×

விக்கிரவாண்டி தவெக மாநாடு நடக்குமா? 21 கேள்விகளை கேட்டு காவல்துறை கடிதம்

விக்கிரவாண்டி, செப். 3: விக்கிரவாண்டியில் தவெக மாநாடு நடத்துவது குறித்து 21 கேள்விகளை கேட்டு அக்கட்சி பொதுச்செயலாளருக்கு காவல்துறை கடிதம் எழுதி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடிகர் விஜய்யின் த.வெ.க. கட்சியின் முதல் மாநில மாநாடு வருகிற 23ம்தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனுமதி கோரி கடந்த 28ம்தேதி விழுப்புரம் மாவட்ட காவல் துறையிடம் அக்கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அன்றே மாநாடு நடைபெற உள்ள இடத்தை காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மாநாடு நடத்த தேர்வு செய்துள்ள இடமானது தேசிய நெடுஞ்சாலைக்கும், ரயில் பாதைக்கும் இடைப்பட்ட பகுதி என்பதோடு, இப்பகுதியில் உள்ள 5க்கும் மேற்பட்ட ஆழமான கிணறுகளை மூடவேண்டும். சுமார் 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் வரை வர வாய்ப்புள்ளதால் வாகனங்களை நிறுத்துவதற்கு 71 ஏக்கர் நிலமும் தயார் செய்யப்படுவதாகச் சொல்லி இருக்கிறார்கள். தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனங்கள் நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட வேண்டுமென காவல்துறையிடம் கேட்டுள்ளனர்.

இந்நிலையில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு, விழுப்புரம் டிஎஸ்பி சுரேஷ் நேற்று ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் சுமார் 21 கேள்விகளை பட்டியலிட்டு, அவற்றுக்கு 5 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். அதில், மாநாடு எந்த நேரம் தொடங்கி எப்போது முடிக்கப்படும். நிகழ்ச்சி நிரல்கள் விவரம், மாநாடு நடத்த தேர்வு செய்துள்ள இடத்தின் உரிமையாளர்கள் யார், அவர்களிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா?, பங்கேற்கும் முக்கிய நபர்கள் பட்டியல், பேசவிருக்கும் நபர்களின் விவரம், கலந்து கொள்ளும் நபர்களுக்கு எவ்வளவு நாற்காலிகள் போடப்படவுள்ளன என தெரிவிக்க வேண்டும்.

மேலும் மாநாட்டில் வைக்கப்படவுள்ள பேனர்கள் எண்ணிக்கை மற்றும் அலங்கார வளைவுகளின் விவரம், மாநாடு ஏற்பாடு செய்யும் நபர்கள் மற்றும் பந்தல், ஒலிபெருக்கி மற்றும் இதர ஒப்பந்ததாரர்கள் விவரம், மாநாட்டில் பங்கேற்கும் ஆண்கள், பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் விவரம், இருச்சக்கர வாகனங்கள், கார்கள், வேன்கள் மற்றும் பேருந்துகள் எண்ணிக்கை விவரம், வாகனங்களை நிறுத்துவதற்கான ஏற்பாடு, குடிநீர்- கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின் விவரம், உணவு விநியோகம், தீவிபத்து பாதுகாப்பு, மருத்துவ வசதிகள், கட்சித் தலைவர், விஐபிக்கள் விழா மேடைக்கு செல்லும் வழித்தடம், மின்சார அனுமதி உள்ளிட்ட கேள்விகள் இடம்பெற்றுள்ளது. இந்த நோட்டீசில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு தமிழக வெற்றிக்கழகம் விளக்கமளித்த பின் மாநாட்டுக்கான அனுமதி அளிக்கப்படுமா, மறுக்கப்படுமா என்பது தெரிய வரும்.

The post விக்கிரவாண்டி தவெக மாநாடு நடக்குமா? 21 கேள்விகளை கேட்டு காவல்துறை கடிதம் appeared first on Dinakaran.

Tags : Vikravandi Thaweka conference ,Vikravandi ,general ,Vijay ,Vikravandi, Villupuram District ,Vikravandi Thaveka conference ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டியில் 23ம் தேதி நடைபெற...