*ஒவ்வொரு வகுப்பறைக்கும் சென்று கண்காணித்தார்
புதுக்கோட்டை : புதுக்கோட்டை அரசு பள்ளியில் ஒரு நாள் தலைமை ஆசிரியரான மாணவி ஒவ்வொரு வகுப்பறைக்கும் சென்று கண்காணித்தார்.அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்குவதோடு, தனித்திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஒருநாள் தலைமையாசிரியராக 11ம் வகுப்பு மாணவி ஒருவர் பொறுப்பேற்று செயல்பட்டார். அதன் விவரம் வருமாறு:
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியில் மாணவிகளின் படிப்பு மட்டுமல்லாமல் திறமையை ஊக்குவிப்பதற்காகவும், தலைமை பண்பை உருவாக்கும் வகையிலும் அவர்களில் சிறந்த மாணவி ஒருவரை தேர்ந்தெடுத்து அவரை பள்ளியின் தலைமை ஆசிரியையாக ஒருநாள் பணியமர்த்த ஆசிரியர்கள் திட்டமிட்டனர்.
இந்த பள்ளியில் பிளஸ்1 வகுப்பு உயிரியியல் பாடப்பிரிவில் ஆங்கில வழியில் படித்து வரும் மெய்வர்சிதா என்ற மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், இதே பள்ளியில் 6ம் வகுப்பு முதல் படித்து வரும் நிலையில் படிப்பு மற்றும் தனித்திறமையில் சிறந்து விளங்கியதாக அவரை ஆசிரியர்கள் தேர்வு செய்தனர். நேற்றுமுன்தினம் பள்ளியின் ஒரு நாள் தலைமை ஆசிரியராக மாணவி மெய்வர்சிதா பொறுப்பேற்றார்.
பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி, அந்த மாணவியை அழைத்து தனது இருக்கையில் அமர வைத்து வாழ்த்தினார். மேலும் ஆசிரியர், ஆசிரியைகள், சக மாணவிகள் அவரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். தலைமை ஆசிரியை இருக்கையில் அமர்ந்த மாணவி மெய்வர்சிதா, ஆசிரியர்கள், மாணவர்கள் வருகைப்பதிவேடு மற்றும் தலைமை ஆசிரியர் மேற்கொள்ளும் அன்றாட பணிகளையும் பார்வையிட்டார். அதன் பின்னர் ஒவ்வொரு வகுப்பறைகளுக்காக சென்று மாணவர்களையும், ஆசிரியர்களையும் கண்காணிக்கும் பணியிலும் ஈடுபட்டார். அப்போது மாணவிகளின் மத்தியில் உறையாற்றிய போது, ஒரு நாள் தலைமை ஆசிரியையாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். மாணவிகள் அனைவரும் நம்மிடம் உள்ள தனித்திறைமைய வளர்த்து கொள்ள வேண்டும்.
12ம்வகுப்போடு தங்களது கல்வி பயணத்தை முடித்து கொள்ளாமல் கல்லூரிகளுக்கு சென்று பட்டப்படிப்பையும் மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர், நீதிபதி உள்ளிட்ட பணிகளுக்கு வரவேண்டும். வாழ்க்கையில் முன்னேறி சாதிக்க வேண்டும். நீங்களும் ஒரு நாள் தலைமை ஆசிரியராக பணியாற்றக்கூடிய வகையில் திறமையை வளர்க்க வேண்டும் என்றார்.
பள்ளியில் படிக்கும் மாணவிகள் ஒரு நாள் தலைமை ஆசிரியராக நியமிக்கப்படுவதன் மூலம் பள்ளியின் செயல்பாடுகள் மற்றும் பள்ளியில் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளிலும் பங்கு பெறுவதன் மூலம் எதிர்காலத்தில் மாணவிகள் உயர்ந்த பதவிகளுக்கு செல்வதற்கு அடித்தளமாக அமையும். உயர் பதவிகளில் பணிபுரிவதற்கான தலைமை பண்புகளையும் அறிந்து கொள்வதற்கு நல்ல வாய்ப்பாக அமையும் என தலைமை ஆசிரியை தமிழரசி தெரிவித்தார்.
The post புதுக்கோட்டை அரசு பள்ளியில் ஒரு நாள் தலைமை ஆசிரியரான மாணவி appeared first on Dinakaran.