×

மழைநீர் வடிகால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்

மாதவரம்: சென்னை மாநகராட்சி, 73வது வார்டு, புளியந்தோப்பு டிகாஸ்டர் சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறு மழை பெய்தாலே தண்ணீர் தேங்கி நிற்பதும், மழை நீரில் கழிவுநீர் கலந்து சாலையில் ஓடுவதும் தொடர் கதையாகியுள்ளது. டிகாஸ்டர் சாலையில் வடிகால் இருந்தாலும், இப்பிரச்னை நீடித்து வருகிறது. ஆனால், முறையாக பணி மேற்கொள்ளாததால் இதுபோன்ற பிரச்னை இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், புளியந்தோப்பு டிகாஸ்டர் ரோடு, நாராயணசாமி தெரு சந்திப்பு பகுதியில் கழிவுநீர் குளம் போல தேங்கியது. இதனால், அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினர். எனவே, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி, நேற்று காலை அப்பகுதி பெண்கள் டிகாஸ்டர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த புளியந்தோப்பு போலீசார், அவர்களை சமாதானம் செய்தனர். ஆனால், அவர்கள் நீண்ட நேரமாக போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து, திருவிக நகர் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய பொறுப்பு துணைப் பகுதி பொறியாளர் சுரேஷ்குமார் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து லாரிகளை பயன்படுத்தி உடனடியாக கழிவு நீரை அகற்றினர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘டிகாஸ்டர் சாலையில் மழைநீர் வடிகால் பணிகள் முறையான திட்டமிடாமல் மேற்கொள்ளப்பட்டு்ளளதால், மழைக்காலங்களில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்குகிறது. மேலும் ஆடுதொட்டியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் முறையாக வெளியே செல்ல முடியாமல் கழிவுநீர் கால்வாயில் கலந்து எங்களது தெருவிற்குள் வந்துவிடுகிறது.

எங்களது தெருவில் நிறைய பிரியாணி கடைகள் உள்ளன. அவர்கள் பிரியாணி கழிவுகளை மழைநீர் கால்வாயில் கொட்டுவதால் அதிலும் அடைப்பு ஏற்பட்டு, அந்த கழிவுகளுடன் மழை நீர் கலந்து மழை பெய்யும்போது எங்களது தெருவுக்குள் துர்நாற்றம் மிக்க நீர் வந்துவிடுகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பலருக்கு புகார்கள் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. விரைவில், பருவ மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு எங்களது தெருவில் உள்ள பிரச்னையை சரி செய்து தர வேண்டும். எங்களது தெருவில் புதிய சாலை அமைக்கும்போது சற்று உயர்த்தி தந்து முறையான மழைநீர் வடிகால் அமைத்துக் கொடுத்தால் இந்த பிரச்னைக்கு தீர்வு காணலாம்,’’ என்றனர்.

The post மழைநீர் வடிகால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல் appeared first on Dinakaran.

Tags : Madhavaram ,Chennai Municipal Corporation ,73rd Ward, Pulianthoppu Dicaster Road ,Decaster road ,Dinakaran ,
× RELATED மணலி, மாதவரம் மற்றும் தண்டையார்பேட்டை...