×

குஜராத், பீகார் மாநில போலீசாரிடமிருந்து நீட் முறைகேடு ஆதாரங்களை பெற்றது சிபிஐ: மகாராஷ்டிராவில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது

புதுடெல்லி: குஜராத், பீகார் போலீசாரிடமிருந்து நீட் முறைகேடு தொடர்பான ஆதாரங்களை பெற்றுக் கொண்ட சிபிஐ, ஏற்கனவே கைதானவர்களை டெல்லி அழைத்துச் சென்று தீவிரமாக விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கிடையே மகாராஷ்டிராவில் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கைதாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீட் நுழைத்தேர்வு வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பான நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்த நிலையில், மாணவர்களின் எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது. அதைத் தொடர்ந்து, சிபிஐ வழக்கு பதிவு செய்து முதற்கட்டமாக பீகார், குஜராத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணையை தொடங்கி உள்ளது. இதற்காக டெல்லியிலிருந்து சிபிஐ தனிப்படையினர் குஜராத்தின் பாஞ்ச்மஹால் மாவட்டம் கோத்ராவுக்கும், பீகாரின் பாட்னாவுக்கும் நேற்று சென்றடைந்தனர்.

அம்மாநில போலீசாரை சந்தித்த சிபிஐ குழுவினர், நீட் முறைகேடு தொடர்பாக இதுவரை திரட்டப்பட்ட தகவல்களையும், ஆதாரங்களையும் பெற்றுள்ளனர். கோத்ராவில் 27 மாணவர்களிடம் தலா ரூ.10 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக மாவட்ட கல்வி அதிகாரி, பள்ளி தாளாளர், இடைத்தரகர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாட்னாவில் தேர்வுக்கு முன்பாக வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக பீகார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 18 பேரை கைது செய்துள்ளனர். இவ்வாறு கைதானவர்களை நீதிமன்ற அனுமதியுடன் டெல்லி அழைத்துச் சென்று தீவிரமாக விசாரணை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தனிப்படையினர் செய்து வருகின்றனர். இந்த வழக்கில் சிபிஐக்கு வேண்டிய உதவிகள் செய்ய தயாராக இருப்பதாக உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

தற்போது குஜராத், பீகாரில் தலா ஒரு வழக்கையும், ராஜஸ்தானில் 3 நீட் முறைகேடு வழக்குகளையும் சிபிஐ தனது வசம் எடுத்து விசாரிப்பதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். ராஜஸ்தானின் கோட்டாவில் உள்ள பல்வேறு நீட் பயிற்சி மையங்களில்தான் நாடு முழுவதிலும் இருந்து வந்து மாணவர்கள் படித்து வருகின்றனர். இதனால் ராஜஸ்தானில் முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சிபிஐ விசாரணை வேகமெடுக்கத் தொடங்கி உள்ள அதேவேளையில், மகாராஷ்டிராவில் நேற்று தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் நீட் விவகாரத்தில் 4 பேர் கொண்ட மோசடி கும்பல் மீது வழக்கு பதிவு செய்து, பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவரை கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து போலீசார் கூறுகையில், ‘‘லத்தூரை சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து பள்ளி ஆசிரியர்கள் துக்காராம் ஜாதவ், ஜலில் கான் உமர் கான் பதான் மற்றும் நான்டெட்டைச் சேர்ந்த ஒருவர், டெல்லியை சேர்ந்த ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தலைமை ஆசிரியரான பதான் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர்கள் தலைமறைவாக உள்ளனர். பதான், தனியாக நீட் பயிற்சி மையத்தையும் நடத்தி வந்தார். அவருக்கு மொபைல் மூலமாக நீட் தேர்வு குறித்த ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் மாணவர்களை அணுகி பேரம் பேசி உள்ளனர்’’ என்றனர். இந்த 4 பேர் மீதும் புதிதாக அமல்படுத்தப்பட்ட பொதுத்தேர்வுகள் முறைகேடுகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மிகப்பெரிய மோசடி கும்பல் சம்மந்தப்பட்டிருப்பதாக சிவசேனா உத்தவ் அணி எம்பி அனில் தேசாய் குற்றம்சாட்டிய நிலையில், மகாராஷ்டிரா வழக்கையும் சிபிஐ வசம் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்கள் போராட்டம், சிபிஐ விசாரணைக்கு நடுவே அடுத்தடுத்து பல மாநிலங்களிலும் நீட் முறைகேடு விவகாரங்கள் அம்பலமாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

* நீட் தேர்வை ரத்து செய்ய மோடிக்கு மம்தா கடிதம்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு நேற்று எழுதிய கடிதத்தில், ‘‘நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், இதுபோன்ற தேர்வுகளை மாநில அரசுகளே நடத்திய முந்தைய நடைமுறையை மீண்டும் கொண்டு வருவதில் உடனடியாக நடவடிக்கை எடுத்து கவனிக்க வேண்டுமென மிகவும் அழுத்தமாக வலியுறுத்துகிறேன். இதன் மூலம் தேர்வு நடைமுறை மீது நம்பிக்கை மீண்டும் உருவாகும். நீட் தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை பாய வேண்டும்’’ என வலியுறுத்தி உள்ளார்.

* தமிழகத்தை தொடர்ந்து முழு நாடே எதிர்க்கிறது
நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பி கனிமொழி நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஒன்றிய அரசு நடத்தும் தேர்வுகளின் நம்பகத்தன்மை குறித்து தற்போது சந்தேகம் எழுந்துள்ளது. ‘நீட் எங்களுக்கு வேண்டாம்’ என ஆரம்பத்தில் இருந்தே தமிழ்நாடு அரசு கூறி வந்தது. எங்களுக்கு விலக்கு வேண்டுமென தமிழ்நாடு மாணவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இப்போது நாடு முழுவதும் அது எதிரொலிக்கிறது. நீண்ட காலத்திற்குப் பிறகு இப்போதே நாடே நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுக்கிறது’’ என்றார். நீட் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் கடுமையாக குரல் எழுப்புவோம் என பல எம்பிக்கள் உறுதி அளித்துள்ளனர்.

* நாடாளுமன்றம் நோக்கி மாணவர்கள் பேரணி
18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கிய நிலையில், நீட் முறைகேடு மற்றும் நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து, காங்கிரசின் தேசிய மாணவர்கள் அமைப்பினர் நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்றனர். ஜந்தர் மந்தரில் இருந்து பேரணி செல்ல முயன்ற அவர்களை அங்கு தடுப்புகள் அமைத்திருந்த போலீசாரும், துணை ராணுவ படையினரும் தடுத்து நிறுத்தினர். தடுப்பை மீறி முன்னேற முயன்ற 20க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் ஜந்தர்மந்தரில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

* நீட் தொடர்பாக மோடி பேசியிருக்க வேண்டும்
நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியின் பேச்சு குறித்து தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா தனது எக்ஸ் தள பதிவில், ‘‘எதிர்க்கட்சிகளை தாக்குவது பிரதமரின் தனிச்சிறப்பு. சமீபத்திய தேர்தல் முடிவுகளால் யதார்த்தத்தை பாஜ புரிந்து கொள்ளும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும், பல மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ள நீட் ஊழல் பிரச்னை குறித்து பிரதமர் மோடி பேசியிருக்க வேண்டும்’’ என கூறி உள்ளார். இதற்கிடையே, நீட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பான நேர்முகத் தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை தலைவர் பி.கே.ஜோஷி மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

* ஏஐ தொழில்நுட்ப சிசிடிவி கேமரா யுபிஎஸ்சி திட்டம்
நீட், நெட் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் சர்ச்சைகளுக்கு மத்தியில், ஒன்றிய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) தனது தேர்வு மையங்களில் முக அங்கீகாரம் மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சிசிடிவி கேமராக்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக, ஆதார் அடிப்படையில் கைரேகைகளை பரிசோதிக்கும் கருவிகள், ஏஐ சிசிடிவி கேமராக்களை வாங்கவும் பொதுத்துறை நிறுவனங்களை அணுகி உள்ளதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.

* என்டிஏவுக்கு நோட்டீஸ்
நீட் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை தொடர்ந்து பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்களிலும் வழக்குகள் நடந்து வருகின்றன. இதில், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில், கடந்த மே 5ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மறுதேர்வு நடத்த வேண்டுமென்ற வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி அசோக் குமார் ஜெயின் தலைமையிலான அமர்வு, இதுதொடர்பாக பதிலளிக்க ஒன்றிய அரசு, தேசிய தேர்வு முகமைக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணையை வரும் ஜூலை 10ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

The post குஜராத், பீகார் மாநில போலீசாரிடமிருந்து நீட் முறைகேடு ஆதாரங்களை பெற்றது சிபிஐ: மகாராஷ்டிராவில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது appeared first on Dinakaran.

Tags : CBI ,Gujarat, Bihar ,Maharashtra ,New Delhi ,Gujarat ,Bihar ,Delhi ,Gujarat, ,
× RELATED பில்டிங் காண்ட்ராக்டர் வீட்டில் சிபிஐ சோதனை