×

ஜோலார்பேட்டை அருகே பரபரப்பு தலைமையாசிரியரை மாற்றக்கோரி மாணவர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

*மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நேரில் விசாரணை

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அருகே தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி அரசு பள்ளி மாணவர்கள் பள்ளியின் முன்பு அமர்ந்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மாவட்ட ெதாடக்க கல்வி அலுவலர் நேரில் விசாரணை நடத்தினார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 165 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியின் தலைமையாசிரியையாக விஜய நந்தினி உள்ளிட்ட 8 ஆசிரியர்கள் பணி புரிகின்றனர்.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவர்கள் திடீரென பள்ளியின் கேட்டை மூடிவிட்டு புத்தகப் பையை ஓரம் வைத்துவிட்டு தாங்கள் எடுத்து வந்த சைக்கிள்களை சாலையிலும் பள்ளியின் எதிரிலும் நிறுத்தி பள்ளியின் நுழைவாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை பள்ளி ஆசிரியர்களும், தலைமை ஆசிரியரும் கண்டுகொள்ளாமல் இருந்தனர். பின்னர் இதுகுறித்து தகவலறிந்து வந்த ஜோலார்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெய் பிரகாஷ், பிடிஓ ராஜேந்திரன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அமுதா, வட்டார கல்வி அலுவலர் மகேஸ்வரி, ஒன்றிய கவுன்சிலர் கலா ஆஞ்சி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, மாணவர்கள் தலைமையாசிரியை சரியாக பள்ளிக்கு வருவதில்லை. வாரத்தில் ஒருநாள் மட்டுமே வருகிறார். ஆசிரியர்களை கண்டித்து வருகிறார். அவரை மாற்ற வேண்டும் என தலைமையாசிரியை விஜய நந்தினி மீது அடுக்கடுக்காக புகார் தெரிவித்தனர். இதனை அடுத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து வகுப்பறைக்கு சென்றனர்.

அப்போது மாணவர்களுக்கு துறை அதிகாரிகள் இதுபோன்ற செயலில் ஈடுபடுவது தவறான செயலாகும் என அறிவுரை வழங்கினர்.இதனையடுத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அமுதா சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியையிடம் விசாரணை நடத்தினார். அப்போது, பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை சரிவர இல்லாத நிலையில் ஒரு ஆசிரியரை இடம் மாற்றம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் தலைமை ஆசிரியருக்கு தெரியாமல் மற்ற ஆசிரியர்கள் மாணவர்கள் சேர்க்கை அதிகம் உள்ளது போல எமிஸ் நம்பர் போட்டு உள்ளனர். கிட்டத்தட்ட 8 மாணவர்களை கூடுதலாக காட்டிய நிலையில் இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை கேட்டதாகவும், பள்ளியில் அடிக்கடி தூங்கும் ஆசிரியரை கண்டித்ததாகவும், இதனால் காழ்புணர்ச்சியின் காரணமாக ஆசிரியர்களின் தூண்டுதலின் பேரில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனையடுத்து ஆசிரியர்களிடமும், ஊர்கவுண்டர், ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட மாணவர்களின் பெற்றோரிடமும் விசாரணை மேற்கொண்ட தொடக்க கல்வி அதிகாரி, இதுகுறித்து கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். பள்ளியின் தலைமையாசிரியை மாற்றக்கோரி மாணவர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ஜோலார்பேட்டை அருகே பரபரப்பு தலைமையாசிரியரை மாற்றக்கோரி மாணவர்கள் திடீர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Jollarpet ,District Elementary Education Officer ,District Education Officer ,
× RELATED திருப்பத்தூர் அருகே கணவரின் தகாத...