×

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாட்கள் பிரசாரம்: நாளை தொடங்குகிறார்

சென்னை: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாட்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபடுகிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் 6ம் தேதி காலமானார். இதையடுத்து அந்த தொகுதி காலியானது. இந்நிலையில் வருகிற 10ம் தேதி விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் நடக்கிறது. திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார்.

இதையடுத்து திமுக துணைப் பொதுச்செயலாளரும், அமைச்சருமான க.பொன்முடி, கொள்கை பரப்புச் செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அர.சக்கரபாணி, தா.மோ.அன்பரசன், எஸ்.எஸ்.சிவசங்கர், சி.வி.கணேசன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆர்.லட்சுமணன் எம்எல்ஏ ஆகியோர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை திமுக அமைத்துள்ளது. அவர்களுடன் மற்ற அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கான தேர்தல் பிரசாரம் வருகிற 8ம் தேதி மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இன்னும் 2 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளதால் தொகுதியை முற்றுகையிட்டு கட்சியினர் பிரசாரத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர். காலை, மாலை என வீடுவீடாக சென்று வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இதனால், விக்கிரவாண்டி தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், திமுக வேட்பாளரை ஆதரித்து திமுக இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் 2 நாட்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அதன்படி, அவர் நாளை (7ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (8ம் தேதி) பிரசாரத்தில் ஈடுபடுகிறார். நாளை திருவாமத்தூர், காணை, பனமலைப் பேட்டை, அன்னியூர் பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து நாளை மறுநாள் தும்பூர், நேமூர், ராதாபுரம், விக்கிரவாண்டி பேரூராட்சி பகுதிகளிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். இதற்கான ஏற்பாடுகளை திமுகவினர் செய்து வருகின்றனர்.

The post விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாட்கள் பிரசாரம்: நாளை தொடங்குகிறார் appeared first on Dinakaran.

Tags : Vikravandi ,Udayanidhi Stalin ,CHENNAI ,Minister ,DMK ,Bhujaendi ,MLA ,Villupuram district ,
× RELATED விக்கிரவாண்டி தவெக மாநாடு நடக்குமா? 21 கேள்விகளை கேட்டு காவல்துறை கடிதம்