×

ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் விவகாரம்!: அதிமுக மேல்முறையீடு செய்ய ஐகோர்ட் அனுமதி..!!

சென்னை: ஜெயலலிதா இல்லத்தை அரசு கையகப்படுத்தியதை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அதிமுக மேல்முறையீடு செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஜெயலலிதா இல்லத்தை அரசுடைமையாக மாற்றுவது தொடர்பாக முந்தைய அதிமுக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக வேதா நிலையத்தை கையகப்படுத்துவது தொடர்பான உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டு அதற்கான சட்டங்களும் இயற்றப்பட்டன. மேலும் வேதா நிலையத்திற்கு இழப்பீடாக 67 கோடியே 90 லட்சம் ரூபாயும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே வேதா நிலையத்தை கையகப்படுத்தியதை எதிர்த்தும், இழப்பீடு நிர்ணயிப்பை எதிர்த்தும் ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தீபா, தீபக் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி சேஷசாயி, நினைவு இல்லம் அமைப்பது பொது பயன்பாடாக இல்லை என்றும் ஏற்கனவே நினைவிடம் உள்ள நிலையில், நினைவு இல்லம் அமைப்பது அரசு பணத்தை வீண் அடிக்கும் செயல் என்றும் கூறி நடவடிக்கைகள் அனைத்தும் கடந்த 24ம் தேதி ரத்து செய்து தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதிக்கக்கோரி அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவில், உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யக்கோரி மேல்முறையீடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் புகழ்பெற்ற தலைவர்களின் இல்லங்களை நினைவில்லன்களாக மாற்றுவது புதிதல்ல என்றும் உலக தலைவர்களின் இல்லங்கள் நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். வேதா நிலையம் கையகப்படுத்திய உத்தரவை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மாநில அரசு மேல்முறையீடு செய்ய அக்கறை காட்டாததால் அறக்கட்டளை உறுப்பினர் என்ற முறையில் தான் மேல்முறையீடு செய்வதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் பரேஷ் உபாத்தியாய், சக்திகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகி, தமிழக அரசு ஆட்சி மாறியதின் காரணமாக அவர்கள் மேல்முறையீடு தாக்கல் செய்யவில்லை. எனவே தங்களது மேல்முறையீடு மனு தாக்கல் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என வாதிட்டார். இதற்கு தீபா, தீபக் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஜெயலலிதா இல்லம் தொடர்பான வழக்கில் மேல்முறையீடு செய்ய மனுதாரருக்கு எந்த தகுதியும் இல்லை. போயஸ் இல்ல சாவி எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது என்று வாதிடப்பட்டது. தொடர்ந்து இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, அதிமுக-வின் மேல்முறையீடு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. அச்சமயம் மேல்முறையீடு மனு மீதான வாதங்கள் நடைபெறும். …

The post ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் விவகாரம்!: அதிமுக மேல்முறையீடு செய்ய ஐகோர்ட் அனுமதி..!! appeared first on Dinakaran.

Tags : Jayalalithaa ,Boise House ,AIADMK ,Chennai ,Dinakaran ,
× RELATED 2001, 2017ல் நான் முதல்வராயிருக்க முடியும்:...