×

வணிக நிறுவனங்களில் குப்பை எடுக்க பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை மேயர் மகேஷ் எச்சரிக்கை

நாகர்கோவில், ஜூன் 22: நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள் குப்பைகள் அகற்ற பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் மேயர் தெரிவித்தார். நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் தேங்கும் குப்பைகள் தனியார் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனத்திற்கு அதற்குண்டான பணத்தை மாநகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது. இதனை மாநகர் நல அதிகாரி தலைமையிலான சுகாதார அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர். மேலும் குப்பைகளை அகற்றும் பணிகளை தூய்மைபணி மேற்பார்வையாளர்கள் தலைமையில் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகரப் பகுதியில் வணிக நிறுவனங்களில் குப்பை அகற்றும் போது பணம் வாங்குவதாக நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணாவிற்கும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

மேலும் குப்பைகள் எடுத்துச் செல்லும் போது வாகனங்களில் முறையாக குப்பைகளை மூடுவதில்லை எனவும் புகார்கள் வந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், தூய்மைபணி மேற்பார்வையாளர்கள், வீடுகள் தோறும் குப்பைகளை பிரித்து வழங்க அறிவுறுத்தும் பரப்புரையாளர்கள் ஆகியோருடன் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆலோசனை நடத்தினார். ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகர் நல அதிகாரி டாக்டர் ராம்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் மேயர் மகேஷ் கூறியதாவது: நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்களில் குப்பைகள் தரம் பிரித்து பெறப்பட்டு வருகிறது. வணிக நிறுவனங்களில் குப்பைகள் வாங்கும்போது பணம் பெறுவதாக புகார்கள் வந்தது. பணம் வாங்குவது உறுதி செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சுகாதார அதிகாரிகள் கூறுவதை தூய்மைபணி மேற்பார்வையாளர்கள் கேட்க வேண்டும். இது தொடர்பாகவும் புகார்கள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

The post வணிக நிறுவனங்களில் குப்பை எடுக்க பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை மேயர் மகேஷ் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mayor Mahesh ,Nagercoil ,Mayor ,Nagercoil Corporation ,Nagercoil Municipal Corporation ,Dinakaran ,
× RELATED பொதுவிநியோக திட்ட குறைதீர்க்கும்...