×

கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா? : பெண்கள் குறித்த சர்ச்சைக் கேள்வி பிரச்சினையில் சிபிஎஸ்இக்கு ஓபிஎஸ் கண்டனம்

சென்னை : ‘பெண்களை இழிவுபடுத்தும் கேள்வி தொடர்பாக சிபிஎஸ்இ கல்வி வாரியம் தீர விசாரணை நடத்தி தவறு இழைத்தோர் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு, இதுபோன்ற தவறுகள் இனி வருங்காலங்களில் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘பெண்கள் முன்னேற்றத்துக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சட்டங்களை இயற்றியதன் விளைவாக, பெண்கள் பல துறைகளில் சிறந்து விளங்குவதோடு நாட்டையும் ஆளுகின்ற நிலைக்கு முன்னேறியிருக்கிறார்கள்.2020 ஆம் ஆண்டு நடைபெற்ற சரவதே பாரதி விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரதமர், மகாகவி பாரதியாரின் தொலைநோக்கு பார்வைகளில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது மிக முக்கியமானது என்றும், பெண்கள் தலைநிமிர்ந்து நடக்க வேண்டும் என்ற மகாகவியின் வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு மகளிரை கவுரவிக்கும் நடவடிக்கைகளை, பெண்ணுரிமைக்கு முக்கியத்துவம் தரும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாகவும், முப்படைகளில் பெண்களின் பங்கு முக்கியத்துவம் பெற்றிருப்பதாகவும் முத்ரா யோஜனா திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களின் மூலம் 15 கோடி மகளிர் தொழில் முனைவோர்களுக்கு நிதி அளிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்தமிழகத்திலும் தொட்டில் குழந்தைத் திட்டம், பெண் பாதுகாப்பு திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையம், மகளிர் கமாண்டோ படை என பல திட்டங்களை பெண்களுக்காக அளித்து அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்பட அனைத்து மாநில அரசுகளும் பெண்களின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.இந்த சூழ்நிலையில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் நடத்தப்படும் 10ஆம் வகுப்பு முதலாம் பருவத் தேர்வுக்கான ஆங்கில வினாத்தாளில் பெண் விடுதலைக்கு எதிரான சொற்றொடர்கள் இடம்பெற்று இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.அதாவது குழந்தைகளிடையே ஒழுக்கமின்மை நிலவுவதற்கும், சமூகப் பிரச்சனைகளுக்கும் பெண் விடுதலைதான் காரணம் என்பது போன்ற வாக்கியங்கள் அந்த வினாத்தாளில் இடம் பெற்றிருந்ததாகவும் அதற்கு விடைகளாக எழுத்தாளர் ஓர் ஆண் பேரினவாத நபர், மற்றும் எழுத்தாளர் வாழ்க்கையை லகுவாக அணுகுகிறார் என இரண்டு விடைகள் கொடுக்கப்பட்டு இருந்ததாகவும், இதில் ஒன்றைத் தெரிவு செய்யுமாறு மாணவ, மாணவியர் கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.இந்தக் கேள்வி பெண் விடுதலையை அவமதிப்பதோடு, பெண் விடுதலைக்காக பாடுபட்டவர்களை, பாடுபட்டுக் கொண்டிருப்பவர்களை இழிவுபடுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. பாரதி கண்ட கனவை நசுக்கும் இந்த செயல் கடும் கண்டனத்துக்குரியது.பெண்ணுக்கு எதிரான இத்தகைய கருத்துகள் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, மத்திய, மாநில அரசாங்கங்களின் கொள்கைகளுக்கு எதிராகவும் அமைந்துள்ளது. இது மட்டுமல்லாமல் படிக்கின்ற மாணவ, மாணவிகளிடையேயும் ஒருவிதமான குழப்பதையும், பேதத்தையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.தற்போது அந்த வினா நீக்கப்பட்டு, அந்த வினாவிற்கான முழு மதிப்பெண் அனைவருக்கும் வழங்கப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்து இருக்கிறது. இது கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பதைப் போல் உள்ளது.தேர்வுக்கான வினாத்தாள்களை தயார் செய்வதற்கு முன்பு சமுதாயத்திற்கு எதிரான கருத்துகள், சர்ச்சைக்குரிய கருத்துகள், கலவரத்தை தூண்டும் வகையிலான கருத்துகள் இடம் பெறுவது தவிர்க்கப்பட வேண்டும் என்ற அறிவுரையை வினாத்தாள் தயாரிப்பவர்களுக்கு வழங்க வேண்டிய கடமையும் அதற்கேற்பா வினாத்தாள் தயாரிக்கபட்டு இருக்கின்றனவா என்பதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பும் சிபிஎஸ்இக்கு இருக்கிறது.எனவே இது குறித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தீர விசாரணை நடத்தி தவறு இழைத்தோர் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு, இதுபோன்ற தவறுகள் இனி வருங்காலங்களில் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்….

The post கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா? : பெண்கள் குறித்த சர்ச்சைக் கேள்வி பிரச்சினையில் சிபிஎஸ்இக்கு ஓபிஎஸ் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : OPS ,CPSE ,Chennai ,CBSE Education Board ,
× RELATED ஒரிஜினலை ரவுண்டு கட்டும் டூப்ளிக்கேட்டுகள்: ‘OPS’களின் அட்ராசிட்டி