×
Saravana Stores

புதுவையில் 8 எம்எல்ஏக்கள் ரகசிய டெல்லி பயணம்

புதுச்சேரி, ஜூலை 2: புதுச்சேரியில் தேஜ கூட்டணியில் சலசலப்பு நிலவிவரும் நிலையில் பாஜக அதிருப்தி எம்எல்ஏக்கள் 8 பேர் திடீரென டெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர். இதனிடையே சட்டசபையில் உள்ள அறையில் முதல்வர் ரங்கசாமியை சபாநாயகர் செல்வம், பாஜ மாநில தலைவர் செல்வகணபதி எம்பி ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரியில் கடந்த சட்டசபை தேர்தலில் 10 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்ற என்ஆர் காங்கிரஸ், கூட்டணி கட்சியான பாஜ எம்எல்ஏக்கள் 6 பேரின் ஆதரவுடன் ஆட்சி நடத்தி வருகிறது. மேலும் 6 சுயேட்சைகள் வெற்றி பெற்றிருந்த நிலையில், அங்காளன், சிவசங்கர், னிவாஸ் அசோக் ஆகியோர் பாஜகவுக்கு ஆதரவு அளித்தனர்.

இதுதவிர 3 நியமன எம்எல்ஏக்களை பாஜக தன்னிச்சையாக நியமித்தது. இதனால் பாஜகவுக்கு சட்டசபையில் எம்எல்ஏக்களின் பலம் 12 ஆக உயர்ந்தது. இதனிடையே நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் தோல்வியடைந்ததால் தேஜ கூட்டணிக்குள் புகைச்சல் கிளம்பி உள்ளது.

இதனிடையே பாஜக மற்றும் பாஜ ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்கள் 7 பேர் சில தினங்களுக்கு முன்பு கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததோடு, பாஜ அமைச்சர்களை நீக்க வேண்டுமென வலியுறுத்தினர். சுயேட்சை எம்எல்ஏ அங்காளன் பேசிய ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தின. பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏவின் பேச்சால் தேஜ கூட்டணிக்குள் மேலும் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் ரங்கசாமி ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுமா? என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இந்த நிலையில் பாஜக மற்றும் பாஜ ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்கள் 8 பேர் நேற்றிரவு டெல்லி புறப்பட்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன.

ஆடியோ வெளியான விவகாரம் பூதாகரமானதால், டெல்லி பயணம் குறித்து எந்தவித தகவலும் தெரிவிக்காமல் ரகசியமாக 8 எம்எல்ஏக்கள் டெல்லி விரைந்துள்ளனர். கல்யாணசுந்தரம் (காலாப்பட்டு), ஜான்குமார் (காமராஜர் நகர்), விவிலியன் ரிச்சர்ட் (நெல்லித்தோப்பு), பாஜக ஆதரவு சுயேட்சைகள் அங்காளன் (திருபுவனை), சிவசங்கர் (உழவர்கரை), கொல்லப்பள்ளி னிவாஸ் அசோக் (ஏனாம்), நியமன எம்எல்ஏ வெங்கடேசன் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் பாஜ தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து பேச சென்றுள்ள நிலையில், இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இருப்பினும் 2, 3 நாட்கள் முகாமிட்டு நட்டாவை தொடர்ந்து அமித்ஷாவையும் சந்திக்க எம்எல்ஏக்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையே புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை, மாநில பாஜ தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான செல்வகணபதி மற்றும் சபாநாயகர் செல்வம் ஆகியோர் நேற்று மதியம் சட்டசபையில் உள்ள அவரது அறையில் தனியாக சந்தித்து பேசினர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல் நிலவரம் மட்டுமின்றி பாஜக அமைச்சர்கள் மாற்றியமைக்கும் விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசித்ததாக தெரிகிறது.

மேலும் பாஜ அதிருப்தி எம்எல்ஏக்கள் டெல்லி பயணம் குறித்து முதல்வருடன் விவாதித்த 2 பேரும், இப்பிரச்னைக்கு சுமூகமாக தீர்வு காண எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசனை நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றது. இந்த சந்திப்பு தேஜ கூட்டணி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post புதுவையில் 8 எம்எல்ஏக்கள் ரகசிய டெல்லி பயணம் appeared first on Dinakaran.

Tags : Puduvai ,Delhi ,Puducherry ,Teja ,BJP ,Chief Minister ,Rangasamy ,Speaker ,Selvam ,State President ,Selvaganapathy ,
× RELATED புதுவையில் தாமதமாக விண்ணப்பித்த மாணவி கலந்தாய்வில் பங்கேற்கலாம்