- இடைநிலைத் தேர்தல்கள்
- உத்திரப்பிரதேசம்
- லக்னோ
- யூனியன் பாங்க் ஆப்
- பாஜா
- யோகி ஆதித்யநாத்
- மக்களவைத் தேர்தல்
- சமாஜ்வாடி
- இந்தியா கூட்டணி
- காங்கிரஸ்
லக்னோ: உபியில் தற்போது யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜ ஆட்சி செய்து வருகிறது. அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் உத்தரபிரதேசத்தின் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாடி 37 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தன. மாநிலத்தில் ஆளும் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெறும் 33 இடங்களை மட்டுமே பிடித்து படுதோல்வியடைந்தது.
இந்த தேர்தலில் கன்னோஜ் தொகுதியில் போட்டியிட்ட சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மெயின்புரி மாவட்டம் கர்ஹால் தொகுதி பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதேபோல் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 9 சமாஜ்வாடி உறுப்பினர்களின் பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. அத்துடன் கான்பூரின் சிசாமா தொகுதி பேரவை உறுப்பினர் இர்ஃபான் சோலங்கிக்கு குற்ற வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து சிசாமா தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதுகுறித்து உத்தரபிரதேச சட்டப்பேரவை செயலர் பிரஜ்பூஷன் துபே செய்தியாளர்களிடம் கூறியதாவது, “10 தொகுதிகள் காலியானது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளோம். இந்த தொகுதிகளில் நடைமுறைப்படி 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்” என்றார். தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் இந்த இடைத்தேர்தலிலும் சமாஜ்வாடி, காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிட உள்ளன. இதனால் இந்தியா கூட்டணிக்கும், பாஜ கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
The post உத்தரபிரதேசத்தில் 10 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் appeared first on Dinakaran.