தாம்பரம்: பல்லாவரம் முதல் செங்கல்பட்டு வரை ஜிஎஸ்டி சாலையில் தினமும் காலை முதல் இரவு வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகள் மற்றும் வேலைகளுக்கு செல்லும் பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகப்படியான போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். அதேபோல, பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் இரவு நேரங்களில் சென்னையில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் முன்னிலையில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில், கடந்த 13ம் தேதி கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் உள்ள கூட்டரங்கில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஜிஎஸ்டி சாலையில் உள்ள சிக்னல்களை மாற்றி அமைப்பது, போக்குவரத்தில் மாற்றம் செய்வது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து, நெடுஞ்சாலை துறை சார்பில் ஜிஎஸ்டி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டு வருகிறது. இரும்புலியூர் மேம்பாலம் பகுதி முதல் பல்லாவரம் பகுதி வரை ஜிஎஸ்டி சாலையில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு, ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளில் அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சிறு வியாபாரிகள் கூறுகையில், ‘‘பெரிய வியாபாரிகளின் கடைகள், பிரபல நகை கடைகள் போன்றவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றாமல் முன்கூட்டியே அவர்களுக்கு தகவல் தெரிவித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற சொல்லி பின்னர் பெயருக்கு சம்பந்தப்பட்ட கடைகளின் விளம்பர பேனர்கள் மற்றும் கடையின் முன் பகுதியில் உள்ள ஸ்லாப் ஆகியவற்றில் சிறிய அளவில் சேதும் ஏற்படுத்தி அவற்றை அகற்றுவது போல் அதிகாரிகள் பெயரளவுக்கு நடந்து கொள்கின்றனர்.
ஆனால், சாலையோரங்களில் தள்ளுவண்டி கடைகள் மற்றும் பங்க் கடைகள் வைத்து, அதன் மூலம் வரும் வருமானத்தில் பிழைப்பு நடத்தும் ஏழை எளிய வியாபாரிகளுக்கு எந்த ஒரு தகவலும் முன்னெச்சரிக்கையும் தெரிவிக்காமல் ஆக்கிரமிப்புகள் அகற்றுகின்றோம் என்ற பெயரில் பொக்லைன் இயந்திரங்களை கொண்டு வந்து அடித்து, உடைத்து நொறுக்கி அந்த பொருட்களை லாரிகளில் ஏற்றிக்கொண்டு செல்கின்றனர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து எப்படி பெரிய வணிக வளாகங்கள், நகைக்கடைகளுக்கு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முன்கூட்டியே தகவல் தெரிவித்தார்களோ, அதுபோல சிறு வியாபாரிகளுக்கும் தெரிவித்து இருந்தால் அவர்களும் அவர்களது கடைகளை அப்புறப்படுத்தி இருப்பார்கள். ஆனால், அவ்வாறு செய்யாமல் அராஜக செயலில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபடுகின்றனர்,’’ என்றனர்.
பொதுமக்கள் கூறுகையில், ‘‘சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது நல்லது தான். சில இடங்களில் அதிகாரிகள் செல்ல சில மணி நேரத்தில் மீண்டும் அந்த இடம் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் நடத்தப்படுகிறது. எனவே, தொடர்ந்து ஆக்கிரமிப்பு கடைகள் துளிர்க்காத வண்ணம் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகள் பெருகும் வரை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, பிறகு நடவடிக்கை எடுக்காமல், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.
The post ஜிஎஸ்டி சாலையில் நெரிசலை தவிர்க்க ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.