புதுடெல்லி: நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்தும், மாணவர்களுக்கு நீதி கோரியும் நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு விண்ணப்பதாரர்களில் சிலருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கியது, நீட் வினாத்தாள் கசிவு போன்ற விவகாரங்கள் தொடர்பாக பீகார், குஜராத், அரியானாவில் நடத்தப்பட்ட விசாரணையில் பலர் கைது செய்யப்பட்டனர். நீட் தேர்வில் திட்டமிட்டு முறைகேடு செய்யப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளதாகவும், பாஜக ஆளும் மாநிலங்களில் நடைபெறும் முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. உச்ச நீதிமன்றமும் இந்த குற்றச்சாட்டுகளின் தீவிரத்தை உணர்ந்து இத்தகைய அலட்சியங்களை சகித்துக் கொள்ள முடியாது என்று கண்டித்துள்ளது.
நீட் தேர்வில் நடைபெற்றுள்ள மாபெரும் ஊழல் மற்றும் முறைகேடுகளை கண்டித்தும், இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசின் செயலற்ற தன்மை மற்றும் தொடர் மவுனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாணவர்களுக்கு நீதி கோரியும் மாநில தலைமையகங்களில் இன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாபெரும் போராட்டம் நடந்தது. அதில், முக்கிய தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். டெல்லியில் பாஜக அலுவலகம் முன்பும், ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பும் ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன.
The post மாணவர்களுக்கு நீதி கோரி நீட் முறைகேட்டை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.