செவ்வாய் என்கிற கனன்ற நெருப்பு கிரகம் மேஷ ராசியை தனது ஆளுகைக்குள் வைத்திருப்பதுபோல, குளிர்வான, இதமான, சுகமான சுக்கிரன் ரிஷப ராசியை ஆட்சி செய்கிறது. மேஷத்தை எப்படி பூமியின் புத்திரன் என்று பார்த்தோமோ, அதுபோல ரிஷபத்தை கட்டிடத்தின் நாயகன் என்று சொல்லலாம். ஏனெனில் ரிஷப ராசிக்கு அதிபதியான சுக்கிரன்தான் கட்டிடக் கலைகளுக்கெல்லாம் அதிபதி. தண்ணீர்த் தொட்டியைக்கூட விமானம் மாதிரி வடிவமைக்கும் ரிஷப ராசியினர் உண்டு. வீட்டின் முகப்பில் மல்லிகையையும், முல்லையையும் படரவிட்டு அழகு பார்ப்பீர்கள். இப்படி கட்டிடக்காரகனாக இருக்கும் சுக்கிரனே உங்கள் ராசிக்கு அதிபதியாக வருவதால் வீடு கட்டுவதில் குறியாக இருப்பீர்கள். வீட்டிற்கு எதிரே எப்போதும் காலி இடம் இருந்தால் நல்லது என்று நினைப்பீர்கள். நகர்ப்புறங்களின் ஒரு சுவர், இரு வீடு என்கிற அமைப்பு உங்களுக்கு சரிவராது.
பெரும்பாலும் அறையில் இருப்பதை விட பால்கனியில் நின்று வேடிக்கை பார்ப்பதுதான் பிடிக்கும். அதனால் பால்கனியை அழகாக வடிவமைப்பீர்கள். என்னதான் கிரானைட் கல்லையும், மார்பிளையும் வைத்து வீடு கட்டினாலும் வீட்டின் பாத்ரூமில் பாதக் கல்லையும், தேங்காய் நாரையும், வெட்டிவேரையும் வைத்திருப்பீர்கள். உடம்புக்கு அதைத்தான் உபயோகப்படுத்துவீர்கள்.ரிஷப ராசிக்கு சரளை மற்றும் கருப்பு நிற மண்ணாக இருந்தால் நல்லது. நீங்கள் ரிஷப ராசிக்காரராக இருந்தாலும் சரி, அல்லது ஜாதகப் பிரகாரம் ரிஷப லக்னத்தில் பிறந்திருந்தாலும் சரி… உங்கள் ராசிக்கோ அல்லது லக்னத்திற்கோ நான்காம் இடமாக சிம்ம ராசி வருகிறது. அந்த ராசியை சூரியன்தான் ஆட்சி செய்கிறார். எனவே உங்கள் வீடு குறித்த எல்லா விஷயங்களையும் சூரியன்தான் நிர்ணயிக்கிறார்.
உங்கள் ராசியான ரிஷபத்திற்கு அதிபதியாக வரும் சுக்கிரனும், சூரியனும் கொஞ்சம் பகைவர்கள் ஆவார்கள். அதனால் மனை வாங்கிப் போட்டால் சீக்கிரம் வீட்டைக் கட்டவிடாது தடைகள் வரும். ‘முதல்ல காம்பவுண்ட் போட்டுடு. அப்புறமா வீட்டைக் கட்டு’ என்று யாரேனும் சொன்னால் அதைச் செய்யாதீர்கள். இரும்பு வேலி வேண்டுமானால் போடுங்கள். எப்போதுமே சுற்றுச் சுவரை முதலில் எழுப்பி விடாதீர்கள். அது கட்டிடத்தின் வளர்ச்சியை பாதிக்கும். நீங்கள் ஆவணி, கார்த்திகை, தை, மாசி, பங்குனி போன்ற மாதங்களில் ரிஷப ராசியில் பிறந்திருந்தால் வீட்டை விரைந்து கட்டி முடிப்பீர்கள். உங்கள் ஜாதகத்தில் ராகுவும், கேதுவும் சூரியனோடு சேர்ந்திருக்கக் கூடாது. அப்படி இருந்தால் சாலை விரிவாக்கத்தில் வீட்டின் முன்பகுதியை இழப்பீர்கள். மேலும், நல்ல பூமிகூட அமைந்து விடும். ஆனால், பில்டர் ஏமாற்றுவதற்கு முயற்சி செய்வார். ‘எல்லாமே தரமா போட்டிருக்கேங்க’ என்று சொல்லிவிட்டு தரமற்ற மெட்டீரியல்ஸை உபயோகப்படுத்துவார்.
‘ஆகஸ்ட்ல வீட்டுச் சாவியை கொடுத்துடறேன்’ என்று சொல்லி டிசம்பர் இறுதி வரை தாமதப்படுத்துவார். அதனால் உஷாராக இருங்கள். ரிஷப ராசிக்காரரான நீங்கள் சொந்த ஊர் வாசனையை விரும்புவீர்கள். ‘எங்க தாத்தா எனக்காக எடுத்து வச்சிருந்த ஊஞ்சலைக் கொண்டுவந்து மாட்டப் போறேன்’ என்று சொந்த ஊருக்கு ஓடுவீர்கள். ‘எப்பவோ போட்ட அப்ளிகேஷன். இப்போதான் வீட்டு வசதி வாரியத்துலேர்ந்து வீடு ஒதுக்கியிருக்காங்க’ என்று சூரியன், அரசு சம்பந்தமாக வீட்டை அளிப்பார். எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் சொந்த ஜாதகத்தில் சூரியன் நன்றாக இருந்து விட்டால் போதும்… வீடு அமோகமாகக் கட்டுவீர்கள். பொதுவாகவே கிழக்கு, வடக்கு, வடகிழக்கு போன்ற திசையில் தலைவாசல் வரும்படி வீட்டைக் கட்டுங்கள். அடுக்கு மாடி என்றால் இரண்டாவது தளம், மூன்றாவது தளம் மேற்கு பார்த்த திசையில் இருந்தாலும் பரவாயில்லை. எப்போதுமே கடையும், கடையை சார்ந்த இடத்திலுள்ள வீட்டை விரும்ப மாட்டீர்கள்.
அதேபோல தொழிற்சாலைக்கு அருகே பாதி விலைக்கு இடம் கொடுத்தாலும் வாங்க மாட்டீர்கள். ‘தினமும் நாப்பது கிலோமீட்டர்னா கூட பரவாயில்லை. வந்து போறேங்க’ என்பீர்கள். மேலே சொன்னவை ரிஷப ராசிக்கான பொதுவான விஷயங்கள். இந்த ராசிக்குள் வரும் மூன்று நட்சத்திரங்களின் வீட்டு யோகத்தைப் பற்றிப் பார்ப்போமா… முதலாவதாக கார்த்திகை நட்சத்திரம் வருகிறது. ரிஷப ராசிக்கு நாலாவது வீடான சுக ஸ்தானம் என்றழைக்கப்படும் இடத்திற்கு அதிபதியாகவும், கார்த்திகை நட்சத்திரத்தின் அதிபதியாகவும் சூரியனே வருவதால், எதையும் உடனே அடையவேண்டும் என்ற வேகம் இருக்கும். ‘இப்போ ஸ்கூட்டர் வச்சிருக்கோம். இன்னும் அஞ்சு வருஷத்துல கார் வாங்கிடலாம்’ என்று பெரிய கேட் அமைத்து வீடு கட்டுவீர்கள். பவர்கட் அடிக்கடி இல்லாத ஏரியா பார்த்து இடம் தேடுவீர்கள். மழை நாட்களில் நீர் தேங்காத மேட்டுப் பகுதியை வாங்கிப் போடுவீர்கள். இந்த நட்சத்திரத்திற்கு பூர்வீகச் சொத்துகளில் விளைநிலம் தங்கும்.
ஆனால், வீடு தங்காது. ஆனால், வந்த ஊரில் கட்டிய வீட்டை எப்போதும் விற்க மாட்டீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும். நிறைய வருவாய் வருவதாகக் காட்டி, வருமான வரியை சரியாக கட்டுவீர்கள். அதற்கு இணையாக பெரிய தொகையை கடனாக வங்கியில் எதிர்பார்ப்பீர்கள். அப்படி செய்தால்தான் நல்லது. ரேஷன் கடை, மருத்துவமனை போன்ற இடங்களுக்கு பக்கத்தில் உங்களுக்கு இடமோ, அடுக்கு மாடி வீடோ கிடைத்தால் நல்லது. அதேபோல மின்சார டிரான்ஸ்பார்மர் உங்கள் வீட்டிற்கு அருகேயோ அல்லது நீங்கள் குடியிருக்கும் தெருவிலேயோ அமைந்திருக்கும். செவ்வாயின் ஆதிக்கம் இப்படி பல விதங்களில் உங்கள் இல்லத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி இருந்தால் நல்லது என்று விட்டுவிடுங்கள். வீட்டையோ, மனையையோ வாழ்க்கைத்துணையின் பேரில் பதிவு செய்வது நல்லது. கட்டிடக்காரகனான சுக்கிரன், உங்களின் வீட்டு ஸ்தானாதிபதியாக வரும் சூரியனுக்கு மெல்லிய பகையாக இருப்பதை நினைவு படுத்துகிறேன்.
33 வயதிலிருந்து 38 வயதுக்குள் வீடு அமையும் யோகம் வரும். பயன்படுத்திக் கொள்ளுங்கள். சுவாதி, பூசம், அனுஷம், உத்திரட்டாதி, மகம் போன்ற நட்சத்திரங்கள் நடக்கும் நாட்களில் பத்திரப் பதிவையோ, புதுமனை புகுவிழாவையோ நடத்திக் கொள்ளுங்கள். வீட்டு வாசலில் நெடுநெடுவென்று மரங்களை வளர்த்து, கிளைகள் பக்கவாட்டில் வளர்ந்தால் வெட்டி விடுவீர்கள். சூரியனை நோக்கித்தான் மரங்கள் வளர வேண்டும் என்பது உங்கள் நட்சத்திரத்தின் விருப்பமாக இருக்கிறது. அதற்கு நீங்கள் என்ன செய்ய முடியும். அடுத்ததாக ரோகிணி நட்சத்திரம். நீங்கள் பாலைவனத்தில் வீடு வாங்கினாலும் உங்களுக்கு மட்டும் தண்ணீர் பஞ்சம் இருக்காது. ‘‘அதோ அந்த தண்ணி டேங்க்குக்கு பக்கத்துலதாங்க அவர் வீடு இருக்கு’’ என்று உங்கள் இல்லத்தை சுட்டுவார்கள். தெருவின் பெயர் கம்பீரமாக இருக்க வேண்டுமென்று வினோத ஆசையிருக்கும். ‘‘பாரதியார் நகர்ல வ.உ.சி. தெருவுல ஆறாம் நம்பர் வீடுதாங்க நம்மோடது’’ என்றிருந்தால் மகிழ்வீர்கள்.
அதிக தூண்களை வைத்து வீடு கட்டுவது பிடிக்கும். மென்மையான ரோமானியரின் ரசனையில் வீட்டை அமைக்க விரும்புவீர்கள். வீட்டு தலைவாசலை வடமேற்கு, மேற்கு என்று வைத்துக் கட்டுங்கள். படுக்கையறை பெரிதாக இருப்பது நல்லது. ஆரம்பத்தில் சிறியதாக வீட்டைக் கட்டினாலும் 46 வயதுக்குப் பிறகு பெரிய வீடாகக் கட்டுவீர்கள். சொந்த வீடு இருந்தாலும் சகல வசதிகளோடும் மனதிற்கு இனிமையான வாடகை வீடு கிடைத்தால் அதில்தான் வசிப்பீர்கள். மனைவிக்கு என்ன பிடிக்கும், குழந்தைகளுக்கு எது பிடிக்கும் என்று கேட்டு வீட்டில் மாற்றம் செய்வீர்கள். எப்போதோ வங்கியில் போட்டு வைத்திருந்த தொகையை முதலில் முன்பணமாகக் கொடுங்கள். அதற்குப் பிறகு வங்கிக் கடனில் வீடு கட்டுங்கள். புனர்பூசம், உத்திரம், உத்திராடம், ரேவதி போன்ற நட்சத்திரங்களில் பத்திரப்பதிவையும், புதுமனை புகுவிழாவையும் நடத்துங்கள். அடுத்ததாக மிருகசீரிஷம் 1, 2ம் பாதத்தை பார்ப்போம்.
பூமிகாரகனான செவ்வாய்தான் இதற்கு அதிபதியாக வருகிறார். ‘‘அவருக்கு என்ன சார்… வீடு இருக்கு! ஆனா இப்போ அவருக்கு புடிச்ச மாதிரி வீடு கட்டறாரு. அவ்ளோதான்’’ என்பார்கள். 25 முதல் 40 வரை குரு தசை நடைபெறும். உங்களின் ராசிநாதனான சுக்கிரனுக்கு பகைவராக குரு இருந்தாலும், உங்கள் நட்சத்திர நாயகனான செவ்வாய்க்கு குரு நட்பாக இருப்பதால் எங்கோ நிலை கொண்டிருந்த மனம் பூமிக்கு வரும். கைநழுவிச் சென்ற பூர்வீகச் சொத்துக்கள் திரும்பக் கிடைக்கும். ஆனால், அலைச்சல் இருக்கும். 27, 28, 32, 33, 37, 39 வயதுகளில் உங்களின் சக்திக்கு மீறி வாழ்வின் உச்சத்தைத் தொடுவீர்கள். ‘‘ரெண்டு வருஷம் முந்தி வரைக்கும் வாடகை வீட்ல இருந்தாரு, அதுக்குள்ள சொந்த வீடு வாங்கிட்டாரே’’ என்று ஆச்சரியப்பட வைப்பீர்கள். பொதுவாகவே எல்லா ஜோதிடர்களும் மிருகசீரிஷ நட்சத்திரத்தை மிகச் சிறந்த நட்சத்திரம் என்பார்கள். தரைத் தளமாக அடுக்கு மாடி இருப்பதும், கிழக்கு, தெற்கு நோக்கி தலைவாசல் இருப்பதும் நல்லது. போலீஸ் குடியிருப்புப் பகுதி, தீயணைப்புத் துறை அலுவலகம், அரசு மருத்துவமனை போன்ற இடங்களில் வீடு கிடைத்தால் நல்லது. எல்லா வகை மண்ணுமே ராசியாக இருக்கும். இந்த ராசிக்குள்ளேயே நிறைய வீடுகள், நிலங்கள் வாங்கிப் போடுபவர்கள் நீங்களாகத்தான் இருப்பீர்கள்.
வீட்டை விற்று வீடு கட்டுவீர்கள். வீடு கட்டுதல் என்கிற பிரம்மப் பிரயத்தனம் உங்களுக்கு மிகவும் எளிதாகவே இருக்கும். செவ்வாய் உங்களின் நட்சத்திரத்திற்கு அதிபதியாக வருவதால், பூர்வீக வீடோ அல்லது தானாக சம்பாதித்த வீடோ எளிதாக அமைந்து விடும். அஸ்வினி, ரோகிணி, பூசம், மகம், ஹஸ்தம், அனுஷம், திருவோணம், மூலம், உத்திரட்டாதி, மகம் போன்ற நட்சத்திரங்கள் நடைபெறும் நாட்களில் பத்திரப் பதிவையும், புதுமனை புகுவிழாவையும் வைத்துக் கொள்ளுங்கள். ரிஷப ராசி அன்பர்கள் வீடு யோகம் பெற வழிபட வேண்டிய தலம் திருவக்கரை ஆகும். புதுச்சேரிக்கும் திண்டிவனத்துக்கும் இடையில் இருக்கும் இந்தத் தலத்தில் வக்ரகாளி எனும் நாமத்தோடு அன்னை அருள்பாலிக்கிறாள். இன்றும் சந்நதியின் அண்மை வெம்மையாய் உக்கிரத்தோடு உள்ளது. வலது காலை மடக்கி, இடது காலை கீழே படரவிட்டு, இடது கைவிரல்களை லாவகமாய் மடித்து ஆள்காட்டி விரல் தன் பாதத்தைச் சுட்டுவதுபோல அமர்ந்த கம்பீரம் அவள் பாதம் பணிய வைக்கிறது. குங்குமமும், மஞ்சளும் கலந்த ஒரு சுகந்தம் அந்த சந்நதியில் சுழன்றபடி இருக்கும். அருகே வருவோரை செம்மைப்படுத்தும். அபிஷேகம் முடித்து, அலங்காரக் கோலத்தில் நாளெல்லாம் அம்பாளைப் பார்க்க கண்களின் நீர் கன்னம் வழிந்தோடும். காளியை தரிசியுங்கள்; உங்கள் இல்லக் கனவை அவள் எப்படி நிறைவேற்றுகிறாள் என்று பாருங்கள்.
The post ரிஷப ராசிக்காரர்களுக்கு வீடு யோகம் தரும் அன்னை appeared first on Dinakaran.