயிலில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஏற்பாடு திருவண்ணாமலைக்கு பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் appeared first on Dinakaran.

Tags : Charities Minister ,Shekharbabu ,Annamalaiyar temple ,Tiruvannamalai ,Minister for ,Charities Department ,Shekhar Babu ,Thiruvannamalai Annamalaiyar Temple ,
× RELATED கூடி கலைகின்ற மேகக்கூட்டம் இல்லை எந்த...