புதுடெல்லி: பருவமழையின் போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை சமாளிப்பதற்கான தயார்நிலை குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உயர் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக் காலத்தில் பீகார், அசாம் மற்றும் பிற கிழக்கு மாநிலங்களில் ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கமாக உள்ளது. உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் நிலச்சரிவு உள்ளிட்ட மழை தொடர்பான பிரச்னைகள் ஏற்படுகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு, கேரளா, காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் பருமழைக் காலத்தில் ஏற்படும் வெள்ளப் பெருக்கை சமாளிப்பதற்கான தயார்நிலை குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், ஒன்றிய ஜல் சக்தி அமைச்சர் சி.ஆர்.பாட்டீல், உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், உள்துறை அமைச்சகங்கள் மற்றும் உள்துறை, நீர்வளம், நதி மேம்பாடு, புவி அறிவியல், சுற்றுச்சூழல், சாலை போக்குவரத்து, ரயில்வே வாரியத் தலைவர், தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், வெள்ள தடுப்பு மற்றும் சமாளிப்பதற்கான தயார் நிலை பணிகள் குறித்து தகவல்களை கேட்டறிந்த அமித்ஷா, வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளத்தை தடுக்க மழைநீரை பிரம்மபுத்ரா நதி நோக்கி திருப்புவதற்காக குறைந்தபட்சம் 50 குளங்களை வெட்டவும், இஸ்ரோவின் சேட்டிலைட் புகைப்பட தகவல்களை பயன்படுத்தி வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ளவும் ஆலோசனைகள் வழங்கியதாக அதிகாரிகள் கூறி உள்ளனர். தற்போது அசாமில் பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
The post நாடு முழுவதும் வெள்ள தடுப்பு பணிகள் குறித்து அமித்ஷா ஆய்வு appeared first on Dinakaran.