- உ.பி அரசு அயோத்தி
- ராம் கோயில்
- யோகி ஆதித்யநாத்
- பாஜக
- உத்திரப்பிரதேசம்
- பிரபு ராம
- அயோத்தி
- ஒழுகும் கோவில்
- உ.பி. அரசு
அயோத்தி: மழையால் ராமர் கோயில் பாதைகள் சேதமடைந்துள்ள நிலையில், பணிகளில் அலட்சியமாக செயல்பட்டதாக 6 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ ஆட்சி செய்து வருகிறது. இங்குள்ள அயோத்தியில் ராமருக்கு பிரம்மாண்ட கோயில் கட்டப்பட்டு கடந்த ஜனவரி 22ம் தேதி பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டு, குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அயோத்தியில் கடந்த சனிக்கிழமை முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. மழை தொடங்கிய முதல்நாளே ராமர் கோயிலின் மேற்கூரையில் தண்ணீர் தேங்கி நின்றது. இதுகுறித்து ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்ய சத்யேந்திர தாஸ், “சனிக்கிழமை நள்ளிரவு பெய்த மழையில் கோயில் மேற்கூரையில் தேங்கிய நீர், ராமர் சிலைக்கு முன் அர்ச்சகர் அமரும் இடத்திலும், மக்கள் தரிசனத்துக்கு வரும் இடத்திலும் கசிந்தது.
கோயில் திறந்து 6 மாதங்களே ஆனநிலையில் ஒருநாள் மழைக்கே மேற்கூரையில் நீர் தேங்குவது சரியல்ல. கோயில் வளாகத்தில் தேங்கும் நீர் வௌியேற முறையான அமைப்புகள் இல்லை” என வேதனையை வௌிப்படுத்தி இருந்தார். இதன் தொடர்ச்சியாக கடந்த 23, 25 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் ராமர் கோயிலுக்கு செல்லும் 14கி.மீ. ராமர் பாதையில் பள்ளங்கள் ஏற்பட்டு குண்டும், குழியுமாக மாறி உள்ளது. மேலும் ராமர் பாதையின் 15 இணைப்பு சாலைகள் மற்றும் பல தெருக்களில் தண்ணீர் தேங்கி கோயிலுக்கு செல்ல முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. சாலையோரம் உள்ள வீடுகளும் வௌ்ளத்தில் மூழ்கி உள்ளன. இந்நிலையில் ராமர் கோயில் தொடர்பான பணிகளில் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி 6 அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, பொதுப்பணித்துறையை சேர்ந்த துருவ் அகர்வால் (செயற்பொறியாளர்), அனுஜ் தேஷ்வால்(உதவி பொறியாளர்), பிரபாத் பாண்டே(இளநிலை பொறியாளர்), உத்தரபிரதேச ஜல் நிகாமை சேர்ந்த ஆனந்த் குமார் துபே(செயற்பொறியாளர்), ராஜேந்திர குமார் யாதவ்(உதவி பொறியாளர்) மற்றும் முகமது ஷாகீத்(இளநிலை பொறியாளர்) ஆகிய 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அகமதாபாத்தை சேர்ந்த புவன் இன்ஃப்ராகாம் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கும் மாநில அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
The post மழையால் உடைந்த சாலைகள்…அயோத்தியில் ஒழுகும்கோயில் 6 அதிகாரிகள் சஸ்பெண்ட்: உபி அரசு உத்தரவு appeared first on Dinakaran.