×

வரும் 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள விக்கிரவாண்டியில் நாளை மாலை பிரசாரம் ஓய்கிறது

* தலைவர்கள் கிராமம் கிராமமாக இறுதி கட்ட ஓட்டு வேட்டை
* அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்றும், நாளையும் வாக்கு சேகரிப்பு

விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் ஓய்கிறது. 10ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கிராமம் கிராமமாக இறுதி கட்ட ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்றும், நாளையும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி, கடந்த ஏப்ரல் 6ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து அந்த தொகுதிக்கு வரும் 10ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா, தேஜ கூட்டணியில் பாமக வேட்பாளர் அன்புமணி, நாம் தமிழர் கட்சியில் அபிநயா மற்றும் சுயேச்சைகள் உட்பட 29 பேர் போட்டியிடுகின்றனர்.

பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் தேமுதிக போட்டியிடவில்லை. திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காதர்மொய்தீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன் உள்ளிட்டவர்கள் பிரசாரம் செய்தனர். அதேபோல் பாமக வேட்பாளரை ஆதரித்து ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி, சவுமியா அன்புமணி, பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், ஜான்பாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டனர். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் காணொளியில் தொண்டர்கள், பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

சமூக நீதியை நிலைநாட்ட விக்கிரவாண்டியில் மாபெரும் வெற்றியை பெற்றுத் தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இதை தொடர்ந்து திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்றும் நாளையும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இறுதிகட்டத்தை எட்டியுள்ளதால், இந்தியா கூட்டணி, தேஜ கூட்டணி வேட்பாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் கிராமம், கிராமமாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை மாலை 6 மணியுடன் இந்த பிரசாரம் ஓய்கிறது. இதைதொடர்ந்து வெளியூரில் இருந்து வந்து தங்கி உள்ள அரசியல் கட்சியினர் தொகுதியை விட்டு வெளியேற மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து 10ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

The post வரும் 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள விக்கிரவாண்டியில் நாளை மாலை பிரசாரம் ஓய்கிறது appeared first on Dinakaran.

Tags : Vikravandi ,Minister ,Udayanidhi Stalin ,
× RELATED விக்கிரவாண்டி தவெக மாநாடு நடக்குமா? 21 கேள்விகளை கேட்டு காவல்துறை கடிதம்