- ஒடிசா
- மீ.
- பி. மஹ்தாப்
- இந்தியா கூட்டணி
- புது தில்லி
- சபாநாயகர்
- சட்டசபை
- மோடி
- 18 வது லோக்சபா தேர்தல்
- தேசிய ஜனநாயக கூட்டணி
- என்.டி.பி
- பஹாசா
- எம். பி. மஹ்தாப்
புதுடெல்லி: மக்களவையின் தற்காலிக சபாநாயகராக ஒடிசாவைச் சேர்ந்த எம்.பி. மஹ்தாப் பதவியேற்றுக் கொண்டார். தற்காலிக சபாநாயகர் முதலில் பிரதமர் மோடிக்கு எம்.பி.யாக பதவிப் பிரமாணம் செய்துவைப்பார். நடந்து முடிந்த 18வது மக்களவை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களைக் கைப்பற்றி ஒன்றியத்தில் 3வது முறையாக ஆட்சி அமைத்தது. தனிப்பெரும்பான்மைக்கு 272 எம்பிக்கள் தேவை என்ற நிலையில், பாஜவுக்கு இம்முறை 240 எம்பிக்கள் உள்ளனர். 234 எம்பிக்களுடன் இந்தியா கூட்டணி பலமான எதிர்க்கட்சிகளின் கூட்டணியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் 99 எம்பிக்களுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.இந்நிலையில், 18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கி வரும் ஜூலை 3ம் தேதி வரை நடக்க உள்ளது. மாநிலங்களவை வரும் 27ம் தேதி தொடங்கி ஜூலை 3ம் தேதி வரை நடக்கும். மக்களவையில் பிரதமர் மோடி, அவரது அமைச்சர்கள் உட்பட 280 புதிய எம்பிக்கள் இன்றும், மீதமுள்ள 264 எம்பிக்கள் நாளையும் பதவியேற்க உள்ளனர்.காலை 11 மணிக்கு கூட்டத்தொடர் தொடங்கியதும், முதல் நபராக பிரதமர் மோடி பொறுப்பேற்பார்.
இதில், திமுக கூட்டணியின் 40 எம்பிக்களும் நாளை பகல் 1 மணி முதல் 3 மணி வரை பதவியேற்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து நாளை மறுதினம் சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார். வரும் 27ம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி முர்மு உரையாற்ற உள்ளார். அதைத் தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், பிரதமரின் பதில் உரையும் ஜூலை 3ம் தேதி வரை நடக்கும். கடந்த 2 ஆட்சியிலும் பாஜ தனிப்பெரும்பான்மையுடன் இருந்த நிலையில் இம்முறை எதிர்க்கட்சிகள் கூடுதல் பலம் பெற்றிருப்பதால் அரசுக்கு கடும் சவாலுடனே மக்களவை தொடங்குகிறது.
இந்த நிலையில், மக்களவையின் தற்காலிக சபாநாயகராக ஒடிசாவைச் சேர்ந்த எம்.பி. மஹ்தாப் பதவியேற்றுக்கொண்டார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, தற்காலிக சபாநாயகருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பிஜு ஜனதா தளம் கட்சியில் இருந்த மஹ்தாப், அண்மையில் பா.ஜ.க.வில் சேர்ந்து தேர்தலில் வெற்றிபெற்றார். தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு விழாவில் துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதனிடையே மரபுகளை மீறி தற்காலிக சபாநாயகர் நியமிக்கப்பட்டதாக இண்டியா கூட்டணி குற்றம் சாட்டி வருகிறது. 8 முறை எம்.பி.யாக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் கொடுக்குன்னில் சுரேஷ்க்கு பதிலாக 7 முறை எம்.பி.யாக இருக்கும் பர்துஹரியை இப்பதவிக்கு நியமனம் செய்தததை கண்டித்து பதவியேற்பு விழாவை இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் புறக்கணித்தனர். பாஜக அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கையை கண்டித்து பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் குழுவில் இருந்து இண்டியா கூட்டணி விலகி உள்ளது.
The post மக்களவையின் தற்காலிக சபாநாயகராக ஒடிசா எம்.பி. மஹ்தாப் பதவியேற்பு : விழாவை புறக்கணித்த இண்டியா கூட்டணி எம்.பி.க்கள்!! appeared first on Dinakaran.