புதுடெல்லி: இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் பற்றி குடியரசு தலைவர் உரையில் எதுவும் இடம்பெறாதது வேதனை தருவதாக மணிப்பூர் மக்களவை உறுப்பினர் பிமோல் கூறியுள்ளார். பாஜ ஆட்சி செய்யும் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த ஆண்டு மெய்டீஸ், குக்கி, நாகா சமூகத்தினரிடைய நடந்த மோதலில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஓராண்டை கடந்த பிறகும் அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இன்னர் மணிப்பூரில் பாஜ வேட்பாளர் தவ்னோஜாம் பசந்த் குமார் சிங் போட்டியிட்டார். இன்னர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அங்கோம்சா பிமோல் அகோய்ஜாம் 3,74,017 வாக்குகள் பெற்று, 1,09,801 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜவின் தவ்னோஜாம் பசந்த் குமார் சிங்கை தோற்கடித்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மக்களவையில் இன்னர் மணிப்பூர் மக்களவை உறுப்பினர் அங்கோம்சா பிமோல் அகோய்ஜாம் பங்கேற்று பேசினார். அப்போது, “மணிப்பூரில் இனக்கலவரம் ஏற்பட்டு ஒரு வருடத்துக்கு மேலாகிறது. கலவரத்தில் 200 பேர் கொல்லப்பட்டனர். 60,000க்கும் மேற்பட்டோர் வீடற்று அகதிகளாக உள்ளனர். ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டு தங்கள் கிராமத்தை தாங்களே காப்பாற்றுகின்றனர். மாநிலம் முழுவதும் ஆயுதமேந்திய நபர்கள் சுற்றி திரிகின்றனர். உள்நாட்டு போர் போன்ற சூழல் நிலவுகிறது. ஆனால் மணிப்பூர் பற்றி பிரதமர் மோடி இன்னும் எதையும் பேசாமல் மவுனமாக இருக்கிறார். நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஆற்றிய உரையில் கூட மணிப்பூர் கலவரம் பற்றி எந்த குறிப்பும் இடம்பெறாதது வேதனை தருகிறது” என்று தெரிவித்தார்.
The post இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் பற்றி ஜனாதிபதி உரையில் எதுவும் இல்லாதது வேதனை தருகிறது: மணிப்பூர் எம்.பி. ஆதங்கம் appeared first on Dinakaran.