ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் டோக்கன் அலுவலக வளாகத்தில் நேற்று விசைப்படகு மீனவர் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. செயலாளர் ஜேசுராஜ் தலைமை தாங்கினார். இதில் மீனவர்களின் வாழ்வாதார பிரச்னை குறித்த பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டது. இதில், மீனவர்களின் குடும்பத்தில் ஒரு நபரின் பெயரில் ஒரு படகு மட்டுமே பதிவு செய்திருக்க இருக்க வேண்டும். அதற்கு மேற்பட்ட படகுகள் ஒரே பெயரில் பதிவு செய்திருந்தால், அரசு மானிய டீசல் ரத்து செய்யப்படும். கூடுதல் படகுகளை குடும்பத்தில் உள்ள மற்றவரின் பெயருக்கு மாற்ற அனுமதி இல்லை என மீன்வளத்துறை சார்பில் மீனவர்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு உடனடியாக இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 36 பேரையும், இலங்கை கடற்படை வசம் உள்ள 160 விசைப்படகுகளையும் மீட்டுத்தர ஒன்றிய, மாநில அரசுகள் துரித நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த தீர்மானங்களை வலியுறுத்தி ஜூலை 5ம் தேதி ராமேஸ்வரம் மீன்வளத்துறை டோக்கன் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மீனவர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
The post இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ஜூலை 5ல் ஆர்ப்பாட்டம்: மீனவர் சங்கங்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.