சென்னை: அல்கொய்தா உள்ளிட்ட அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து, கோயம்பேடு பகுதியில் அயனிங் தொழிலாளி போல் பதுங்கி இருந்த பயங்கரவாதியை, மேற்கு வங்க போலீசார் நேற்று கைது செய்தனர். மேற்கு வங்க மாநிலத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக அபிபுல்லா (21) என்பவரை, கடந்த ஆண்டு அம்மாநில போலீசார் கைது செய்தனர். விசாரணையில், பங்களாதேஷ் நாட்டில் இருந்து செயல்படும் மத அடிப்படையிலான இயக்கங்களில் உறுப்பினராகவும், அப்பாவி வாலிபர்களை மூளை செலவு செய்து, தடை செய்யப்பட்ட அல்கொய்தா போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கு அனுப்பியதும், நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
மேலும், கைது செய்யப்பட்ட அபிபுல்லா உடன் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஷேக் அன்வர்(30) என்பவர் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. அபிபுல்லாவை போலீசார் கைது செய்ததும், ஷேக் அன்வர் தலைமறைவானார். அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில், சென்னை கோயம்பேடு பகுதியில் அவர் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே, மேற்கு வங்க போலீசார் நேற்று சென்னை வந்து, சென்னை பெருநகர காவல்துறை உயர் அதிகாரிகள் மூலம் கோயம்பேடு காவல் நிலையத்திற்கு சென்று பயங்கரவாதி ஷேக் அன்வர் புகைப்படத்தை காண்பித்து விவரத்தை தெரிவித்தனர்.
இதையடுத்து, தனிப்படை போலீசார் சாதாரண உடையில் கோயம்பேடு பகுதியில் வடமாநில இளைஞர்கள் தங்கும் இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, விருகம்பாக்கம் டாய்சா அதிகாரிகள் குடியிருப்பு பகுதியில் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் தங்கி, அருகில் உள்ள ஓட்டல் ஒன்றில் ஷேக் அன்வர் ‘அயனிங்’ பணி செய்து வந்தது தெரியவந்தது. அப்போது போலீசார் தன்னை நெருங்கிவிட்டத்தை அறிந்த பயங்கரவாதி ஷேக் அன்வர் அங்கிருந்து தப்பித்து செல்ல முயன்றார். ஆனால் இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமையிலான போலீசார் துப்பாக்கி முனையில் சினிமா காட்சிகள் போல் சுற்றி வலைத்து கைது செய்து, மேற்கு வங்க தனிப்படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர், அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டிரான்சிட் வாரண்ட் பெற்று மேற்கு வங்கம் அழைத்து சென்றனர்.
The post அயனிங் தொழிலாளி போல் சென்னையில் பதுங்கிய பயங்கரவாதி கைது: அல்கொய்தா அமைப்புடன் தொடர்பில் இருந்தவர் appeared first on Dinakaran.