சென்னை: தவறான தகவல்களையும், தேவையற்ற கண்டனங்களையும் தெரிவிப்பதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சட்டத் துறை அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிலறிக்கையில்; விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் உயிரிழந்ததாக செய்திகள் வருகின்றன என்று X தளத்தில் எடப்பாடி பழனிச்சாமி இச்சம்பவம் குறித்த முழு விவரங்களையும் தெரிந்துகொள்ளாமல் அவசரகதியில் வழக்கம்போல ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தி.குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் (வயது 65), த/பெ. ரங்கநாதன் என்பவர் சாராயம் அருந்தி உடல்நிலை சரியில்லாமல் கடந்த 30.06.2024 அன்று மதியம் திருவெண்ணெய்நல்லூர் வட்டம், இருவேல்பட்டு அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி சம்பவம் குறித்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், 29.06.2024 அன்று இரவு பாண்டிச்சேரி மடுகரை அரசு சாராயக்கடையில் முருகன் என்பவர் 5 பாக்கெட்டுகள் பாண்டி சாராயம் வாங்கி 2 பாக்கெட்டுகளை தானே குடித்துவிட்டு ஜெயராமன் என்பவருக்கு இரண்டு பாக்கெட்டுகளையும், சிவசந்திரன் என்பவருக்கு ஒரு பாக்கெட்டையும் கொடுத்ததாக தெரிவித்துள்ளனர். இவர்களில், ஜெயராமன் என்பவர் உடல்நலம் சரியில்லாமல் இரண்டு நாட்களாக சாப்பிடாமல் தொடர்ந்து குடித்துக் கொண்டிருந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், மேற்படி முருகன் என்பவர் பாண்டிச்சேரி, மடுகரை அரசு சாராயக்கடை எண்.1-இல் சாராயப் பாக்கெட்டுகளை வாங்கியது உண்மை என்று தெரியவந்துள்ளது. முருகன் மற்றும் சிவசந்திரன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் 30.06.2024 அன்று இரவு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கச் செய்து மூவரின் இரத்த மாதிரிகளையும் விழுப்புரம் வட்டார தடய அறிவியல் ஆய்வத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்ததில், அவர்கள் அருந்தியது எத்தனால் (Ethanol) என்றும், மெத்தனால் எதுவும் இல்லை என்றும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் மேற்படி இருவரும் நல்ல நிலையில் 3.7.2024 அன்று மதியம் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஜெயராமன் என்பவர் அதிக அளவு மதுப்பழக்கம் உள்ளவர் என்றும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார் என்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். மேலும், புதுச்சேரியில் இருந்து சட்டவிரோதமாக சாராயப் பாக்கெட்டுகளை வாங்கி வந்த முருகன் என்பவர் மீது குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதான் நடந்தது. ஆனால் இதனை சரிபார்க்காமல்,
இச்சம்பவத்தை கள்ளச்சாரய மரணம் என்று கூறி இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர். எல்லைப்பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் வாகன சோதனை கடுமையாக்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரி சாராயக் கடத்தலைத் தடுப்பதற்கு தமிழ்நாட்டின் எல்லைப் பகுதிகளில் ரோந்துப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. உள்ளூர் காவல் துறையினர் எல்லைப்பகுதியில் உள்ள கிராமங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். எனவே, இந்த உயிரிழப்பு கள்ளச்சாராயத்தால் நிகழவில்லை என்று உறுதியாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
The post உண்மையை அறியாமல் கள்ளச்சாராய மரணம் என்பதா?.. இறப்பிலும் எடப்பாடி பழனிசாமி அரசியல் ஆதாயம் தேடுகிறார்: அமைச்சர் ரகுபதி கண்டனம்..!! appeared first on Dinakaran.