×
Saravana Stores

உ.பி.யில் நூற்றுக்கணக்கானோர் பலி பாஜ அரசின் அலட்சியமே காரணம்: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கை: உ.பி. சாமியாரின் சொற்பொழிவு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 121 பேர் உயிரிழந்த கொடுமை நிகழ்ந்துள்ளது மிகுந்த அதிர்ச்சியையும், துயரத்தையும் தருகிறது. ஹத்ராஸ் மாவட்டத்தில் போலே பாபா மடத்தில் நிகழ்வு நடைபெற்ற இடம் மிகவும் சிறியதாக இருந்ததாகவும், அதில் 1 லட்சத்து 25 ஆயிரம் பக்தர்கள் கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டம் முடிந்து பக்தர்கள் வெளியேறியபோது நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளு காரணமாக இத்தகைய உயிரிழப்பு நடந்துள்ளது. இத்தகைய சிறிய இடத்தில் லட்சக்கணக்கில் மக்கள் பங்கேற்பதற்கு காவல்துறை எப்படி அனுமதித்தது என்று தெரியவில்லை . இந்த சோகமான உயிரிழப்புக்கு உத்திரப் பிரதேசத்தை ஆளும் பாஜக அரசின் காவல்துறையின் அலட்சியப்போக்கு தான் காரணமாகும்.

பொது வெளி மைதானத்தில் நடத்தப்பட வேண்டிய நிகழ்வை அரங்கத்திற்குள் நடத்த அனுமதித்ததால் அப்பாவி மக்கள் 121 பேர் பரிதாபமாக பலியாகியிருப்பது நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது. இத்தகைய சொற்பொழிவு நடக்க அனுமதி அளித்த காவல்துறை மீதும் இதை நடத்தியவர்கள் மீதும் தீவிர விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இத்தகைய விபத்துகள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க உரிய முன்னெச்சரிக்கையை காவல்துறை எடுக்க வேண்டும். பலியான 121 பேரின் குடும்பங்களுக்கும், உறவினர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

The post உ.பி.யில் நூற்றுக்கணக்கானோர் பலி பாஜ அரசின் அலட்சியமே காரணம்: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : UP ,BJP govt ,CHENNAI ,Tamil Nadu Congress ,President ,Selvaperunthakai ,U.P. ,Bole Baba Mutt ,Hadhras ,
× RELATED பெண்களுக்கு ஆண் டெய்லர்கள் அளவு...