சிற்பமும் சிறப்பும்
ஆலயம்: போக நந்தீஸ்வரர் கோயில், நந்தி கிராமம், சிக்பல்லாபூர், கர்நாடக மாநிலம்.
காலம்: பொ.ஆ.8-ஆம் நூற்றாண்டி லிருந்து – 15-ஆம் நூற்றாண்டு வரை பல்வேறு காலகட்டங்களில் பாணர், ராஷ்ட்ரகூடர், நுளம்பர், கங்கர், சோழர், ஹொய்சாளர், விஜயநகரம் போன்ற பெரும் அரச வம்சத்தினர் தத்தமது பாணிகளில் தம் கலைப்பங்களிப்புகளை
இவ்வாலயத்தில் செய்துள்ளனர்.
இன்றைய திருமண நிகழ்வுகள் ஒளிப்பட ஆல்பங்கள் மற்றும் வீடியோக்களாகப் பதிவு செய்யப்பட்டு ரசிக்கப்படுகின்றன. அவை சில பத்தாண்டுகள் மட்டுமே நீடிக்கக் கூடியவை.
ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு சிற்ப ஆவணம் போல் செதுக்கப்பட்ட இந்த தெய்வீக திருமண நிகழ்வுகள் இன்றும் நீடித்து தேவலோகத் திருமண வைபவங்களைக் கண்முன் நிறுத்துகின்றன.பல தேவர்கள் (2 தலைகளுடன் அக்னி தேவர் காண்க), முனிவர்கள், விருந்தாளிகளாகப் பங்கேற்று ஆசி வழங்கும் காட்சிகள், திருமணத்தை நடத்தும் வேத விற்பன்னர், திருமண நிகழ்வுக்காக மணமகன் அமர்ந்து காத்திருக்கும் தோரணை, `கன்னிகா தானம்’ என சிவன் மற்றும் பார்வதி தேவியின் திருமண நிகழ்வுகள் வரிசைக்கிரமமாக அழகுற வடிவமைக்கப்பட்டு, காண்போருக்கு சிவன் – பார்வதியின் தெய்வீகத் திருமணத்தை நேரில் கண்ட பரவசத்தை உண்டாக்குகிறது.
திருமூர்த்திகள் – படைத்தவர், பராமரிப்பவர், அழிப்பவர் ஆகிய மும்மூர்த்திகள் அவரவர் வாகனங்களில் – பிரம்மா அன்னம் மீதும், விஷ்ணு கருடன் மீதும், சிவன் நந்தி மீதும் – அழகுற அமர்ந்திருக்கின்றனர்.‘கன்னிகா தானம்’ இந்து திருமணங் களில் மணமகளின் பெற்றோருக்கு மிகவும் உணர்ச்சிகரமான மற்றும் மதரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த செயலாகும். பார்வதி தேவியின் பெற்றோர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்யும் இந்நிகழ்வு எழிலுற சித்தரிக்கப்பட்டுள்ளது.
புனித நெருப்பு பார்வதியின் வலப்புறம் எரிவது, நந்தி சிவனின் கையை நக்கும் காட்சி ஆகியவை நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளன.திருமண முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெறும் இவ்வாலயம், இந்திய தொல்லியல் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மது ஜெகதீஷ்
The post சிற்ப வடிவில் சிவன்-பார்வதி திருமண ஆல்பம் appeared first on Dinakaran.