பாட்னா: பீகாரில் அடுத்தடுத்து பாலம் இடிந்து விழுந்த சம்பவங்களை தொடர்ந்து 15 இன்ஜினியர்களை மாநில அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. பீகார் மாநிலத்தில் அடுத்தடுத்து பாலங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் வாடிக்கையாகி வருகிறது. சரண் மாவட்டத்தில் 150 ஆண்டுகள் பழைமையான ஒரு பாலம் இடிந்து விழுந்த நிலையில்,அதே மாவட்டத்தில் கந்தகி ஆற்றின் குறுக்கே 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி நேற்றுமுன்தினம் இடிந்து விழுந்தது. கந்தகி ஆற்றின் குறுக்கே, சரய்யா மற்றும் சதுவா எனும் கிராமங்களை இணைக்கும் பாலம் இடிந்து விழுந்ததால் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் குறிப்பிட்ட கிராமங்களை போக்குவரத்து ரீதியில் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு மீண்டும்,மீண்டும் பாலம் இடிந்த சம்பவங்களால் மாநில அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. இந்நிலையில்,பாலம் இடிந்த விபத்துகள் தொடர்பாக 15 இன்ஜினியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்று நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் சைத்தன்ய பிரசாத் நேற்று தெரிவித்தார். இது பற்றி அவர் கூறுகையில்,‘‘ இன்ஜினியர்கள் தங்கள் பணியில் அலட்சியமாக இருந்துள்ளனர். கண்காணிப்பு பணியையும் ஒழுங்காக மேற்கொள்ளவில்லை. இது தான் பாலம் இடிந்து விழுவதற்கான காரணம் என தெரியவந்துள்ளது’’ என்றார்.
The post அடுத்தடுத்து சரிந்து விழும் பாலங்கள் பீகாரில் 15 இன்ஜினியர்கள் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.